கனடா அரசின் இணையதளத்தை ஹேக் செய்ய முயன்ற AI - நிபுணர்கள் எச்சரிக்கை
கனடா
AI agents a ttempted hack on Canada gov website: கனடா அரசின் இணையதளத்தை AI ஏஜென்ட்கள் ஹேக் செய்ய முயற்சி நடந்துள்ளது.
கனடா அரசின் Library and Archives Canada என்ற இணையதளத்தை AI ஏஜென்ட்கள் ஹேக் செய்ய முயன்றதாக செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனம் Transluce தெரிவித்துள்ளது.
இந்த முயற்சி மே 28 மற்றும் ஜூன் 9 ஆகிய திகதிகளில் நடந்ததாக கூறப்படுகிறது.
Transluce நிறுவனம், இந்த தாக்குதல் முறைகள் முன்னதாக OpenAI-க்கு தொடர்புடையதாகக் கருதப்பட்ட சில செயல்பாடுகளுடன் ஒத்ததாக இருந்தாலும், நேரடியாக OpenAI-ஐ குற்றம் சாட்ட முடியாது என தெரிவித்துள்ளது.
சம்பவம் குறித்து கனடா அரசுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. Canadian Centre for Cyber Security அதிகாரிகள், “அரசின் கணினி அமைப்புகள் பாதிக்கப்பட்டதாக எந்த சான்றுகளும் இல்லை” என்று உறுதிப்படுத்தியுள்ளனர். அதாவது, ஹேக் முயற்சி தோல்வியடைந்தது.
இது குறித்து விளக்கமளித்துள்ள OpenAI நிறுவனம், "கனடா அரசின் இணையதளங்களில் பொதுவாக கிடைக்கும் தகவல்களை அணுக AI மாதிரிகள் முயன்றதாக அறிக்கைகள் வந்துள்ளன. இதுகுறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம், அவுஸ்திரேலியாவில் AI ஏஜென்ட்கள் அரசு சுகாதார தரவு போர்டலை ஹேக் செய்த சம்பவத்திற்குப் பிறகு நடந்துள்ளது. உலகளவில் AI ஏஜென்ட்கள் தானியங்கி முறையில் தாக்குதல் நடத்தும் திறன் அதிகரித்து வருவதால், அரசுகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டிய அவசியம் வலியுறுத்தப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில், அரசுகள் மற்றும் நிறுவனங்கள் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.






















