• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சவுதி சிறையில் அனோஜனைச் சந்தித்தார் இலங்கைத் தூதுவர்

இலங்கை

சவுதி அரேபிய இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வாத், திங்ட்கிழமை (26) அன்று தம்மாம் மத்திய சிறைச்சாலையில் வைத்து சிவராசா அனோஜனை சந்தித்தார். 

முன்னதாக இவருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையைச் சவுதி அரேபிய உச்ச நீதிமன்றம் இரத்து செய்து, இந்த வழக்கினை மீண்டும் விசாரணைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது, ​​தூதுவர், அனோஜனுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டதாக சவுதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் தெமரிவித்துள்ளது. 

வரவிருக்கும் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக அனோஜனுக்கு தேவையான தூதரக மற்றும் சட்ட உதவிகளை வழங்குவது குறித்தும், நீதித்துறை நடைமுறைகள் குறித்து அவருக்குத் தெளிவான விளக்கங்கள் கிடைப்பதை உறுதி செய்வது குறித்தும் இந்த உரையாடல்கள் அமைந்திருந்தாக தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

வரவிருக்கும் சட்ட நடவடிக்கைகளைப் புரிந்துகொள்வதன் முக்கியத்துவம் குறித்தும், சட்டப்பூர்வ நடைமுறைகளின் ஊடாக அனைத்து தொடர்புடைய விவகாரங்களும் முறையாகக் கையாளப்படுவதை உறுதி செய்வது குறித்தும் இந்தக் கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்பட்டது.

அனோஜனுடன், தூதரகம் தொடர்ந்து தூதரக ரீதியிலான தொடர்பைப் பேணி வருவதையும், நடைபெற்று வரும் சட்ட நடவடிக்கைகளின் போது அவருக்குத் தேவையான சட்ட மற்றும் தூதரக உதவிகளை வழங்குவதில் தூதரகம் உறுதியாக இருப்பதையும் தூதுவர் அமீர் அஜ்வாத் மீண்டும் இதன்போது உறுதிப்படுத்தினார். 

மேலும், சவுதி அரேபிய இராச்சியத்தின் நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் சட்ட நடைமுறைகளை முழுமையாக மதிக்கும் அதே வேளையில், இந்தச் செயல்முறை முழுவதும் அனோஜனுக்கு தேவையான ஆதரவு கிடைப்பதை உறுதிசெய்ய, அவருக்கும், அவரது சட்ட ஆலோசகர்களுக்கும், தூதரகத்திற்கும் இடையே நெருக்கமான ஒருங்கிணைப்பு இருக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

அத்துடன், தூதுவர் சிறைச்சாலை அதிகாரிகளையும் சந்தித்தார்; 

தூதரகத்திற்கு அவர்கள் வழங்கிய தடையற்ற ஒத்துழைப்பிற்காகவும், அனோஜன் சிறைத்தடுப்பில் இருந்த காலத்தில் அவரது நலனைக் கவனித்துக்கொண்டமைக்காகவும் அவர்களுக்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

தூதுவர் அமீர் அஜ்வாத்துடன், ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் (தூதரக விவகாரங்கள்) திரு. விந்தன முனசிங்க மற்றும் மொழிபெயர்ப்பாளர் சாஹுல் ஹமீது ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கெடுத்ததாகவும் சவுதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply