• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மம்முட்டி 

சினிமா

திரை உலகில் கதாநாயகிகளை போல கதாநாயகர்கள் பிற மொழி படங்களில் நடிப்பது என்பது அவ்வளவு இலகுவாக நடந்து விடாது
 காரணம் சந்தை மதிப்பு தமிழில் பெரிய ஹீரோவாக இருப்பவர் மற்ற மொழிகளில்  நடிக்கும் போது வில்லனாகவோ அல்லது கௌரவ வேடத்தில் தான் தோன்றுவார்கள்
 காரணம் அங்கு அவருக்கு சந்தை மதிப்பு இருப்பது சிரமம் அல்லது வேறு மொழிகளில் அது மொழிமாற்றம் செய்யப்பட்டு வரும் இதுதான் நடைமுறை 
நடிகைகளுக்கு அந்த தொந்தரவு இல்லை பெரும்பாலும் அவர்கள் கதாநாயகிகளாகவே கூட தொடர முடியும் காரணம் பெரும்பாலும் கதைகள் நாயகனை சுற்றி நடை பெறுவது தான் காரணம் 
ஆனால் இதை எல்லாம் கடந்த நடிகர்களும் உண்டு அதில் ஒருவர் முகமது குட்டி இஸ்மாயில் என்ற இயற்பெயர் உடைய மம்முட்டி இவர் 1971 இல் திரையுலகுக்கு வந்தாலும் கூட தமிழில் அவர் தோன்றிய நேரடித் தமிழ் படம் மௌனம் சம்மதம் ஆண்டு 1989
 இந்த காலகட்டத்தில் அவர் ஒரு சிபிஐ அதிகாரியாகவோ வழக்கறிஞர்களாகவோ அல்லது ஒரு காவல்துறை அதிகாரிகளாகவோ படத்தில் தோன்றி துப்பு துலக்குவது போன்று பல படங்கள் மலையாளத்தில் ஹிட் ஆகி அவையெல்லாம் மொழி மாற்றம் செய்யப்பட்டு தமிழுக்கு வந்திருந்தாலோ என்னவோ அவர் நேரடி தமிழ் படத்திற்கு வரும்போதும் ஒரு வழக்கறிஞர் கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார் 
திரைக்கு வருவதற்கு முன்பு அவர் வழக்கறிஞராகத்தான் பணிபுரிந்து இருந்தார் என்பதும் ஒரு கூடுதல் தகவல் 
எல்எல்பி படித்தவர் இரண்டு வருடங்கள் வழக்கறிஞராகவும் பணிபுரிந்தார் மௌனம் சம்மதம் படத்தில் அது போன்றதொரு வழக்கறிஞர் வேடம் 
ஒரு கொலை நடந்ததை காட்டி அதை யார் செய்திருப்பார்கள் என்று பல்வேறு யூகங்களை தோற்றுவித்து பிறகு அதை விடுவிக்கும் பாணியிலான படம் இதில் இவருக்கு இணையாக அமலா
இந்த படத்தில் கல்யாண தேன் நிலா என்ற பாட்டு மிகவும் பிரபலம் பெரிய வெற்றி இல்லை என்றாலும் ஒரு கவனிக்க தகுந்த வேடமாக அவருக்கு அமைந்தது 
அதற்கு அடுத்த தமிழ் படம் அழகன் பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்தில் இவர் ஒரு தொழிலதிபர் இவருக்கு நான்கு குழந்தைகள் இருக்கும் மனைவி இல்லை என்று வரும் கதையில் கலா ரசனைக்கு உட்பட்ட இவர் ஒரு நிகழ்ச்சியில் நடன கலைஞர் பானுப்பிரியாவை பார்த்து காதல் வயப்படுவதாகவும் வரும்  இது தவிர இவருக்கு ஆசிரியராக வரும் கீதாவும் வயது குறைந்த மதுபாலாவும் ஒருதலையாக இவரை காதலிப்பது போல் வரும் ஆனால் இவருடைய காதல் பானுப்பிரியா மீது தான் அவரும் இவரை காதலிப்பார் பல சிக்கல்களுக்கு பிறகு அவர்கள் இணைவது  போன்ற கதை நடிக்க நல்ல வாய்ப்பு அளித்த படம் ஒரு பாசமுள்ள தந்தையாகவும் காதலனாகவும் சிறப்பாக செய்திருப்பார் 
அடுத்த படம் ரஜினியுடன் நடித்த தளபதி இரண்டு மொழிகளில் மாஸ் ஹீரோவாக இருக்கும் இருவருக்கும் தீனி போடும் படியான கதை மகாபாரத கதையின் மறுஆக்கம் என்பதால் கனமான கதாபாத்திரத்தை ஏற்று இருப்பார்
 ஒரு தாதாவாகவும் அதே சமயம் நண்பனுக்காக உருகும் சராசரி மனிதனாகவும் தோன்றி இருப்பார் நல்ல பெயரை பெற்று தந்த படம் இந்த படம் மலையாளத்திலும் வெளியிடப்பட்டது தமிழில் மம்முட்டி இறப்பது போலவும் அதற்கு ரஜினி கலங்குவது போலவும் வரும் ஆனால் மலையாளத்தில் ரஜினி இறப்பது போலவும் மம்முட்டி  கலங்குவது போலவும் மாற்றியமைத்திருப்பார்கள் காரணம் சந்தையில் அது விலை போக வேண்டும் என்பதற்காக அந்த அளவிற்கு ஒரு நட்சத்திர முக்கியத்துவம் உள்ள படமாக அமைந்தது 
அதன் பிறகு கிளிப்பேச்சு கேட்க வா என்ற படம் மலையாள இயக்குனர் பாசில். இயக்கியதால் மலையாள வாசனையுடன் அந்த படம் பேய் கதையை போன்ற ஒரு தோற்றம் தரும் பெரிய அளவில் இங்கு வெற்றியடையவில்லை 

