ஜன நாயகன் படத்தில் என்ன பிரச்சனை இருக்கிறது என்பதை சொல்ல மறுப்பது தான் பிரச்சனை- இயக்குநர் அமீர்
சினிமா
மதுரையில் ரம்ஜான் திருநாளை முன்னிட்டு ஜாக் அமைப்பு இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். இந்த தொழுகையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்றனர். அவர்களுடன் இயக்குநர் அமீரும் பங்கேற்று தொழுகையில் ஈடுபட்டார்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் அமீரிடம், ‘ஜன நாயகன்’ பட விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு இயக்குநர் அமீர் கூறுகையில், தேர்தல் ஆணையம் என்பது உச்சப்பட்ட அதிகாரம் கொண்டது. அந்த ஆணையம் ஒரு முடிவை எடுத்து இருக்கும் போது அதற்கு கட்டுப்பட வேண்டியது அனைவரது பொறுப்பு. இதற்கு முன்பு வரை தேர்தல் நேரத்தில் தேர்தல் ஆணையத்தால் ஒரு படம் நிறுத்தப்பட்டதாக எனக்கு நினைவு இல்லை. முதல் முறையாக தமிழகத்தில் அப்படி ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. த.வெ.க. தலைவர் திரைப்படம் தடைசெய்யப்பட்டுள்ளது. அதற்கான காரணத்தை தணிக்கை துறையும் சொல்லவில்லை. அவங்களும் சொல்லவில்லை. ‘விஸ்வரூபம்’ திரைப்படம் வரும் போது அந்த படத்தில் மைனாரிட்டி மக்களை பாதிக்கப்படக்கூடிய காட்சிகளும், வசனங்களும் இருந்தது என்பதால் அப்படத்தை பார்த்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஜன நாயகனில் என்ன இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. ஏன்னா அது ரீமேக் படம். தெலுங்கில் இருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட ஒரு படம். அந்த படத்தில் அப்படி என்ன காட்சி இருந்தது என்று இரு தரப்பும் சொல்லாதது தான் கேள்விக்குறியாக உள்ளது. படத்தில் என்ன பிரச்சனை இருக்கிறது என்பதை சொல்ல மறுப்பது தான் பிரச்சனை. அடிக்கிறவர்கள் தான் சொல்லவில்லை என்றால் அடி வாங்குகிறவர்களாவது உண்மையை சொல்ல வேண்டும். நாம் யூகத்தில் பேச முடியாது என்றார்.






















