• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சுமந்திரனின் கருத்துக் குறித்து மாவையிடம் வருத்தம் வெளியிட்டார் சம்பந்தன்

இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பொதுவெளியில் தன்னை இராஜினாமாச் செய்யுமாறு கூறிய கருத்தானது மனவருத்தமளிப்பதாக அக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவிடத்தில் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
  

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவுக்கும், அக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான இரு சந்திப்புக்கள் நேற்றும் நடைபெற்றிருந்தது. இந்தச் சந்திப்பின்பேதே, இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தனது மனவருத்தத்தினை தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சுமந்திரன் எம்.பி. தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தகலறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களுக்கு அமைவாக சம்பந்தன் எம்.பியின் பாராளுமன்ற வரவு நாட்கள் மற்றும் இதர படிகள் தொடர்பில் எழுப்பிய வினாவுக்கு பதிலளிக்கையில், சம்பந்தனின் முதுமை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அவர் பதவியிலிருந்து இராஜினாமச் செய்வது பொருத்தமானது என்ற தனது தனிப்பட்ட கருத்தினையும், ஏலவே கட்சியில் எடுக்கப்பட்ட தீர்மானத்தினையும் பகிரங்கமாக தெரிவித்திருந்தார். இதனையடுத்து, மாவை.சோ.சேனாதிராஜாவை, நேரில் சந்திப்பதற்கு வருகை தருமாறு இரா.சம்பந்தன் அழைப்பு விடுத்திருந்தார்.

அதற்கு அமைவாக நடைபெற்ற மேற்படி சந்திப்புக்கள் தொடர்பில் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவிக்கையில்,

சுமந்திரன், சம்பந்தன் தொடர்பில் வெளியிட்ட கருத்துக்களை அடுத்து சம்பந்தன் என்னை நேரில் சந்திப்பதற்கான அழைப்பினை விடுத்திருந்தார். அதனையடுத்து நான் அவருடன் இருவேறு சந்திப்புக்களை தொடர்ச்சியான நாட்களில் மேற்கொண்டிருந்தேன்.

முதலாவது சந்திப்பின்போது, சுமந்திரனின் கருத்துக்கள் தொடர்பில் அவர் மனவருத்தத்தினை தெரிவித்ததோடு, அந்த விடயம் சம்பந்தமாக விரிவானதொரு கலந்துரையாடலை மேற்கொள்ளவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், குறித்த விடயம் சம்பந்தமாக தீர்மானமொன்றை அவர் எடுப்பார் என்ற தொனிப்படவும் கருத்துக்களை வெளிப்படுத்தினார்.

அதேநேரம், குறித்த விடயமானது கட்சியின் உள்ளக விவகாரமாக இருப்பதன் காரணமாக, அவ்விடயம் சம்பந்தமாக பொதுவெளியில் உரையாடல்களை தவிர்ப்பதோடு, விடயங்களை பூதாகரமாக்குவதை தவிர்ப்பதும் எமது நிலைப்பாடாகும். எனினும் அவ்விடயம் சம்பந்தமாக கட்சி உரியவாறான நடவடிக்கைளை முன்னெடுக்கும் என்றார்.

இதேவேளை,இன்று கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளமையால் அதுபற்றியும் சம்பந்தனுடன் கலந்துரையாடினேன். அந்தக் கலந்துரையாடலின் அடிப்படையில், கட்சியின் மாநாட்டை நடத்துவதற்கான திகதியை தீர்மானதிப்பதற்கு முதலில் இணக்கப்பாடுகளை எட்டுவதென இருவரும் முடிவெடுத்துள்ளோம்.

அதன்பின்னர், கட்சியின் மாநாட்டை எங்கு நடத்துவது, பதவிநிலைகளுக்கு போட்டியிடுவது யார் என்பதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதெனவும் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரு பதவிக்கு போட்டியிடும்போது அந்த நிலைமைகளை தவிர்த்து இணக்கப்பாட்டின் அடிப்படையில் நிலைமகளை சுமூகமாக கையாள்வதெனவும் இருவரும் முடிவுகளை எடுத்துள்ளோம்.

மேலும், கட்சியின் மாநாட்டில் நிறைவேற்றப்பட தீர்மானங்களில் உள்ளீர்க்கப்பட வேண்டிய விடயங்கள் சம்பந்தமாக ஆராய்ந்ததோடு அதற்கான வரைவுகளை முன்னெடுப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. விசேடமாக சம்பந்தனும் மாநாட்டின் தீர்மானத்துக்கான உள்ளீடுகளை வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, எம்மிருவரிடையே சமகாலத்தில் அரசாங்கத்தின் போக்குகள் மற்றும் ஆக்கிரமிப்புச் செயற்பாடுகளின் விரிவாக்கம் சம்பந்தமாக ஆராய்ந்திருந்தோம். அதுபற்றி அடுத்தகட்டமாக எவ்விதமான நடவடிக்கைகளை முன்னகர்த்தலாம் என்பது பற்றியும் ஆழமாக ஆராய்ந்திருந்தோம்.

தொடர்ந்து, அண்மைக்காலமாக திருகோணமலையை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படுகின்ற பௌத்தமத விரிவாக்கம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதோடு அதனை தடுத்து நிறுத்துவதற்காக சம்பந்தன் முன்னெடுத்த நடவடிக்கைகள் மற்றும் அதன் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்திருந்தோம் என்றார்.
 

Leave a Reply