அதன் பிறகு ஆர்கே செல்வமணி இயக்கத்தில் மக்களாட்சி பழைய சரஸ்வதி சபதத்தை நினைவுபடுத்தும் படியான ஒரு படம் கல்வியா செல்வமா வீரமா என்பது போன்று கதை அரசியல் சேர்த்து தரப்பட்டிருக்கும் இதில் சாதாரண நிலையில் இருக்குமோ அவர் பல்வேறு தில்லுமுல்லுகள் செய்து அரசியலுக்கு வருவது போலவும் வந்ததற்கு பிறகு திருந்தி வாழ நினைக்கும் பொழுது ஏற்படும் சிக்கல்கள் பற்றி கதை சுறுசுறுப்புக்கும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்த படம் நல்ல கவனம் ஈர்ப்பை பெற்றது
அதேபோன்ற அரசியல் களத்தை கொண்ட படம் அரசியல் அதில் ஒரு மாவட்ட ஆட்சித் தலைவராக வந்து பல்வேறு பிரச்சனைகளை சந்திப்பது போன்ற படம் பெரிய அளவில் கவனயீர்ப்பு பெறவில்லை
 மறுமலர்ச்சி படம் கிராமத்து கதை கிராமத்தில் செல்வாக்கு பெற்றிருக்கும் மம்முட்டி மற்றொரு கிராமத்தில் நடந்த ஒரு சம்பவத்தால் தவறாக கணிக்கப்பட்டு தாக்கப்படுகிறார் இதன் தொடர்பாக எழுதும் பிரச்சினைகள் அதனால் ஏற்படும் கலவரங்கள் ஆகியவற்றை பற்றிய படம் இதில் ஒரு பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் அவருடைய தோற்றத்தின் மூலம் அந்த கதாபாத்திரத்திற்கு ஒரு மதிப்பை கூட்டி இருப்பார்
எதிரும் புதிரும் இந்த படம் வந்த புதிதில் வீரப்பன் பிடிபடாமல் இருந்த சமயத்தில் நிகழ்ந்த சம்பவங்களை தொகுத்து வழங்கப்பட்ட படம் மாவட்ட ஆட்சித் தலைவராக வருவார்  ஆள் கடத்தல், அடைக்கலம் தருதல் அதன் பிறகு ஏற்படும் பிரச்சனைகள் போன்ற அந்த காலத்து நிகழ்வுகளை தொகுத்து வழங்கி இருந்ததால் சுவாரசியமாக இருக்கும் இதில் ஒரு தீவிரவாத செயலுக்கு சென்றவர்களை நல்வழிப்படுத்தும் போதனையும் சொல்லப்பட்டிருக்கும் படம் பரவலாக பேசப்பட்ட ஒன்றாக இருந்தது 
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற படம் அஜித் நடித்திருந்த இந்த படத்தில் இவர் ஒரு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாக வருவார் இவருக்கும் ஐஸ்வர்யா ராய் இருக்கும் ஏற்படும் காதல் அதன் பிறகு தபு, அஜித் இடையே ஏற்பட்ட காதல் அதில் ஏற்பட்ட ஊடல் மீண்டும் அவர்களை இணைத்து வைக்கும் ஒரு நல்ல மனிதராக வருவர் இவருடைய நடிப்பதில் மிக இயல்பாக இருக்கும் 
