• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஆனால் நிஜம் அதுதான்!

சினிமா

தமிழ் சினிமாவை பாரதிராஜாவுக்கு முன், பாரதிராஜாவுக்குப் பின் என்று இரண்டு காலக் கட்டங்களாகப் பிரித்துப் பார்க்க முடியும் என்று சொன்னால் கொஞ்சம் மிகையாக இருக்கும்.
ஆனால் நிஜம் அதுதான்!
கிழக்கே போகும் ரயில் படம் ரிலீஸ் ஆகி இன்றுடன் 45 ஆண்டுகள் முடிகின்றன. ரொம்பவும் சாதாரணமான கதை; ஆனால் கதையைச் சொல்வதற்குத் தேர்ந்தெடுத்த சம்பவங்களின் வரிசையும், காட்சிகளை அமைத்த விதமும் மாத்திரமே இந்தப் படத்தை ரொம்பவும் பேசப்பட்ட படமாக மாற்றியிருக்கிறது.
ஹீரோவின் அப்பா (ஜி. சீனிவாசன்) அவமானத்தில் தற்கொலை செய்து கொள்ளும் காட்சி உன்னதமான உதாரணமாக இருக்கும். நான்கே ஷாட்கள், ஆனால் மனசை உலுக்கும்!
ஷாட்-1 : சவரக் கத்தியைக் கழுத்தில் வைத்தபடி இடுப்பளவு தண்ணீரில் ஜி. சீனிவாசன் நிற்கிறார்
ஷாட்-2 : அவர் இல்லை; தண்ணீர் மட்டும் தெரிகிறது. குபுக் என்று ஒரு பெரிய சிவப்புக் குமிழ் பொங்கி மேலெழும்புகிறது.
ஷாட்-3 : ம்ம்ம்... ஹக்.... அ.. அஹ் என்று உயிருக்குப் போராடும் அடங்கிய குரல்
ஷாட்-4 : சூரிய உதயம். பின்னணியில் சங்கு ஊதும் சப்தம்
ஒரு மரணத்தைக் கூடக் கவிதையாகச் சொல்ல முடியுமா?
சுதாகரின் இரண்டு கைகளிலும் ராதிகா ஏறிக் கொள்ள, அவர் மூச்சைப் பிடித்துக் கொண்டு மெல்லத் தூக்குகிறார். பேலன்ஸ் தவறி சுதாகரின் தோளில் விழுந்து வழுக்கி இறங்கித் தரையைத் தொடுகிறார். இளையராஜாவின் பின்னணி இசை இல்லாவிட்டால் இந்தக் காட்சி ரொம்ப வக்கிரமாக இருந்திருக்கும்!
ஹீரோ எழுத வாய்ப்புக் கிடைத்து பெரிய கவிஞராக, எழுத்தாளராக, பலரால் வாசிக்கப்படுகிறவராக ஆகி முன்னேறி விட்டார் என்பதைச் சொல்ல வேண்டும். முன்னேற்றம் மந்திரத்தில் மாங்காயாக வந்தது போல் இருக்கக் கூடாது. ஆனால் இதை இரண்டு நிமிடங்களில் சொல்லி ஆக வேண்டும். இந்தச் சவாலை அற்புதமாகச் சமாளித்திருக்கிறார் பாரதிராஜா!
பதிப்பாளர் இவரை எழுதச் சொல்லிவிட்டுக் காத்திருக்க, நேரம் போய்க் கொண்டே இருக்க, கவிதை வரவில்லை.
‘கைகால் முகம் கழுவி சாப்பிட வாப்பா, அப்புறம் எழுதலாம்’ என்கிறார் பதிப்பாளர்.
வாஷ் பேசினில் கை அலம்பும்போது ஷவரிலிருந்து ஒவ்வொரு துளியாக தண்ணீர் சொட்டுகிறது. ஷவரைத் திறந்து விட்டு சில வினாடிகள் தண்னீரில் நனைந்து சொட்டச் சொட்ட அப்படியே கவிதை சொல்லிக் கொண்டு ஈரமாக ஹாலுக்கு வருகிறார் சுதாகர் :
சின்னஞ்சிறு துளியில் ஒரு உலகம் உருவாகும்

என் சிந்தை இனி கங்காநதி பொங்கும் இடமாகும்
சங்கம் வளர் தங்கத் தமிழ் சிங்கக் கவி ஊறும்
புவி எங்கும் தனி அங்கம் என எந்தன் புகழ் சேரும்
என்று அவர் கவிதை சொல்லும்போது உங்களுக்கு உண்டாகும் எமோஷனல் ஷாக்கில் இதைவிட விவரமாய் இதைச் சொல்ல முடியாது என்று தோன்றும்!
பாடல் எழுதியவர்கள் பெயரில் பாக்யராஜ் பெயரும் வருகிறது. எந்தப் பாட்டை எழுதியிருப்பார்?
கிழக்கெ போற ரயிலு வந்தாச்சு என்கிற வசனம் வரும்போது டைரக்டர் பெயர் வருகிறது. கடைசி ஃப்ரேமில் ஹீரோவையும், ஹீரோயினையும் ரயில் ஏற்றிக் கொண்டதும் விசில் ஊதி அனுப்பும் ஸ்டேஷன் மாஸ்டராக பாரதிராஜா திரையில் தோன்றுகிறார்.
திரைக்கதையும், ஷாட் பிரிக்கும் விதமும், கதை சொல்வதில் இசையமைப்பாளரின் பங்களிப்பும் நன்றாக இருந்தால் எந்த மொக்கைக் கதையும் வெற்றிப் படம் ஆகும் என்பதைச் சொல்லும் படம்.

 

KG Jawarlal
 

Leave a Reply