• Welcome to TamilsGuide
செய்திகள் 1

2023க்கான நோபல் பரிசை வெல்லும் நார்வே எழுத்தாளர்

சுவீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல் (Alfred Nobel) எனும் வேதியியல் பொறியாளரின் பெயரில் 1901லிருந்து மருத்துவம், பவுதிகம், வேதியியல், இலக்கியம் மற்றும் உலக அமைதி ஆகிய 5 துறைகளில் மனித குலத்திற்கு பயனுள்ள சாதனைகளை புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு எனும் உலக புகழ் பெற்ற விருது வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டிற்கான மருத்துவம், பவுதிகம், மற்றும் வேதியியல் துறைக்கு தகுதியானவர்களின் பெயர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கு தகுதி பெற்றவரின் பெயர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

நார்வே நாட்டை சேர்ந்த எழுத்தாளரான ஜான் ஃபாஸ் (Jon Fosse) என்பவருக்கு இந்த விருது வழங்கப்படுவதாக நோபல் பரிசுக்கான ஸ்வீடன் நாட்டு அகாடமி அறிவித்திருக்கிறது.

"தனது புதுமையான நாடகங்கள், நாவல்கள், கதைகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் மூலம் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக நார்வே நாட்டின் நைனார்ஸ்க் இலக்கியத்தில் சாதனை புரிந்தவர் ஜான் ஃபாஸ். அவரது படைப்புகளுக்காக அவரை கவுரவிக்கும்விதமாக இந்த பரிசினை வழங்குகிறோம்" என அந்த அகாடமி தெரிவித்திருக்கிறது.

"மிகவும் அதிக சந்தோஷத்தில் இருக்கிறேன். அதே சமயம் சற்று அச்சமாகவும் உள்ளது. இதை இலக்கியத்திற்கான பரிசாக நான் பார்க்கிறேன்" என தனக்கு கிடைத்திருக்கும் விருதினை குறித்து ஜான் ஃபாஸ் தெரிவித்தார்.

1901லிருந்து தற்போது 2023 வரை இலக்கியத்திற்கான நோபல் பரிசு 116 முறை வழங்கப்பட்டிருக்கிறது.

Leave a Reply