• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அகதிகள் பிரச்சினையை அரசியல்மயமாக்குவதைத் தவிர்க்கவும் - இந்தியாவிடம் இலங்கை வேண்டுகோள்

இலங்கை

உள்நாட்டுப் போரின்போது நாட்டை விட்டு வெளியேறி, தற்போது தமிழ்நாட்டில் அகதிகளாக வசித்துவரும் அனைவரையும் ஏற்றுக்கொண்டு ஆதரவளிக்க இலங்கை தயாராக உள்ளது என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க ‘தி இந்து’ பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை அகதிகளை தங்களது “அரசியல் பிரச்சாரத்திற்கான ஒரு கருவியாக” பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் இந்திய மற்றும் தமிழ்நாடு அரசுகளை அவர் வலியுறுத்தினார்.

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசித்து வரும் இலங்கைத் தமிழர்கள் தொடர்பான பிரச்சினைகளில் மத்திய அரசின் தலையீட்டைக் கோரி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு 2026 பெப்ரவரி 15, 2026 கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். 

இலங்கைத் தமிழர்களின் குடியுரிமை விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதைத் தடுக்கும் நிர்வாக உத்தரவுகளை இரத்து செய்யுமாறு புது டெல்லியைக் அந்தக் கடிதத்தில் கோரியதோடு, தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் சரிபார்க்கப்பட்ட அடையாள ஆவணங்களின் அடிப்படையில் செய்யப்படும் குடியுரிமை அல்லது நீண்ட கால விசா விண்ணப்பங்களுக்கு, பொருத்தமான இடங்களில் கடவுச்சீட்டு மற்றும் விசா தேவைகளைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் ஸ்டாலின் ஒரு நிர்வாக விளக்கத்தைக் கோரியிருந்தார். 

ஸ்டாலினின் கடிதத்தின்படி, தமிழ்நாடு முழுவதும் முகாம்களுக்கு உள்ளேயும் வெளியேயும் சுமார் 89,000 இலங்கை அகதிகள் வசித்து வருகின்றனர். 

அவர்களில் கிட்டத்தட்ட 40% பேர் அங்கேயே பிறந்தவர்கள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டிலிருந்து அகதிகளாகத் திரும்புவோர் குறித்து இலங்கை அரசின் தற்போதைய நிலைப்பாடு பற்றிக் கேட்கப்பட்டபோது அமைச்சர் பிமல் ரத்நாயக்க இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

2009 மே மாதம் உள்நாட்டுப் போர் முடிவடைந்தது முதல் 2025 ஜூன் வரையிலான 16 ஆண்டு காலப்பகுதியில், தமிழ்நாட்டிலிருந்து 18,542 பேர் இலங்கைக்குத் திரும்பியதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், நாடு திரும்பு விரும்பும் எவரையும் வரவேற்பதற்கு நாங்கள் நிச்சயமாகத் தயாராக இருக்கிறோம்.

எனினும், அவர்களில் சிலர், இந்தியாவில் பிறந்தவர்கள், அல்லது பல தசாப்தங்களாக அங்கு வாழ்ந்து, படித்து, பணியாற்றியவர்கள், அல்லது ஒரு இந்தியரைத் திருமணம் செய்தவர்கள், இந்தியக் குடியுரிமை கோர முடிவு செய்தால், அந்த நிலைப்பாட்டை எங்களால் மறுக்க முடியாது. 

அங்கு குடியுரிமை கோருவது அவர்களின் யதார்த்தமும் உரிமையும் ஆகும்  என்று சுட்டிக்காட்டினார்.

மேலும், இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகளுக்கு அவர் விடுத்த செய்தியில், இந்திய அரசாங்கத்திற்கும் தமிழ்நாடு அரசாங்கத்திற்கும் எனது தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால், தயவுசெய்து அகதிகளைத் தேர்தல்களைச் சுற்றியுள்ள அரசியல் பிரச்சாரத்திற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டாம். 

அவர்கள் ஏற்கனவே பெரும் துன்பத்தை அனுபவித்துள்ளனர்; அவர்களின் கோரிக்கையை நாம் கவனத்துடனும் உணர்வுப்பூர்வமாகவும் கையாள வேண்டும் என்று வலிறுயத்தினார்.
 

Leave a Reply