• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தமிழ் தேசிய போராட்டத்திற்கு எமது ஆதரவு உண்டு

இலங்கை

”தமிழ்த் தேசியம் சார்ந்து ஜனநாயகரீதியில் முன்னெடுக்கப்படும் அனைத்து செயற்பாடுகளுக்கும் எமது ஆதரவு உண்டு” என யாழ். பல்கலைகழக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து யாழ். பல்கலைகழக ஊழியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது’ யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து, கடந்த ஞாயிறுக்கிழமை மட்டக்களப்பு, மயிலத்தமடு – மாதவனைப் பகுதி மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடிவரும் கால்நடைப் பண்ணையாளர்களுக்கு ஆதரவாக அமைதியான முறையில் ஜனநாயக ரீதியில் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

அப்போராட்டம் எவ்வித குழப்பங்களும் இன்றி யாருக்கும் இடையூறுகளுமின்றி நடைபெற்று முடிந்த பின்னர் வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவர்களை வந்தாறுமூலைப் பகுதியில் இடைமறித்து அவர்களில் 06 மாணவர்களை கைது செய்தனர்.

இது ஒரு திட்டமிட்ட ஜனநாயக விரோதச் செயற்பாடு ஆகும். இச் செயற்பாடு ஜனநாயக ரீதியில் போராடும் மாணவர்களினதும் ஏனையவர்களினதும் செயற்பாடுகளை அச்சுறுத்தும், அரச படைகள் மூலம் அடக்கும் நடவடிக்கையாகவே நாம் பார்க்கின்றோம். இதனை நாம் வன்மையாகக் கண்டிப்பதோடு, இவ்வாறான செயற்பாடுகளை அரசாங்கம் எதிர்காலத்தில் முன்னெடுக்கக்கூடாது என கோருவதோடு, கைதுசெய்யப்பட்டு வழக்குப்பதியப்பட்ட மாணவர்கள் வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்றும் வேண்டி நிற்கின்றோம்.

அதேவேளை பல்கலைக்கழக மாணவர்களாலும் ஏனையோராலும் தமிழ்த் தேசியம் சார்ந்து ஜனநாயகரீதியில் முன்னெடுக்கப்படும் அனைத்து செயற்பாடுகளுக்கும் எமது ஆதரவு உண்டு என்பதோடு அச்செயற்பாடுகளில் அவர்களுடன் இணைந்து நிற்போம் எனவும் தெரிவித்துக்கொள்கிறோம்” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Leave a Reply