ஆனந்தம் படம் நான்கு சகோதரர்கள் கதை அதில் மூத்த சகோதரராக வருவார் பொறுப்பான அண்ணனாக இருந்து குடும்பத்தை எப்படி வழி நடத்துவார் என்பது கதை இந்த படம் வெற்றி அடைந்ததால் இதன் பிறகு அது போல பல படங்கள் வந்தன லிங்குசாமி இயக்கத்தில் வந்த இந்த படம் நடுத்தர குடும்பத்தின் கதையை எடுத்திருப்பதால் நல்ல வரவேற்பு பெற்று படமாக அமைந்தது
 கார்மேகம் படத்தில் அது போன்ற ஒரு ஓய்வு பெற்ற ராணுவ வீரன்  கிராமத்தில் நடக்கும் பல அநியாயங்களை தட்டி கேட்டு அந்த மக்களுக்கு விடுதலை வாங்கி தருவது போன்ற படம் இவருடைய திரை குணாதிசயத்திற்கு ஒத்துவரும் படம் என்பதால் அதில் நடிக்க  இவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்திருக்கும்
வந்தே மாதரம் என்ற படம் அர்ஜுனன் இவர் இணைந்து நடித்தது வழக்கமாக அர்ஜுனுக்கும் மம்முட்டிக்கும் அவர் அவர்கள் இயல்புக்கு ஏற்ப கதாபாத்திரங்கள் அமைந்திருக்கும் நன்கு விறுவிறுப்பாக செல்லும் அந்த படத்திலும் இவருடைய நடிப்பு பொருத்தமாக இருக்கும் ஆனால் பெரிய வரவேற்பு பெறாமல் போனது
 ஆச்சரியமே 
அதன் பிறகு பேரன்பு என்ற ஒரு படம் நடித்திருந்தார் அதன் பின்பு இதுவரை நேரடி தமிழ் படத்தில் நடிக்கவில்லை பொதுவாக இவருடைய கதாபாத்திரம் மிகவும் மேன்மை தங்கிய ஒரு உயர் அதிகாரி போன்ற வேடங்கள் அதிகம் வரும்
 காரணம் அவருடைய தோற்றம் மேலும் இவர் அதிக அலட்டல் இல்லாமல் நடிக்க கூடிய ஒரு நடிகர் வசன உச்சரிப்புகளாலோ அல்லது முக பாவனைகளாலோ மிகை நடிப்பு நடிப்பது என்பது சற்று பக்குவப்பட்ட நடிகர்களின்  இயல்பாக வருவது ஆனால் இவரிடம் அது போன்று இல்லாமல் 400 படங்கள் நடித்திருந்தாலும் கூட அதில் இவர் அதிக உணர்ச்சிகளை வெளிப்படுத்தாது ஆனால் படத்திற்கு பொருத்தமான தேவையான நடிப்பை மட்டும் வெளிப்படுத்தி நடிக்கக் கூடிய மிகச்சிறந்த நடிகர் இது எல்லோருக்கும் கை வராத ஒன்று
 இவருடைய மகன் துல்கர் சல்மானும் தற்போது ஒரு நல்ல நடிகராக வந்து கொண்டிருக்கிறார் 
மொழிமாற்றம் செய்யப்படும் படங்களில் ஏராளமான படங்கள் வெற்றி நடை போட்டு இருக்கின்றன
 70 வயதுக்கு மேற்பட்டாலும் இன்னும் அவர் சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டிருக்கிறார் 
தொடரட்டும் அவரது கலைப்பயணம்.

Vedanthadesikan Mani Lion
 

Leave a Reply