• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வாய்ப்பாட்டுக் கலைஞர் செல்வன் அமுதீசர் சச்சிதானந்தன் முன்னணிக் கலைஞர்களுடன் இணைந்து வழங்கிய அற்புதமான இசைக் கச்சேரி.

கனடா

கனடாவில் வளர்ந்து வருகின்ற இசை ஆற்றலும், இசை ஞானமும் மிக்க இரண்டு கலைஞர்கள் காரைநகர் மண்ணைப் பெருமைப்படுத்தி வருபவர்கள். ஒருவர் வாய்ப்பாட்டுக் கலைஞர் செல்வன் அமுதீசர் சச்சிதானந்தன். மற்றையவர் வயலின் இசைக் கலைஞர் செல்வன் மிதுரன் மனோகரன். செல்வன் அமுதீசர் சச்சிதானந்தன் அவர்களின். வாய்ப்பாட்டுக் கச்சேரி சென்ற 29-10-2023 ஞாயிற்றுக்கிழமை வரசித்தி விநாயகர் ஆலயத்திலன் தெய்வீக இசை அரங்கில் நடைபெற்றது. செல்வன் மிதுரன் அவர்கள் வயலின் வாசித்தும் தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்துள்ள் சர்வதேசப் புகழ்பெற்ற தவில் இசைக்கலைஞரான திருப்புன்கூர் T.G. முத்தக்குமாரசாமி அவர்களும் மற்றொரு பிரபல்யம் மிக்க தமிழ்நாட்டு தவில் கலைஞர் காவாலம் ஸ்ரீகுமார் அவர்களும் தவில் வாசித்தும் அமுதீசரின் கச்சேரிக்கு மெருகூட்டியிருந்தமை சிறப்பானதாகும். இரண்டு மணி நேரத்துக்கு மேலாக அங்கு கூடியிருந்த இசை ரசிகர்களை கட்டிப்போட்டிருந்த அற்புதமான இசை நிகழ்வாகவே இது அமைந்திருந்தது.

இதே பக்கவாத்தியக் கலைஞர்களுடன இணைந்து திருப்புகழ் பாடல்களை மட்டும் இசைக்கும் சிறப்புக் கச்சேரி ஒன்றினை எதிர்வரும் 12-11-2023 அன்று கனடா கந்தசுவாமி கோயிலில் செல்வன் அமுதீசர் நிகழ்த்தவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

செல்வன் அமுதீசர் அண்மையில தமது தாயாரும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் நிர்வாக சபை உறுப்பினருமாகிய திருமதி சுந்தரேஸ்வரி சச்சிதானந்தன் அவர்களுடன் தாயகம் சென்றிருந்தபோது காரைநகர் இந்துக் கல்லூரிக்குச் சென்று நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் இசைக் கச்சேரியை நிகழ்த்தி கல்லூரி மாணவர்களையும் ஆசிரியர்களையும் மகிழ்வித்திருந்தார். அத்துடன் காரைநகர் பாடசாலைகளில் இசை பயிலும் மாணவர்களுக்கு பயற்சிப் பட்டறை ஒன்றினையும் நடாத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

செல்வன் அமுதீசரும் ஏனைய பக்கவாத்தியக் கலைஞர்களும் வரசித்தி விநாயகர் ஆலயத்தின் நிர்வாகத்தினாலும்,  சர்வதேச தவில் நாதஸ்வர இசை அமைப்பின் சார்பிலும் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டிருந்த அதேவேளை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையும் கலைஞர்களைக் கௌரவித்திருந்தது. பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் தலைவர் திரு.நாகலிங்கம் குஞ்சிதபாதம் அவர்களும் உதவிச் செயலாளர் திரு.சிற்றம்பலம் சச்சிதானந்தன் அவர்களும் பொன்னாடை அணிவித்துக் கௌரவித்தனர்.

நிகழ்வின் இறுதியில் இவ்விசைக் கச்சேரி சிறப்புற நடைபெற ஒத்துழைத்து ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து திருமதி சுந்தரேஸ்வரி சச்சிதானந்தன் உரையாற்றினார்.

நிகழ்வு தொடர்பான சில் புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
 

Leave a Reply