• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பழைய தமிழ் சினிமாவையும் சற்று திரும்பி பார்ப்போம்!

சினிமா

பொதுவா, கலையுலக ரசிக பெருமக்கள் பழைய அயல்நாட்டு திரைப்படங்களைப் பற்றி எழுதினால் நம்மை பெருமையோடும் ஆச்சர்யத்தோடும் பார்ப்பார்கள். அதுவே, பழைய தமிழ் திரைப்படங்களைப் பற்றி எழுதினால் நம்மை பழமைவாதி என்று நினைத்துக் கொள்வார்கள்.
புதுமையில் நாம் தெளிவாக இருக்க வேண்டுமானால், பழமையை நாம் அறிந்து கொள்ளத்தான் வேண்டும்.
1980-90 ஆம் ஆண்டுகளில் வந்த தமிழ் திரைப்படங்களில், 'தேவடியா','தேவடியா பையன்',என்ற வார்த்தையை உச்சரிப்பதே படுபாதகமான செயலாக இருந்தது.ஆனால்,தியாகராஜபாகவதர் நடித்த, 'ஹரிதாஸ் ',திரைப்படத்தில், 'தேவடியா',என்கிற வார்த்தையை எவ்வளவு அழுத்தம் திருத்தமாக உச்சரிக்கிறார்கள் தெரியுமா.
ஹரிதாஸ் படத்தின் காட்சிப்படி,தியாகராஜபாகவதர் தன்னுடைய மனைவி இல்லாத நேரம் பாத்து டி.ஆர்.ராஜகுமாரியை அழைத்து வந்து கோஷ்டி கானத்தோடு நடனமாட விடுவார்.'மன்மதலீலையை வென்றார் உண்டோ',என்ற புகழ்மிக்க பாடல் இடம்பெற்ற காட்சியும் இதுதான்.
பாகவதர் பாட, டி.ஆர்.ராஜகுமாரி நடனமாடுவார்.பாட்டின் முடிவில் பாகவதரின் மனைவி வந்துவிடுவார்.ஒளிந்திருந்து தன்னுடைய வேலைக்காரனிடம்,'யாராடது',என்பாள்.வேலைக்காரன்,"தேவடியா',என்பான்.பாகவதரின் மனைவி,'ஆம்பளத் தேவடியாளா,பொம்பளத் தேவடியாளா',என்பாள்.அவன் சிரித்துக்கொண்டே, 'பொம்பளத் தேவடியா,அசல் பொம்பளத் தேவடியா',என்பான்.
அந்த வேலைக்காரன் வசனத்தை உச்சரிக்கும் விதமும் அட்டகாசமா இருக்கும்.
கோபம் கொண்டு புயலாக உள்ளே நுழைவாள் 'சம்சாரி வீட்ல தேவடியா',என்று சொல்லிக் கொண்டே அடித்து விரட்டுவாள்.
டி.ஆர்.ராஜகுமாரி வெளியே வந்து, 'இங்கே ஏற்கெனவே ஒரு தேவடியா இருக்கும் போது,என்னை எதற்காக இங்கே அழைத்து வந்தாய்',என்று தனது கைத்தடியிடம் கோபமாக கேட்பாள்.
மிகுந்த சுவாரஸ்யமான காட்சியது.அதனாலதான் இந்தப் படம் மூன்று தீபாவளியைத் தாண்டி ஓடியிருக்கு.
நாம இன்னமும் Beep songக்கு கத்திக்கிட்டு இருக்கோம்.அந்தக் காலத்துல எப்படி அவ்வளவு துணிச்சலா அப்படி எழுதினாங்க,சென்சார்ல எப்படி விட்டாங்க என்பதுதான் மிகுந்த ஆச்சர்யம்.நாமதான் இன்னமும் பழமையிலே ஊறியிருக்கோம்.அவங்கதான் முற்போக்குவாதிகள்.
பாகவதர் நடித்த அசோக்குமார் திரைப்டக்கதையே வித்தியாசமானதுதான்.
இப்படி,பழைய படத்தை நான் திரும்பி பார்த்தனாலதான் ஆச்சர்யமான காட்சிகள் எல்லாம் என் கண்ணுல பட்டுது.சினிமாக்காரங்க பழசு புதுசு ரெண்டையும் கலந்து கட்டி அடிக்கணும்.

