• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் 18 வயது இளைஞன் பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் கைது

கனடா

கனடாவின் யோக்டன் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர், பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

வன்முறை இணையக் குழுவொன்றுடன் தொடர்புடைய காணொளிகளைப் பதிவேற்றியதாக குறித்த இளைஞர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்குரிய இணைய நடவடிக்கைகள்" குறித்து கிடைத்த தகவலையடுத்து, பொலிஸாரின் வடமேற்கு பிராந்திய ஒருங்கிணைந்த தேசிய பாதுகாப்பு அமலாக்கக் குழு கடந்த செப்டம்பர் 24 ஆம் திகதி இந்த இளைஞரைக் கைது செய்தது.

'764' என்ற வன்முறைக் குழுவின் உறுப்பினராக, நிஜ உலக நடவடிக்கைகளைச் சித்தரிக்கும் தொடர்ச்சியான காணொளிகளை 'டெலிகிராம்' பயனரொருவர் பதிவேற்றியதாகக் கூறப்பட்டதையடுத்து விசாரணை தொடங்கப்பட்டது.

அத்துடன், 'டிஸ்கோர்ட்' மற்றும் 'டெலிகிராம்' ஆகியவற்றிலுள்ள 764 தொடர்பான பல கலந்துரையாடல் குழுக்களிலும் இந்த பயனர் குறிப்பிடப்பட்டிருந்ததை புலனாய்வாளர்கள் கண்டறிந்ததாக பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'764' என்ற இந்த அமைப்பானது கடந்த 2025 டிசம்பரில் கனடாவில் பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிடப்பட்டது.

சிறுவர்களைப் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தல், சுரண்டல், சுய தீங்கு விளைவித்தல் மற்றும் விலங்குகளைச் சித்திரவதை செய்தல் போன்ற கொடூரச் செயல்களில் ஈடுபடச் சிறுவர்களைக் கட்டாயப்படுத்தும் வன்முறை சர்வதேச இணையக் கட்டமைப்பு என பொலிஸார் இதனை விவரித்துள்ளனர்.

மேலும், இந்த அமைப்பின் உறுப்பினர்கள் தீவிர சித்தாந்த எண்ணங்களைக் கொண்டிருப்பதாகவும், சிறுவர்களை வன்முறைக்கு உட்படுத்தி அவர்களைத் தீவிரவாதிகளாக மாற்றி வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குற்றம் நடந்தபோது இவர் சிறுவனாக இருந்தமையினால், சிறுவர் குற்றவியல் நீதிச் சட்டத்தின் கீழ் இந்த 18 வயது இளைஞரின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை. அவர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், யோக்டன் மாகாண நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.  
 

Leave a Reply