• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஹமாஸ்- இஸ்ரேல் போரில் மனிதாபிமான இடைநிறுத்தம் வேண்டும் - ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மினியாபோலிஸ் நகரில் பிரசார உரை நிகழ்த்தி கொண்டிருந்தார். அப்போது, இஸ்ரேல் தாக்குதலால பாலஸ்தீன மக்கள் பாதிக்கப்படுவதற்கு எதிராக, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால் நெருக்கடிக்கு உள்ளான ஜோ பைடன் ஹமாஸ்- இஸ்ரேல் இடையே போர் இடைநிறுத்தம் தேவை என்று தெரிவித்துள்ளார். இது பிணைக்கைதிகளை மீட்க உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் தாக்குதலை தொடர்ந்து, இஸ்ரேல் கண்மூடித்தனமான வகையில் காசாவில் தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழியாக தாக்குதல் நடத்தி வந்த நிலையில், தற்போது தரைவழி தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது.

ஹமாஸ் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பொதுமக்கள் வசிக்கும் கட்டடங்கள், மருத்துவமனைகள், முகாம்களும் தாக்குதலுக்கு உள்ளாகிறது. இதனால் மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் காசா மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க போதுமான வசதிகள் இல்லாததால் காயம் அடைந்தவர்கள் சிகிச்சையின்றி பரிதவிக்கிறார்கள்.

இதனால், உலகம் முழுவதும் இருந்து இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த வேண்டும் என பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் இஸ்ரேல் தாக்குதலை குறைக்கவில்லை.

இந்த நிலையில்தான், பைடன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவிடம் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே படுகாயம் அடைந்தவர்கள், வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் காசாவில் இருந்து வெளியேற, காசா எல்லை திறக்கப்பட்டுள்ளது.

ஆனால், போர் நிறுத்த அழைப்பு என்பதை மறுத்துள்ள வெள்ளை மாளிகை, வெளிநாட்டினர் வெளியேறும் வகையிலும், பொதுமக்களுக்கு உதவி கிடைக்கும் வகையிலும் இஸ்ரேல் மனிதாபிமான இடைநிறுத்தம் குறித்து கருத்தில் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
 

Leave a Reply