இப்போ,நடிகர்திலகம் சிவாஜிகணேசன்  நடித்த ,'ரங்கோன் ராதா',திரைப்படத்தை சற்று திரும்பிப் பார்ப்போம்.
தமிழ்சினிமாவில் நடிகராக நுழைய விரும்புவர்கள், கதாநாயகனாக உயரத்தான் விரும்புவார்கள்.
எம்ஜிஆர் 1936ஆம் ஆண்டு, 'சதிலீலாவதி',என்னும் திரைப்படத்தில் ஒரு சிறு வேடம் ஏற்று நடித்து நுழைந்தார்.11 ஆண்டுகள் போராடிய பிறகு ,'ராஜகுமாரி',திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக உயர்ந்தார்.அதன்பிறகு எல்லாமே அவருக்கு ஏறுமுகம்தான்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், 'அபூர்வ ராகங்கள்',திரைப்படத்தில் சிறுகதாபாத்திரத்தில் அறிமுகமாகி, வில்லனாக வளர்ந்து,கதாநாயகனாக உயர்ந்தார்.
கமல்ஹாசன் அவர்களும் சிறு சிறு வேடங்களில் நடித்தப் பிறகே கதாநாயகனாக உயர்ந்தார்.
ஆனால்,சிவாஜியின் கதை அப்படியல்ல.முற்றிலும் மாறுபட்டது.எந்தக் கதாநாயகனுக்கும் இல்லாத துணிச்சல் சிவாஜிக்கு மட்டுமே இருந்தது.
'பராசக்தி',படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி புகழின் உச்சிக்கு சென்றார்.இப்படி ஒரே படத்தில் கதாநாயகனாக உயர்ந்தவர் கதாநாயகனாகத்தான் நடிப்பேன் என பிடிவாதம் பிடிக்கவில்லை.
எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை ஏற்று அக்கதாபாத்திரத்திற்கு உயிரூட்டினார்.
1952ஆம் ஆண்டு, 'பராசக்தி',திரைப்படம் ரிலீஸ்.1956ஆம் ஆண்டு, 'ரங்கோன் ராதா',திரைப்படம் ரிலீஸ்.இந்த இடைப்பட்ட நான்கு வருடங்களில் 37 படங்களில் நடித்து 38 வது திரைப்படம்தான்,'ரங்கோன் ராதா'.
இந்த நான்கு வருடங்களில் அவர் ஏற்று நடித்த எதிர்மறை கதாபாத்திரங்கள்.
அந்தநாள்:சொந்த தாய்நாட்டையே காட்டிக் கொடுக்கும் தேசத்துரோகியாக
திரும்பிப்பார்:பெண்சுகம் மட்டுமே உலகின் பேரானந்தம் என சுற்றித் திரியும் காமுகனாக.
கூண்டுக்கிளி:நண்பனின் மனைவியை அடையத் துடிக்கும் துரோகியாக.
பெண்ணிண் பெருமை:சகோதரனை கொடுமைப்படுத்தும் அண்ணனாக.
ரங்கோன் ராதா:பணத்துக்காக கொழுந்தியாளை மணப்பதற்காக மனைவியை கொடுமைப் படுத்தும் கணவனாக.
மேலே சொன்ன எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டே,
மனோகரா,அமரதீபம்,கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி,தெனாலிராமன்,மங்கையர்திலகம்,மக்களைப் பெற்ற மகராசி -என கதாநாயகனாகவும் நடித்துக் கொண்டு வருகிறார்.
இரண்டையும் சமப்படுத்தி புகழை கெடுத்துக் கொள்ளாமல் வளர்த்துக்கொண்டே செல்கிறார்.
எந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தாலும் அதற்கு சிறப்பு சேர்ப்பவனே சிறந்த நடிகன்.
எந்தவொரு கதாநாயகனும் ஒரே படத்தில் கதாநாயகனாக உயர்ந்த பிறகு, இப்படியான எதிர்மறை கதாபாத்திரங்களில் நடிக்கவே சம்மதிக்க மாட்டார்கள்.தன் நடிப்பின் மீது அபார தன்னம்பிக்கை உள்ளவனால் மட்டுமே, எந்தப் பாத்திரத்தை ஏற்று நடித்தாலும், தன் புகழுக்கு பங்கம் விளையாது என்ற எண்ணம் வரும்.இதில் முக்கியமான விஷயம், மிகுந்த பிஸியாக இருக்கும் காலகட்டத்திலேயே, இப்படியெல்லாம் சோதனை முயற்சிகளில் இறங்கி வெற்றி பெற்றதுதான் பெரும் ஆச்சர்யம்.
