• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார்..

சினிமா

திருச்சி எடத்தெருவில்தான் பாகவதர் பிறந்த வீடு. தந்தை கிருஷ்ணமூர்த்தி. தாய் மாணிக்கத்தம்மாள்.
 1910-ம் வருடம் மார்ச் 1-ம் தேதி பிறந்த ஆண் குழந்தைக்குத் தியாகராஜன் என்று பெயர் வைத்தார்கள். 
சிறுவன் தியாகராஜன் பாலக்கரை உய்யக்கொண்டானில் நீந்தி விளையாடுவானாம். கழுத்தளவு நீரில் சாதகம் செய்வாராம் 
வரகனேரியில் உள்ள குழுமியானந்த சுவாமிகள் சமாதிக்குப்போய் மனமுருகிப் பாடுவது தியாகராஜனின் வழக்கம். பாலக்கரை ஜபமாதா கோயில் பள்ளியில்தான் படித்தார்.
பஜனைப் பாடல்கள்தான் அந்தக்கால சேர்ந்திசை. தியாகராஜன் 'பித்தா பிறைசூடி' தேவாரப்பாடலை பஜனையில் பாடி ஒன்ஸ்மோர் கேட்கவைத்தான். தியாகராஜன் புகழ் திருச்சியில் பரவியது.
திருச்சியில் உள்ள ஆர்.ஆர்.சாபா  இதை தோற்றுவித்தவர் F.G.நடேச ஐயர். . இந்த நடேசய்யர்தான் தியாகராஜனின் உடல் அழகாலும் குரல் வனப்பாலும் கவரப்பட்டு ஹரிசந்திரா நாடகத்தில் லோகிதாசனாக நடிக்கவைத்தார். 
சிறுவன் தியாகராஜன் லோகிதாசனாகமாறி, “அம்மா பசிக்குதே... தாயே பசிக்குதே...” என்று தன் குரலால் பாடி உருகியபோது ஆர்.ஆர்.சபாவின் காற்றும் அழுதது.  பார்த்த மக்கள் பதறினர். ஒரு  நட்சத்திரம் உதித்ததை உலகம் ஏற்றது.
திருச்சி பெரிய கம்மாளத் தெருவிலுள்ள காளியம்மன் கோயிலில். கூட்டம் அலை மோதியது. 
நம் தியாகராஜன் அன்றுமுதல் எம்.கே.டி பாகவதர் ஆனார். தியாகராஜனை, 'தியாகராஜ பாகவதர்' என்று முதலில் அழைத்தது பாடலாசிரியரான நடராஜ வாத்தியார்தான்.

