ஒன்டாரியோவில் கோர விபத்து - 6 வயது சிறுவன் பலி
கனடா
கனடாவின் டொராண்டோவிற்கு வடமேற்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முல்மூர் (Mulmur) பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மதியம் இடம்பெற்ற கோர வாகன விபத்தில் 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
மேலும் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை மதியம் சுமார் 1:30 மணியளவில் கவுண்டி ரோடு 17 மற்றும் கவுண்டி ரோடு 19 சந்திப்பில் ஒரு பயணிகள் வாகனமும் , ஒரு பிக்கப் ட்ரக் ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகின.
பயணிகள் வாகனத்தில் ஆறு பேர் பயணம் செய்துள்ளனர், பிக்கப் ட்ரக் வாகனத்தில் ஓட்டுநர் மட்டும் இருந்துள்ளார்.
இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் ஒன்டாரியோ மாகாண காவல்துறை (OPP) சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
விபத்தில் பலத்த காயமடைந்த சிறுவன் உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
எனினும், சிகிச்சை பலனின்றி அவன் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
30 வயதுடைய ஒரு ஆண் மற்றும் 2 வயது குழந்தை ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஹெலிகாப்டர் மூலம் டொராண்டோ பகுதியில் உள்ள அதிதீவிர சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பிக்கப் ட்ரக் ஓட்டுநர் மற்றும் பயணிகள் வாகனத்தில் இருந்த மற்றவர்கள் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இவர்களது காயங்களின் தன்மை குறித்து தெளிவான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.





















