• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஈரானில் ஆடை கட்டுப்பாட்டு அதிகாரிகளால் தாக்கப்பட்டு கோமாவிற்கு சென்ற சிறுமி 

மேற்காசியாவில் உள்ள அரபு நாடான ஈரானில் பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடுகள் தீவிரமாக அமலில் உள்ளது. இச்சட்டத்தை மீறும் பெண்களுக்கு கசையடியும், அபராதமும் தண்டனையாக உள்ளது. அந்நாட்டிற்கு வருகை தரும் அயல்நாட்டு பெண்களும் உடல் வெளியே தெரியும்படியான ஆடைகள் அணிவது தடை செய்யப்பட்டுள்ளது.

சுமார் 1 வருடத்திற்கு முன் மஹ்சா அமினி (Mahsa Amini) எனும் இள வயது பெண் ஆடை கட்டுப்பாட்டை மீறியதாக அந்நாட்டின் மத கட்டுப்பாட்டு அமலாக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விசாரணையின் போது மர்மமான முறையில் இறந்தார். இதனையடுத்து அந்நாட்டில் பெரும் போராட்டம் நடைபெற்றது. உலகளவில் பெண் உரிமை ஆர்வலர்கள் ஈரான் அரசின் பழமைவாத கட்டுப்பாடுகளை கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில் ஈரானின் கெர்மன்ஷா (Kermanshah) பகுதியை சேர்ந்த 16 வயதான அர்மிடா கராவந்த் (Armita Garawand) எனும் சிறுமி, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ஷோஹடா (Shohada) மெட்ரோ ரெயில் நிலைய சுரங்க நடைபாதையில் (subway) தனது நண்பர்களுடன் நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது அவரது உடையை கண்டு, அந்நாட்டின் மத கட்டுப்பாட்டு அமலாக்க பெண் அதிகாரிகள் அர்மிடா ஆடை கட்டுப்பாட்டை மீறியதாக குற்றம் சாட்டி அவரை தடுத்து நிறுத்தினார். அதற்கு பிறகு அவர்களால் அர்மிடா விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார். ஆனால், சிறிது நேரத்தில் அச்சிறுமி மயக்கமடைந்து 'கோமா' நிலைக்கு சென்று விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது அச்சிறுமி டெஹ்ரானின் ஃபாஹர் (Fajr) மருத்துவமனையில் கடும் பாதுகாப்புக்கிடையே சிகிச்சை பெற்று வருகிறாள்.

அச்சிறுமி குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக கோமா நிலைக்கு சென்று விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தாலும் அச்சிறுமியின் நண்பர்கள் இதனை மறுத்தனர். மத கட்டுப்பாட்டு அதிகாரிகளால் அச்சிறுமி கடுமையாக தாக்கப்பட்டதாகவும், அவளுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதனால் மயங்கியதாகவும் குற்றம்சாட்டினர்.

இதையடுத்து, கடந்த ஆண்டை போல் போராட்டம் வெடிப்பதை தடுக்க ஈரான் காவல்துறை தயார் நிலையில் உள்ளது.

Leave a Reply