• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காரின் மோதி கணவரை கொன்ற மனைவி உள்ளிட்ட மூவர், மூன்று மாதங்களின் பின்னர் கைது

இலங்கை

மாவனெல்ல – யாலயபொல பகுதியில் தனது கணவரை காரில் மோதி கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், மனைவி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து இடம்பெற்று மூன்று மாதங்களின் பின்னர் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாலயபொல பகுதியிலிருந்து கடந்த ஜுலை மாதம் 27ம் திகதி கடும் காயங்களுடன் நபரொருவர் மீட்கப்பட்டு, மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மாவனெல்ல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்த போதிலும், விபத்துக்கான காரணத்தை ஆரம்பத்தில் கண்டுபிடிக்க முடியவில்லை.

பிரேத பரிசோதனை அறிக்கையிலும் மரணத்திற்கான காரணம் சரியாக வெளிவராத நிலையில், இது விபத்தாக இருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

இந்த நிலையில், இந்த விபத்துக்கும், உயிரிழந்தவரின் மனைவிக்கும் இடையில் தொடர்புள்ளதாக பொலிஸாருக்கு இரகசிய தகவலொன்று கிடைத்துள்ளது.

இதையடுத்து, தொலைபேசி அறிக்கை உள்ளிட்ட தொழில்நுட்ப தகவல்களின் ஊடாக ஆதாரங்களை திரட்டிய பொலிஸார், மனைவியிடம் மீண்டும் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

இதன்போது, மனைவியின் வாக்குமூலத்தில் பரஸ்பர கருத்துக்கள் காணப்பட்டுள்ளன.

மனைவியிடம் தொடர்ந்து நடாத்திய விசாரணைகளின், சம்பவம் தொடர்பான முழுமையான வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்.

தனது காதலனுடன் காரொன்றில் தப்பிச் செல்ல முயற்சித்த தருணத்தில், அதனை தடுப்பதற்காக கணவர் காருக்கு முன்பாக பாய்ந்துள்ளார்.

இதன்போது, காரின் சாரதி குறித்த நபரை மோதியுள்ளதுடன், பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

விபத்தில் காரின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்திருந்ததுடன், கெலிஓய பகுதியில் புதிய கண்ணாடி ஒன்றை மாற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மனைவி, மனைவியின் காதலன் மற்றும் காரின் சாரதி ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 

Leave a Reply