• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உழைக்கும் கரங்கள்

சினிமா

உழைக்கும் கரங்கள்’ படத்தில் எம்.ஜி.ஆர். நடித்துக் கொண்டிருந்தார். எம்.ஜி.ஆருக்கு தினமும் வகை வகையான அசைவ சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டது. படத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு சுமாரான சாப்பாடு போடப் பட்டது. அவர்களுக்கு சாப்பாட்டில் முட்டை மட் டுமே வழங்கப்பட்டது. பொறுத்துப் பார்த்த தொழி லாளர்கள் ஒருநாள் படப்பிடிப்பு இடைவேளை யில் ஓய்வாக அமர்ந்திருந்த எம்.ஜி.ஆரிடமே தயங்கித் தயங்கி தங்கள் குறையை தெரி வித்தனர். விஷயத்தை அறிந்து கொண்ட எம்.ஜி.ஆரின் சிவந்த முகம், கோபத்தில் மேலும் குங்கும நிறமானது. ‘‘நீங்கள் போய் வேலையை பாருங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்’’ என்று கூறி தொழிலாளர்களை அனுப்பி விட்டார்.

மறுநாள் மதிய உணவு இடைவேளையின் போது தொழிலாளர்கள் வரிசையில் எம்.ஜி.ஆர். சாப்பிட அமர்ந்து விட்டார். சாப்பாடு பரிமாறு பவர்கள் கதிகலங்கிப் போய்விட்டார்கள். ‘‘அண்ணே, உங்களுக்கு சாப்பாடு உள்ளே இருக்கு..’’ என்று மென்று முழுங்கி தெரிவித்தனர்.

‘‘பரவாயில்லை, இருக்கட்டும். எங்கே உட் கார்ந்து சாப்பிட்டால் என்ன? எல்லாம் ஒன்றுதானே? பசிக்கிறது. சீக்கிரம் சாப்பாடு கொண்டு வாங்க’’ என்று எம்.ஜி.ஆர். பதிலளித்தார்.

வேறு வழியில்லாமல் அவருக்கும் அங்கேயே சாப்பாடு பரிமாறப்பட்டது. முட்டையைத் தவிர வேறு அசைவ வகைகள் எதுவும் வரவில்லை. ‘‘ஏன் அசைவ உணவுகள் வரவில்லை. எடுத்து வந்து பரிமாறுங்கள்’’ என்றார் எம்.ஜி.ஆர்.

‘‘உங்கள் அறைக்கு போய் எடுத்து வரு கிறோம்’’... பரிமாறியவர்களின் பவ்யமான பதில்.

‘‘ஏன்? தொழிலாளர்களுக்கு உள்ளது என்ன ஆச்சு?’’... எம்.ஜி.ஆரின் கேள்வியில் கூர்மை ஏறியது.

‘‘இவங்களுக்கு வெறும் முட்டை மட்டும்தான் போடச் சொல்லியிருக்காங்க’’... இந்த பதிலுக் காக காத்திருந்த எம்.ஜி.ஆர். கோபத்தின் உச்சிக்கே சென்றார்.

‘‘தயாரிப்பு நிர்வாகி எங்கே? ஏன் இப்படி சாப்பாட்டிலே பாகுபாடு செய்யறீங்க? தொழி லாளர்கள்தான் அதிகம் உழைக்கிறார்கள். அவங்க தான் நல்லா சாப்பிடணும். அவங்களுக்கு வெறும் முட்டை; எனக்கு மட்டும் காடை, கவுதாரியா? அவங்களுக்கும் தினமும் அசைவ சாப்பாடு கொடுங்க. கம்பெனியால முடியலைன்னா அதுக்கான செலவை என் கணக்கிலே வச்சுக்குங்க. சம்பளத்திலே கழிச்சுக்கிறேன்’’ என்று எம்.ஜி.ஆர். பொரிந்து தள்ளிவிட்டார்.

( இத்தனைக்கும் படத்தின் தயாரிப்பாளர் கோவை செழியன் அண்ணா திமுகவின் தேர்தல் பிரிவு செயலாளராக பொறுப்பில் இருந்து சிறப்பாக பணியாற்றியவர் )

மறுநாள் முதல் தொழிலாளர்கள் அனைவருக்கும் எம்.ஜி.ஆர். சாப்பிடும் அதே வகை வகையான அசைவ சாப்பாடுகள்தான்.

எம்.ஜி.ஆருக்கு 1971-ம் ஆண்டின் இந்தியாவின் சிறந்த நடிகருக்கான ‘பாரத்’ விருது கிடைக்கக் காரணமாக இருந்த ‘ரிக்ஷாக்காரன்’ படத்தில் ஒரு காட்சி. சக ரிக்ஷா தொழிலாளி ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் ரிக் ஷா ஓட்ட முடியாத நிலை. அதனால், அன்று அவரது குடும்பத்துக்கு வருமானம் இல்லை. அதனால் சாப்பாடும் இல்லை. மதியம் அங்கு வரும் சாப்பாட்டுக்கார அம்மாவான பத்மினியிடம் இருக்கும் மொத்த சாப்பாட்டையும் எம்.ஜி.ஆர். வாங்கி, தான் கூட சாப்பிடாமல் நோயுற்ற தொழிலாளியின் வீட்டில் எல்லாரும் சாப்பிடக் கொடுத்தனுப்புவார்.

எம்.ஜி.ஆர். சாப்பிடாதது பற்றி ஒரு தொழிலாளி வருத்தப்பட, இன்னொரு தொழிலாளி ‘‘மத்தவங்க வயிறு நிறைஞ்சாத்தான் இவருக்கு (எம்.ஜி.ஆருக்கு) மனசு நிறைஞ்சுடுமே’’ என்பார்.

அதற்கு பதிலளிக்கும் எம்.ஜி.ஆர்., ‘‘மனுஷங்க வாழ்த்தறதை நம்ப முடியறதில்ல. ஆனால், வயிறு வாழ்த்தினால் நம்பலாம்பா’’ என்று கூறுவார்.

எவ்வளவு நிதர்சனமான வார்த்தைகள்.

தி இந்து .

Leave a Reply