• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சொந்த நாடுகளுக்கே மீண்டும் திரும்பிவரும் புலம்பெயர்ந்தோர்

ஒரு காலத்தில் இந்தியர்கள் இலங்கைக்கும், மத்திய கிழக்கு நாடுகளுக்கும், அதேபோல இலங்கையர்கள் மத்திய கிழக்கு நாடுகள் முதல் பல்வேறு நாடுகளுக்கும் பணி நிமித்தம் பயணிப்பது சர்வசாதாரணமான ஒன்றாக இருந்தது. சிலோனுக்குப் போகிறேன் என இந்தியர்கள் கூறுவதும், இலங்கையர்கள் சவுதிக்குப் போகிறேன் என்று கூறுவதும் சாதாரண விடயங்களாக இருந்தன.  

மக்கள் வெளிநாட்களுக்குச் செல்வார்கள், கொஞ்ச காலம் வேலை செய்வார்கள், பிறகு சொந்த நாடு திரும்புவார்கள். ஆனால், பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக, ஒரு கட்டத்தில் வெளிநாடுகளுக்கே புலம்பெயர்ந்து அங்கேயே வாழத்துவங்கினார்கள் மக்கள்.

ஒரு காலத்தில் வெளிநாடுகளுக்குச் செல்வோருக்கு நல்ல வரவேற்பும் இருந்தது. சவுதி போன்ற நாடுகளில் செவிலியர் பணிக்கு இந்தியா போன்ற நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.

ஆனால், சமீப காலமாக வெளிநாட்டவர்களின் மன நிலையில் மாற்றம் காணப்படுகிறது. வேலைக்கு வருபவர்கள், நம் மக்களின் வேலையைப் பறிக்கிறார்கள். நம் மக்களுக்குக் கிடைக்கவேண்டிய மருத்துவ வசதி வெளிநாட்டுப் பணியாளர்களுக்குக் கிடைக்கிறது என்றெல்லாம் எண்ணத் துவங்கிவிட்டார்கள் பல நாட்டவர்கள்.

சமீபத்தில் ஜேர்மன் அரசியல்வாதி ஒருவர், புலம்பெயர்ந்தோர் நம் நாடுகளில் சொகுசாக வாழ்கிறார்கள். இலவசமாக பல் மருத்துவம் பார்த்துக்கொள்கிறார்கள். இவர்களால், நம் மக்களுக்கு கிடைக்கவேண்டிய மருத்துவசேவை பறிபோகிறது என்று கூறியிருந்தார்.

சமீபத்தில், அமெரிக்கப் பெண் ஒருவர், அமெரிக்காவில் வாழும் இந்தியர்களைப் பார்த்து, என்ன, எங்கு பார்த்தாலும் நீங்களே இருக்கிறீர்கள் என்று கூறி அவர்களிடம் சண்டையிட்ட சம்பவம் நினைவிருக்கலாம்.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப், நம் நாடு நம் மக்களுக்கே என தேர்தல் பிரச்சாரத்தில் முழங்கியதும் நினைவிருக்கலாம். ஆக, புலம்பெயர்ந்தோர் குறித்த வெளிநாட்டவர்களின் பார்வை மாறிவருகிறது.

இந்நிலையில், சமீப காலமாக Reverse migration என்னும் ஒரு விடயம் குறித்து ஊடகங்களில் அதிகம் விவாதிக்கப்படுகிறது. Reverse migration என்பது என்னவென்றால், வெளிநாடுகளில் வாழலாம் என முடிவு செய்து நாட்டை விட்டு புலம்பெயர்ந்து வெளிநாடொன்றிற்கு சென்றவர்கள், அப்படி புலம்பெயர்ந்த முதல் தலைமுறைப் புலம்பெயர்ந்தோரின் பிள்ளைகள், மீண்டும் சொந்த நாட்டுக்கே திரும்புவதாகும்.

சமீபத்தில், பிரான்ஸ் நாட்டிற்கு புலம்பெயர்ந்த ஊடகவியலாளர் ஒருவர், மீண்டும் தன் நாட்டுக்கே மறுபுலம்பெயர முடிவெடுத்த சம்பவம் பல பத்திரிகைகளில் கவனம் ஈர்த்துள்ளது.

அல்ஜீரியா நாட்டவரான Maher Mezahi, பிரான்சுக்கு புலம்பெயர்ந்து, அங்கு ஊடகவியலாளராக பணியாற்றிவந்த நிலையில், கலையும், உணவும், பருவநிலையும் பக்குவமாக இருந்தாலும், விரைவிலேயே, பிரான்ஸ் தனக்குரிய நாடல்ல என்பதை உணர்ந்துகொண்டதாக தெரிவிக்கிறார்.

அவர் ஏன் அந்த முடிவை எடுத்தார் என்பதை முழுமையாக அவர் விவரிக்காவிட்டாலும், பிரான்சில் தன்னால் தன் நாட்டிலிருப்பது போல் உணரமுடியவில்லை என்று அவர் கூறியுள்ளதால், பிரான்ஸ் அவரது கலாச்சாரத்துக்கு ஏற்றதாக இல்லை என கணிக்கமுடிகிறது.

ஆக, தன் சொந்த நாட்டுக்கே மறுபுலம்பெயர தான் தயாராகிவருவதாக தெரிவித்துள்ளார் Maher Mezahi. அல்ஜீரியா, ஒரு ஆப்பிரிக்க நாடு என்பது குறிப்பிடத்தக்கது! 
 

Leave a Reply