• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிம்புவின் 51-வது படத்துக்கு இயக்குநர் ரெடி

சினிமா

நடிகர் சிம்பு தற்போது கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்து வரும் படம் ‘அரசன்’. இப்படத்தை தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 6-ந்தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்காக படப்பிடிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இது சிம்புவின் 49-வது படமாகும்.

இதனிடையே, இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு தனது 50-வது படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை சிம்புவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 'ஆத்மன் சினி ஆர்ட்ஸ்' தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இப்படத்திற்கான பணிகள் இன்னும் தொடங்கவில்லை.

இந்த நிலையில், சிம்புவின் 51-வது படம் குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

சிம்புவின் 51-வது படத்திற்காக நாங்கள் தயாராக இருக்கிறோம். சிம்புவும் தயாராக இருக்கிறார். மேலும் அஸ்வத் மாரிமுத்துவின் திரைக்கதையும் தயாராகிவிட்டது. ஆனால் படங்களின் வரிசை மாறக்கூடும். பிப்ரவரி 2027-க்குள் படப்பிடிப்பைத் தொடங்க விரும்புகிறோம். இருப்பினும் இது அஸ்வத்தின் பிற பட வேலைகள் மற்றும் சிம்பு தனது தற்போதைய பணிகளை முடிப்பதை பொறுத்தே அமையும் என்று கூறியுள்ளார்.

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தற்போது நடிகர் ரஜினிகாந்தின் ‘தலைவர் 173’ படத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது.
 

Leave a Reply