 பாகவதரின் 'பவளக்கொடி' நாடகம் பாகவதரின் முதல் படமாக எடுக்கப்பட்டது.அதன்பின் வந்த 'நவீன சாரங்கதாரா' பாடலுக்காகவே ஓடியது. 40 பாடல்கள். இரண்டும் மாபெரும் ஹிட் 
ஆயிரம் ரூபாயாக இருந்த பாகவதரின் சம்பளம் மூன்றே ஆண்டுகளில் 'அம்பிகாபதி' படத்தில் 11,000 ரூபாயாக உயர்ந்தது.
25 நாள்கள் ஓடினாலே வெற்றிப்படம் என்கிறோம் இப்போது. ஆனால் ஒரு படம் 1,000 நாள்கள், அதாவது மூன்று தீபாவளியைக் கொண்டாடியது. அந்த சாதனை இன்றுவரை முறியடிக்கப்படவில்லை. அதை நிகழ்த்தியவர் பாகவதர். அந்தப் படம் 'ஹரிதாஸ்'.
மக்கள் அவரை வெறிகொண்டு ரசித்தார்கள். ஒரு நம்பமுடியாத நிகழ்ச்சி. திருச்சி - புதுக்கோட்டை சாலை. ரயில்வே கேட் சாத்தியிருக்கிறது. பாகவதர் கார் நின்றுகொண்டிருக்கிறது. கேட்டைக் கடக்கும்போது ரயில் கார்டு பாகவதரைப் பார்த்துவிடுகிறார். உடனே ரயில் நின்றுவிடுகிறது. டிரைவரும் கார்டும் இறங்கிவந்து பாகவதரைப் பாடச்சொல்கிறார்கள். வேறுவழியில்லாமல் பாகவதர் பாட ரயில் புறப்பட்டது. இவ்வளவு புகழ் எந்தக் கலைஞனுக்கும் சாத்தியமா, தெரியவில்லை.
பாகவதர் கட்டி வாழ்ந்த பங்களா இன்றும் மத்தியப் பேருந்து நிலையம் அருகில் ராணுவ கேம்ப்புக்கு எதிரே உள்ளது. அந்த மாளிகை அதே வடிவத்தில் இன்று ஒரு லாட்ஜாக உள்ளது..
இரண்டாம் உலகப்போர் 1939-ல் தொடங்கியது. ’யுத்த நிதி’ திரட்ட பாகவதர் கச்சேரி செய்தார். பெரும் தொகை வசூலானது. அதற்காக திவான் பகதூர் பட்டம்தர பிரிட்டிஷ் அரசு முன்வந்தது.
 நிராகரித்தார். 
இன்று BHEL அமைந்துள்ள திருவறம்பூர்ப் பகுதியை அரசு வழங்க முன்வந்தது. பாகவதரோ நான் செய்தது உதவி. பிரதிபலனாக எதுவும் வேண்டாம் என்றார். குரல் மட்டுமல்ல மனசும் தங்கம்.
அவருடைய பைக் நம்பர் MSC 3111; கார் நம்பர் RD 2296 அவர் சவாரி செய்தது வெள்ளைக் குதிரை - எல்லாவற்றையும் மக்கள் நேசித்தார்கள். 
திருச்சி பெரிய கடைவீதி பகுதியில் குதிரையில் சில்க் ஜிப்பா கையில் சுற்றிய மல்லிகைப்பூ வாயில் தாம்பூலம் மணக்க மணக்க வாசனை திரவியத்துடன் மைனராக பவனி வந்தால் மயங்காத பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் உண்டாம்..
சேமிப்பு குணம் அற்றவர். படங்களில் இருந்து ஒய்வு பெற்ற சமயத்தில் தன்னையே நம்பி இருந்த பாடலாசிரியர் பாபநாசம் சிவனுக்கு ஏற்பட்ட பொருளாதார சிக்கலை உணர்ந்து, அவர் கேட்காமலேயே தான் சாப்பிடுவதற்கும், விருந்தினர்களை உபசரிக்கவும் பயன்படுத்தும் தங்க தட்டையே கொடுத்து உதவியவர்.
லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’— இசைவாணரும் கலைவாணரும் வழக்கில் சிக்கி வெளியே வந்தனர்
 தனது வழக்கை சிக்கலின்றி முடித்து வைத்த வழக்கறிஞர் எத்திராஜிக்கு ஒரு தங்கத்தட்டை அளித்து பெருமைப்படுத்தியவர். 
வழக்கறிஞர் எத்திராஜ் இந்த தங்கத் தட்டையும் தன்னிடமிருந்த பணத்தையும் வைத்து 1948ஆம் ஆண்டு சென்னையில் எத்திராஜ் மகளிர் கல்லூரியை ஆரம்பித்தார்.
1959 நவம்பர் 1-ம் நாள் இசைப்பதை நிறுத்திக்கொண்டது. நாடே முகாரியில் மூழ்கியது. உடல் திருச்சிக்கு வந்தது. மலைக்கோட்டை பார்க்காத மக்கள் கூட்டம்.
 சங்கிலியாண்டபுரத்தில் உள்ள சமூக இடுகாட்டில் அவரது தாய்-தந்தை சமாதியின் அருகே அடக்கம் நடந்தது. முதல்வர் காமராஜர், நடிகவேள் ராதா, நாவலர் முதலானோர் அஞ்சலி செலுத்தினர்.
அவர் 49 ஆண்டுகளே வாழ்ந்தார். 14 படங்களே அவர் நடித்தது. திரையில் பாடியதோ ஏறக்குறைய 110 பாடல்கள். அவர் செய்த இசைக் கச்சேரிகள் ஏராளம். காலம் கடந்தும் நாம் அவரின் “சொப்பன வாழ்வில் மயங்கி” கிடக்கிறோம்.

 

நன்றி கவிஞர் நந்தலாலா

Leave a Reply