• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒக்டோபரில் வரலாறு காணாத சுற்றுலாப் பயணிகள் வருகை

இலங்கை

2026 ஒக்டோபர் மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது. 

இதன்படி, குறித்த மாதத்தில் 168,625 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இது 2025 ஒக்டோபர் மாதத்தில் பதிவான 165,193 சுற்றுலாப் பயணிகளின் வருகையுடன் ஒப்பிடுகையில் 2.1 சதவீத அதிகரிப்பாகும்.

அத்துடன், 2018 ஒக்டோபர் மாதத்தில் பதிவான 153,123 சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையையும் இம்முறை வருகை எண்ணிக்கை கடந்துள்ளது.

நாட்டுக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகளை அனுப்பும் நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது.

இதன்படி, ஒக்டோபர் மாதத்தில் இந்தியாவிலிருந்து 62,211 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இது மொத்த சுற்றுலாப் பயணிகள் வருகையில் 37 சதவீதமாகும். 

அதேவேளை, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 12,402 பேரும், சீனாவிலிருந்து 11,190 பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 8,509 பேரும், ஜேர்மனியிலிருந்து 8,027 பேரும் வருகை தந்துள்ளனர்.

மேலும், ரஷ்யாவிலிருந்து 6,750 பேரும், பிரான்ஸிலிருந்து 5,042 பேரும், பங்களாதேஷிலிருந்து 4,528 பேரும், அமெரிக்காவிலிருந்து 3,749 பேரும், மாலைதீவிலிருந்து 3,492 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் புள்ளிவிபரங்களின்படி, ஒக்டோபர் மாதத்தில் நாளாந்தம் சராசரியாக 5,440 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

ஒக்டோபர் 17ஆம் திகதி அதிகபட்சமாக 7,045 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

அத்துடன், ஒக்டோபர் 15ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அதிகபட்சமாக 42,739 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தப் புள்ளிவிபரங்கள், ஒக்டோபர் மாதத்தில் இலங்கையின் சுற்றுலாத்துறை தொடர்ச்சியான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதையும், இந்தியா பிரதான சுற்றுலா மூலச் சந்தையாகத் தொடர்ந்து விளங்குவதையும் உறுதிப்படுத்துகின்றன.
 

Leave a Reply