• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணையை இலங்கை விரைவில் பெறும் – ரஞ்சித் சியம்பலாபிட்டிய நம்பிக்கை

இலங்கை

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணையை இலங்கை விரைவில் பெறும் என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் முழுமையான பொருளாதார மீட்சி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என சர்வதேச நாணய நிதியம் நேற்று அறிவித்திருந்த நிலையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணையை விரைவாக பெற்றுக் கொள்வோம் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியின் மிகவும் கடினமான தருணங்களை வெற்றிகரமாகச் சமாளித்த அரசாங்கம், எதிர்வரும் நாட்களில் அதிலிருந்து முற்றாக விடுபடுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை அந்நிலையில் இருந்து மீண்டு வருவதாகவும் அனைத்தையும் சமாளிக்கும் திறன் இருப்பதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூயர் சுட்டிக்காட்டியதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

தற்போது நாடு எதிர்கொண்டுள்ள மேலும் சில தடைகளை கடக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பதில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்தார்.

நேற்றைய தினம், விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் கீழ் வேலைத்திட்டத்தின் முதல் மீளாய்வுக்கான இலங்கை விஜயத்தின் நிறைவில் கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய சர்வதேச நாணய நிதியதட்டின் குழுவினர் இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடல் தொடரும் என அறிவித்திருந்தது.

ஸ்திரத்தன்மைக்கான ஆரம்ப அறிகுறிகள் இருந்தபோதிலும், முழுமையான பொருளாதார மீட்சி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கிய பாதையில் கொண்டு செல்ல சீர்திருத்த நடவடிக்கை அவசியம் என்றும் வலியுறுத்தியிருந்தது.
 

Leave a Reply