ஹோர்முஸ் நீரிணை மீதான கட்டுப்பாட்டை ஈரான் இழந்துவிட்டது - அமெரிக்க வெளியுறவு அமைச்சர்
ஹோர்முஸ் நீரிணை மீதான கட்டுப்பாட்டை ஈரான் முழுவதுவமாக இழந்துவிட்டது என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார்.
ஈரான் மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளில் நடைபெறும் போரால், எரிபொருள் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் எரிபொருள் விநியோகத்தில் கிரீஸ் நாடு முதன்மைப் பெற்றுள்ளது.
இதையடுத்து, கிரீஸ் மற்றும் அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு மற்றும் எரிபொருள் உள்ளிட்ட துறைகளில் முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ இன்று (அக். 7) கிரீஸ் நாட்டுக்குச் சென்றுள்ளார்.
இந்த நிலையில், கிரீஸில் செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் ரூபியோ, ஈரானிய அரசு ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டை முழுவதுமாக இழந்துவிட்டது எனத் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் கூறுகையில், “ஹோர்முஸ் நீரிணை இப்போது திறக்கப்பட்டுவிட்டது. மோதல்கள் தொடங்குவதற்கு முன்னதாக எண்ணெய் விநியோகம் எப்படி நடந்ததோ அதேபோல தற்போதும் நடைபெற்று வருகிறது. இதன்மூலம், அவர்கள் (ஈரான்) நீரிணைகளின் மீதான கட்டுப்பாட்டை முழுவதுமாக இழந்துவிட்டனர்” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, ஈரானின் அணுசக்தித் திட்டங்களுக்கு எதிராகத் தொடங்கபட்ட இந்தப் போரில், சர்வதேச எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையைக் கைப்பற்றுவதில் அமெரிக்கா தற்போது மும்முரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.






















