• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடா கிராமத்து வதனம் பெண்களுக்கான அமைப்பு நடத்திய நவராத்திரி விழா

கனடா

சென்ற ஞாயிற்றுக் கிழமை 5-11-2023 கனடா எத்தோபிக்கோ நகரத்தில் இயங்கும் ‘கிராமத்துவதனம் ஒன்ராறியோ தமிழ் பெண்கள் பண்பாட்டு மையம்’ என்ற தமிழ் குடும்ப அமைப்பினரால் அல்பியன் வீதியில் உள்ள திஸ்ரில் நகர மண்டபத்தில் நவராத்திரி விழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வந்து இப்பகுதியில் வசிக்கும் தமிழ் பெற்றோர்களும், கனடாவில் பிறந்து வளர்ந்த அவர்களின் பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் ஒன்று சேர்ந்து இந்த விழாவில் மிகவும் ஆர்வத்தோடு பங்கு பற்றியிருந்தார்கள்.
மங்கள விளக்கேற்றலுடன் சுமார் 4:00 மணியளவில் விழா நிகழ்ச்சிகள்  ஆரம்பமாகின. அதைத் தொடர்ந்து அர்ச்சயா மோகன்குமார், அப்சரா சயந்தன் ஆகியோரால் சகலகலாவல்லி மாலை பாடப்பொற்று, நவராத்திரி பூசை சிறப்பாக இடம் பெற்றது. தொடர்ந்து அர்ச்சயா மோகன்குமார், அக்சிதா பிரபாகரன், அதிஸா பிரபாகரன், அஸ்மிதா மாலரவன் ஆகியோரால் கனடா தேசியப்பண், தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பெற்றது. 

அகவணக்கத்தை அடுத்து வரவேற்புரை சிந்துஜா சங்கர் அவர்களால் நிகழ்த்தப்பெற்றது. வரவேற்பு நடனத்தைத் தொடர்ந்து தலைவரும் ஒருங்கமைப்பாளருமான  கமலவதனா சுந்தரலிங்கம் அவர்களின் உரை இடம் பெற்றது. பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட ரொறன்ரோ கல்விச்சபை ஆசிரியரும் பிரபல எழுத்தாளருமான குரு அரவிந்தன் ‘பிள்ளைகளின் வளர்ப்பில் பெற்றோரின் முக்கிய கடமைகள்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
எங்களுடைய தமிழ் மொழியை மட்டுமல்ல, எமது பாரம்பரியம், பண்பாடு கலாச்சாரம் போன்றவற்றையும் இளைய தலைமுறையினர் புரிந்து கொள்ளத் தக்கவகையில் நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்தன. உதயன் பத்திரிகை பிரதம ஆசிரியர் ஆர். என், லோகேந்திரலிங்கம் அவர்களின் சிறப்புரையைத் தொடர்ந்து தமிழில் மெல்லிசைப் பாடல்கள், கதம்ப நிகழ்ச்சி, காவடியாட்டம், பட்டிமன்றம், வயலின் இசை, கிற்றார் இசை, சிறுமிகள் நடனம், சிறுவர்களுக்கான பேச்சு, மாணவர் உரை, தேவாரம், சுலோகம், சக்தி நடனம் போன்ற பல பயனுள்ள நிகழ்வுகள் சிறுவர், சிறுமிகளின் பங்களிப்போடு இடம் பெற்றன. நிகழ்வுகளில் பங்கு பற்றிய மாணவர்கள் சான்றிதழ்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர்.
உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் அங்கு உரையாற்றுகையில்
"கிராமத்து வதனம் அமைப்பு நடத்துகின்ற நவராத்திரி விழா  ஒரு சமயம் சார்ந்த விழாவாகவு சக்தி வழிபாட்டை எடுத்துக்காட்டுகின்றதாக இருந்தாலும் அதில் இளைஞர் யுவதிகள் மற்றும் சிறுவர் சிறுமிகளை இணைத்து கலை நிகழ்ச்சிகளை இயல் இசை நாடகம் சார்ந்த விடயங்களை உள்ளடக்கி நடத்துவது என்பது மொழி சார்ந்த எதிர்காலத்திற்கான திட்டமிடல் ஆகும். அவற்றின் மூலம் எமது பண்பாட்டையும் தமிழ்க் கலைகளையும் இந்த மண்ணில் நிலை நாட்டுகின்றோம்'" என்றார்
றிச்மன் பிள்ளையார் கோயில் முகாமையாளர் திரு நவரட்ணம் கருணரட்ணராசா, திருமதி சுமதி சிவா, திருமதி வேல்விழி அருள்மாறன், திருமதி ராஜி உதயசந்திரதாஸ், திருமதி சுகந்தினி கரன், திருமதி யோகநாயகி நித்தியானந்தமூர்த்தி, நவதீதா முருகண்டி ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்து உரையாற்றினார்கள்.
திருமதி சன்ரா பாலேஸ்வரன், திருமதி விமலாதேவி புஸ்பநாதன் ஆகியோர் நிகழ்ச்சியின் அறிவிபாளர்களாகப் பணியாற்றினார்கள். வருகை தந்த எல்லோருக்கும் தேனீர், பிரசாதம், சிற்றுண்டி வழங்கப் பெற்றது. இறுதியாக திருமதி கௌசல்யா பார்த்தீபன் அவர்களின் நன்றியுரையுடன் விழா சிறப்பாக முடிவுற்றது.
எமதுமொழி, பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம் போன்றவற்றை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்தும் கனடிய மண்ணில் இடம்பெறவேண்டும் என நிகழ்ச்சி அமைப்பாளர்களைப் பாராட்டி வாழ்த்துகின்றோம்.

குரு அரவிந்தன்
 

Leave a Reply