• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விதி விலக்கில்லாத விதியுமில்ல…

சினிமா

இப்பாடலை எழுதும்போது கத்திமேல் நின்றைப்போல இருந்துதான் எழுதினேன் என்று கவிப்பேரரசர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். ஏனெனில் இப்பாடலில் அடுத்தவர் மனைவிமீது காதல் கொள்ளும் ஆடவனின் மனநிலையில் இருந்து எழுதவேண்டும் அதே சமயம் அந்த உறவை ஞாயப்படுத்தாமலும் இழுக்கானது என்று மிகவும் கொச்சைப்படுத்தாமலும் சொல்ல வேண்டும். இத்தகு சிரமத்தை எதிர்கொண்டு வைரமுத்து ஐயாவால் எழுதப்பட்டு வெற்றிபெற்ற பாடல் "ராவணன்" திரைப்படத்தில் A.R ரகுமான் இசையில் வந்த 
"உசுரே போகுது உசுரே போகுது"  என்னும் பாடல்தான்.
இப்பாடலின் தொடக்கத்தில் தொகையறா எட்டு வரிகளில் இடம்பெறுகின்றன. தொகையறா என்பது பல்லவிக்கு முன் வரக்கூடியது முழுஇசைக்கருவிகளும் இசைக்காமல் பாடுபவர் உச்சரிக்க மட்டும் செய்வார்.பிறகு பல்லவி தொடங்கும்போது இசை தொடங்கும்.
தேக்குமரக் காடு என்பது பெரிய அளவுதான் ஆனால் அதைக் கணப்பொழுதில் சாம்பலாக மாற்றக்கூடிய திறன் சிறிய தீக்குச்சிக்கு உண்டு‌. அதைப் போலத்தான் நமது நன்மதிப்புகள் சிறிய தவறு செய்தால் அத்தனை நற்பெயர்களும் அழிந்து விடும். அதைத்தான் கவிஞர் கூறுகிறார்.

"இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த…
என் புத்திக்குள்ள தீப்பொறிய நீ வெதச்ச…
அடி தேக்கு மர காடு பெருசுதான்…
சின்ன தீக்குச்சி உசரம் சிறுசுதான்…" 
ஆண்களுக்கு பெண் பார்வையில் சிலசமயம் உயிர் போவதுபோன்ற உணர்வு ஏற்படுவதுண்டு.அது கண்ணும் கண்ணும் நோக்குகையில் ஏற்படும். ஆனால் கவிஞர் இங்கே அவள் உதட்டைச் சுழிக்கையில் அவனது உயிர்போகிறது என்று அப்பெண்ணின் அழகை உயர்த்திக் காட்டுகிறார். கிராமத்தில் நேத்திக்கடனாக மடிப்பிச்சை எடுப்பார்கள் ஆனால் இங்கே காதலுக்காக மடிப்பிச்சை கேட்கிறான் காதலன்
"உசுரே போகுதே உசுரே போகுதே…
உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே…
ஓஓ… மாமன் தவிக்கிறேன்…
மடி பிச்ச கேக்குறேன்…
மனச தாடி என் மணி குயிலே…"
இந்தவரிகளில் தான் கவிஞரின் கற்பனைத்திறனைப் பார்த்து வியந்து போகிறேன். சீமை என்பதை கிராமத்தில் இருந்து வெகுதூரத்தில் இருக்கும் நகரத்தைக் குறிகப்பயன்படுத்துவார்கள். 
அதுபோல தொலைவில் இருக்கும் அப்பெண்ணைத்தொட( தொட என்பதைத் மிகவும் காமம் சார்ந்த செயலைலாக எடுக்காமல் ஸ்பரிசத்தோடு அணுகுவது எனக்கொள்க) தீ பழம் என்று தெரிந்தாலும் நாக்கு அதைச்சுவைக்கத் துடிப்பதாக அப்பெண்ணை நெருப்புக்கு இணையாகக் கூறுகிறார்.
"அக்கரைச் சீமையில் நீ இருந்தும்…
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி…
அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும்…
அடிக்கடி நாக்கு துடிக்குதடி…" 
இதிலிருந்து தெரிவது சமூதாயக் கட்டமைப்பில் அந்த ஆடவன் நினைக்கும் செயலானது தவறானது அதை மேற்கண்டவாறு உருவகம் செய்கிறார் கவிஞர். தவறுதான் ஆனால் அவனது மனம் விடுவதாய் இல்லை என்பதை மிகச் சிறந்த முறையில் எடுத்துக்காட்டுகிறார்.
அடுத்ததாக மனித உடலில் நடக்கும் உளவிலைச் சொல்கிறார். மனம் சொல்வதை சிலநேரங்களில் உடல் கேட்காது. மனதை அடக்குபவனே ஞானியாகிறான். சாதாரண மனிதனின் மனது சொல்வதை உடல் கேட்பதாகவா இருக்கிறது.
"ஒடம்பும் மனசும் தூரம் தூரம்…
ஒட்ட நினைக்கேன் ஆகல…
மனசு சொல்லும் நல்ல சொல்ல…
மாய ஒடம்பு கேக்கல…"
இந்த நான்கு வரிகளில் பாடலில் சொல்லவந்த அத்தனைக் கருத்தையும் நறுக்கென்று சொல்லிவிட்டார் கவிஞர்.
நான் செயல் ஒன்றும் புதிதல்ல ஏனெனில் இதற்குமுன்பு நடந்திருக்கிறது. ஒழுக்கத்தில் சில நேரம் தவறு நடக்கச் செய்யலாம் சந்தர்ப்பம் கிடைக்காத வரை அனைவரும் நல்லவர்கள் தான். சந்தர்ப்பம் கிடைக்கும் போது அவர்கள் எவ்வாறு நடக்கிறார்கள் என்பதில் இருக்கிறது அவர்களது ஒழுக்கம். மனிதன் சில விதிகள் வைத்து வாழ்க்கைக்கு வழி கொடுத்தான். எவ்வளவு விதியிருந்தாலும் அவ்விதிக்கு சில விதிவிலக்கு இருந்துதானே ஆகவேண்டும் இதைத்தான் கவிப்பேரரசு அவர்கள் கவிதையாகச் சொல்கிறார்
"இந்த உலகத்தில் இது ஒன்னும் புதுசுல்ல…
ஒண்ணு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கத்துல…
விதி சொல்லி வழி போட்டான் மனசபுள்ள…"
விதி விலக்கில்லாத விதியுமில்ல…"  இவ்வளவு சிக்கலான சூழலுக்கு வேறுயாரால் இவ்வாறு சிந்தனை செய்து எழுதமுடியும்.
இந்த உடலுக்கு ஒருநாள் அழிவு வந்தே தீரும் அப்போது உடலை மண்ணுக்குள் புதைப்பார்கள். எரிக்கமாட்டார்களா என்றால் எரிப்பது ஆரிய மரபு.புதைப்பதுதான் திராவிட மரபு கவிஞர் கணக்கச்சிதமாக புதைப்பதைக் கையாண்டுள்ளார். இதுபோன்ற இடங்களை ரசிக்கும் போதெல்லாம் அடடே என்னவிதமான எழுத்து என்று சொல்லத்தோன்றுகிறது. அப்படிப் புதைத்தாலும் மண்ணில் என்உடல் கிடக்கும் என்னில் நீ கிடப்பாய். என் மனதில் நீதான் இருப்பாய்.
"என் கட்டையும் ஒரு நாள் சாயலாம்…
என் கண்ணுல உன் முகம் போகுமா…
நா மண்ணுக்குள்ள உன் நெனப்பு மனசுக்குள்ள…" 
இப்பாடல் ஒருதலைக் காதலர்களுக்கும் பொருந்துவதாகவே அமைந்துள்ளது. சின்ன நுணுக்கங்களில் கவிஞர் எவ்வளவு பெரிய விடயத்தைப் பொதிந்து வைத்துள்ளார் என்பதை அறிந்து வியக்கத்தான் தோன்றுகிறது.
இப்பாடலைக் கார்த்திக் பாடியுள்ளார்.

பூபாலன் வைரமுத்து


 

Leave a Reply