தமிழ்த்திரையுலகில் கதாநாயகனாக உயர்ந்தவர்கள், பின்பு வாய்ப்பில்லாத பொழுது வில்லனாக நடிக்க ஆரம்பிப்பார்கள்.இந்த வகையில் ஜெய்சங்கர்,ரவிச்சந்திரன்,முத்துராமன் போன்றோரை  சொல்லலாம்.சிவாஜி இவர்களுக்கெல்லாம் நேர்எதிர்.புகழின் உச்சியில் இருக்கும்போதே வில்லனாக நடித்து பெயரை சம்பாதித்தவர்.
அறிஞர் அண்ணா எழுதிய நாவல்தான்,'ரங்கோன் ராதா'.கலைஞர் திரைக்கதை வசனம் எழுதி தயாரித்தார்.இயக்கியவர்,A.காசிலிங்கம்.
'ரங்கோன் ராதா'-சிவாஜி,பானுமதி,எஸ்.எஸ்.ஆர் நடித்த திரைப்படம்.
சிவாஜி பராசக்தியில் நடிக்கும்பொழுது வயது 24தான்.இந்தப் படத்தில் நடிக்கும் பொழுது வயது 28.28 வயதில் 60 வயது முதியவனாக நடித்தார்.இவருடைய மகனாக எஸ்.எஸ்.ஆர்.நடித்தார்.எஸ்.எஸ்.ஆர்.சிவாஜிக்கு ஏழு வயது மூத்தவர்.7 வயது மூத்தவருக்கு 28 வயதில் 60 வயது கிழவனாக நடித்தார்.
கதை:பெரும் செல்வந்தர் சிவாஜி.பணத்தாசை பிடித்தவர்.பணத்துக்காக எதையும் செய்யக் கூடியவர்.இவருடைய மனைவியாக பானுமதி.பானுமதியின் தங்கை எம்என்.ராஜம்.மாமனாரின் சொத்துக்களை அடைவதற்காக கொழுந்தியாளையே திருமணம் செய்ய திட்டம் போடுவதுதான் கதை.
அவர் போடும் திட்டங்களினால் கொலை ஒன்று விழ, கணவனை காப்பாற்றும் நோக்கில் மனைவியும் ஒத்துழைத்து,பிறகு பிரிந்து 20 வருடங்கள் கழித்து மகன் எஸ்.எஸ்.ஆர்.மூலம் ஒன்று சேர்வதுதான் கதை.
படம் நல்லா சுவாரஸ்யமாத்தான் போகும்.ஏன்னா சிவாஜி,பானுமதியின் நடிப்பு.
க்ளைமாக்ஸ் காட்சியில் பானுமதி தன்னுடைய மகன் எஸ்.எஸ்.ஆரிடம்,'உங்கப்பா சோகமா நடிப்பதிலே கில்லாடிடா',என்பார்.காட்சியிலேயே பானுமதி அவரை மறைமுகமாக பாராட்டுவார்.
பானுமதி அவர்கள் தமிழக அரசின் சிறந்த நடிகரை தேர்ந்தெடுக்கும் குழுவில் அவர் தலைவராகஇருந்த பொழுது ,'நான் தலைவராக இருக்கும் வரையில், தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதை சிவாஜிக்கு மட்டுமே கொடுப்பேன்',என்று வெளிப்படையாக சொன்னார்.
சிவாஜியின் வில்லத்தனமான நடிப்பை பார்க்க விரும்புவர்கள் இந்தப்படத்தை அவசியம் பார்க்க வேண்டும்.
எனது மணி டாக்கீஸ் You tube சேனலையும் பாருங்கள்.ஆதரவு தாருங்கள்.என்னால் முடிந்த அளவிற்கு technical wise improve செய்து இருக்கிறேன்.பார்த்து எப்படியிருக்கிறது என்று சொல்லுங்கள்.
நான் மற்றவர்களின் சேனலுக்குள் நுழையும் பொழுதே Subscribe செய்து விட்டுதான் நுழைவேன்.அதனால்,எனக்கு எவ்வித இழப்பும் இல்லை என்பதே காரணம்.
நம்மால் இயன்ற உதவியை மற்றவர்களுக்கு செய்வதை கொள்கையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

நன்றி,வணக்கம்.
சே மணிசேகரன்
 

Leave a Reply