பிரிட்டன் சவுதாம்ப்டன் கோவிலுக்குள் வன்முறை - கொலையாளி குறித்து பகீர் தகவல்
இலங்கை
பிரிட்டனின் சவுதாம்ப்டன் (Southampton) நகரில் 2025 டிசம்பர் மாதம் 18 வயது பல்கலைக்கழக மாணவர் ஹென்றி நோவக் (Henry Nowak) கொடூரமாகக் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி விக்ரம் திக்வாவுக்கு (Vickrum Digwa) அண்மையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தச் சூழலில், கொலையாளி விக்ரம் திக்வா குறித்துப் புதிய அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இந்த விபரீதக் கொலையைச் செய்வதற்கு சில மாதங்களுக்கு முன்பே, தான் வழக்கமாகச் செல்லும் உள்ளூர் சீக்கியக் கோவிலில் (Gurdwara) வைத்து மற்றொரு நபரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளது அம்பலமாகியுள்ளது.
சவுதாம்ப்டனில் உள்ள குருத்வாராவுக்குச் சென்று வந்த 25 வயது இளைஞர் ஒருவர் அண்மையில் அளித்த வாக்குமூலத்தில், கடந்த 2025 மே மாதத்தில் விக்ரம் திக்வா தன்னைத் தனியாக அழைத்துச் சென்று மிரட்டியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு வரும் இளைஞர்களின் தோற்றம், தலைப்பாகை அணியும் முறை போன்றவற்றைக் குத்திக் காட்டி விக்ரம் வம்பு இழுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அதுமட்டுமின்றி, அவனது ஆக்ரோஷமான நடத்தை காரணமாக ஏற்கனவே 2023ஆம் ஆண்டில் மற்றொரு குருத்வாராவில் இருந்து அவன் நிரந்தரமாகப் நீக்கப்பட்டிருந்தான் என்ற உண்மையும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஆயுதங்கள் மீது தீவிர மோகம் கொண்ட விக்ரம் திக்வா, சீக்கிய மத வழக்கத்தைக் காரணம் காட்டி எப்போதும் 21 சென்டிமீட்டர் நீளமுள்ள பெரிய கத்தியை (Dagger) தன்னுடனேயே வைத்திருந்துள்ளான். கடந்த டிசம்பர் 3ஆம் தேதி நள்ளிரவில், சாலையில் தனியாக நடந்து வந்த மாணவர் ஹென்றியை இந்த ஆயுதத்தால் 5 முறை கொடூரமாகக் குத்திப் படுகொலை செய்தான்.
மேலும், போலீசாரிடம் இருந்து தப்பிக்கத் தான் இனவெறித் தாக்குதலுக்கு ஆளானதாகப் பொய் நாடகமாடியதுடன், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஹென்றியைத் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்து விகாரமாக ரசித்துள்ளான் என்பதும் நீதிமன்ற விசாரணையில் நிரூபிக்கப்பட்டது.
விக்ரம் திக்வாவின் இந்த கொடூரச் செயலுக்கு அவனது தாயாரும் உடந்தையாக இருந்து, கொலைக்கு உபயோகித்த கத்தியைச் சம்பவ இடத்திலிருந்து மறைக்க உதவியுள்ளார். இதையடுத்து, விக்ரம் திக்வாவுக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அவனது தாயாருக்குக் குற்றவாளிக்கு உதவியதற்கான தண்டனையும் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், “கோவிலில் விக்ரம் என்னை மிரட்டிய போதே காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், இன்று அப்பாவி மாணவர் ஹென்றியின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும்” என உள்ளூர் மக்கள் கவலை வெளியிட்டு வருகின்றனர்.























