• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடா செல்ல தயாராகும் மாணவர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி

கனடா

ஆண்டுதோறும், ஆயிரக்கணக்கான சர்வதேச மாணவர்கள், இந்திய மாணவர்கள் உட்பட, தங்கள் வாழ்க்கையையே மாற்றும் ஒரு முடிவை எடுக்கிறார்கள். பெரும்தொகை கடனாகப் பெற்று, பெற்றோரையும் தாய்நாட்டையும் பிரிந்து, கனடாவில் புது வாழ்வைத் துவங்கலாம் என்னும் கனவுடன் கனடாவுக்கு புறப்படுகிறார்கள் அவர்கள்.  

அதாவது, இந்த மாணவர்கள் வெறும் கல்விக்காக கனடாவுக்குச் செல்வதில்லை. கல்வி விசா பெற்று கனடாவுக்குச் சென்றாலும், கல்வியை முடித்ததும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்று, தங்கள் குடும்பத்தினரையும் கனடாவுக்கு வரவழைத்துவிடலாம் என்னும் ஆசையில்தான் பெரும்பாலான மாணவர்கள் கனடாவுக்குச் செல்கிறார்கள். இது மறுக்கமுடியாத உண்மை!

ஆனால், நிதர்சனம் என்னவென்றால், கனடாவில் கல்வி என்பது, கனடாவில் நிரந்தர குடியிருப்பு அனுமதிக்கான முதல் படி அல்ல என்கிறார்கள் செனேட்டர்களான Ratna Omidvar, Hassan Yussuff மற்றும் Yuen Pau Woo ஆகியோர்.

அவர்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை ஒன்று, நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கிடைக்கும் என்னும் உறுதிமொழியை நம்பி கனடாவுக்கு வரும் சர்வதேச மாணவர்கள் எதிர்கொள்ளும் குழப்பமான யதார்த்தத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்த மாணவர்களில் பலர், கல்வி ஆலோசகர்களின் தவறான உறுதிமொழிகளை நம்பி, நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெறுவதற்கான உத்தரவாதமான பயணச்சீட்டுதான் தங்களுடைய கல்விப் பயணம் என்ற நம்பிக்கையுடன் கனடாவுக்கு வந்து சேருகிறார்கள். ஆனால், இந்த நம்பிக்கையானது, கனடாவின் நிரந்தர குடியிருப்பு அமைப்பின் சிக்கலான மற்றும் கடுமையான போட்டி நிலவரத்துடன் ஒத்துப்போவதில்லை என்பதுதான் உண்மை என்கிறது அந்த அறிக்கை.

கனடாவில் கல்வி கற்பது சர்வதேச மாணவ மாணவியரின் வாய்ப்புகளை மேம்படுத்தும் அதே வேளையில், அது நிரந்தர குடியிருப்பு அனுமதிக்கு நேரடியான பாதையை உறுதியளிக்காது.

ஆய்வாளர்களின் அறிக்கை, 2000ஆம் ஆண்டு முதல், கனடாவிற்கு வந்த சர்வதேச மாணவர்களில் 30 சதவீதம் பேர் மட்டுமே அவர்கள் கனடாவுக்கு வந்த பத்தாண்டுகளுக்குள் நிரந்தர குடியிருப்பு அனுமதியை வெற்றிகரமாக பெற்றுள்ளார்கள் என்னும் உண்மை நிலையை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. இந்த விடயம், கனடாவில் கல்வி கற்கும் ஆர்வமுடைய சர்வதேச மாணவர்களுக்கும் அவர்களுடைய பெற்றோருக்கும் ஒரு எச்சரிக்கையாக அமைய வேண்டும் என்கிறது அந்த அறிக்கை.

ஆக, கனடாவில் எளிதாக நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்றுவிடலாம் என்னும் நம்பிக்கையிலிருக்கும் மாணவ மாணவிகள், கனடாவில் கல்வி கற்பதற்கே, வீடு கிடைப்பதில் பிரச்சினை, அதிக வாடகை என பல இடையூறுகளைக் கடந்தாகவேண்டும் என்ற உண்மையுடன், கனடாவில் கல்வி கற்க வரும் அனைவருக்கும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கிடைப்பதும் எளிதான ஒன்றல்ல என்பதையும் உணர்ந்துகொள்வது, பின்னாட்களில் ஏமாற்றமடையாமல் தப்புவதற்கு உதவக்கூடும் என்பதை மனதில் கொள்வது நல்லது. 

Leave a Reply