• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சினிமாப் புகழ் நிரந்தரமற்றது;நீர்க் குமிழியைப் போன்றது!

சினிமா

இக்கட்டுரைக்கு சாட்சியாக சில நடிகர்களின் புகழின் உச்சியையும், வீழ்ச்சியையும் காண்போம்.

கே.பி.கேசவன்:1936ஆம் ஆண்டு எல்லீஸ்.ஆர்.டங்கன் இயக்கிய, 'இரு சகோதரர்கள்',எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு பெரும் புகழ் பெற்றுள்ளார்.
'இரு சகோதர்கள்',திரைப்படத்தில் எம்ஜிஆர் அவர்கள் ஒரு சிறு வேடத்தில் நடித்துள்ளார்.மற்றும் டி.எஸ்.பாலையா,எம்.ஜி.சக்ரபாணி போன்றோர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்த கே.பி.கேசவன் அவர்களின் ஒரு சிறு புகைப்படம் கூட கிடைக்கவில்லை என்பதுதான் துயரம். வெறும் சினிமாப் புகழ் நிரந்தரமற்றது என்பதை எம்ஜிஆரே ஒரு பேட்டியில்,
"நான் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த பொழுது, அண்ணன் கே.பி.கேசவன் அவர்கள் மிகப் பிரபலமான நடிகராக இருந்தார்.
ஒரு முறை சென்னை பாரிமுனையில் இருந்த எஸ்பிளனேடு தியேட்டரில் படம் பார்க்க சென்றிருந்தோம்.படம் முடிந்து வெளி வந்த பொழுது, அண்ணன் கேசவனை ரசிகர்கள் அடையாளம் கண்டுகொண்டு ரசிகர்கள் அவரை மொய்த்து விட்டார்கள்.இரண்டு கைகளாலயே அவரை தூக்கிக் கொண்டு வெளியே வந்தேன்.
காலம் சுழன்றது.அண்ணன் கே.பி.கேசவனுக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது.அதே சினிமா தியேட்டர்.ரசிகர்களின் கூட்டம்.இப்போ, என்னை ரசிகர்களிடமிருந்து விடுவித்துக் கொண்டு வெளியே வருகிறார்.இதுதான் சினிமாப் புகழ்",என்கிறார்.
தியாகராஜ பாகவதர்:தமிழ் சினிமாவின் முதல் சூப்பர்ஸ்டார்.பெண்களால் ஆராதிக்கப்பட்ட முதல் கதாநாயகன்.இரு காதுகளிலும் வைரக் கடுக்கண் மின்னும்.அணியும் உடைகள் பளபளக்கும்.
இவரைப் போல் புகழின் உச்சியில் ஏறி நின்றவரும்,கீழே விழுந்தவரும் எவருமில்லை.

நேருவும்,தியாகராஜபாகவதரும் ஒரே ரயிலில் வந்த பொழுது, மக்கள் நேருவைக் காட்டிலும் பாகவதரைப் பார்க்கவே அலைமோதினர்.
அப்படியே காட்சி திரும்புகிறது.பாகவதர் ரயிலில் இருந்து இறங்குகிறார்.அவரை மக்களுக்கு அடையாளம் தெரியாத அளவிற்கு அவருடைய உருவமே மாறியிருக்கிறது.

ரிக்சாவில் ஏறுகிறார்.அந்தக் காலகட்டத்தில் அவருக்கு சிறிது பார்வைக் குறைபாடும் ஏற்பட்டு இருக்கிறது.ரிக்சாக்காரர் பாகவதர் பாட்டைப் பாடுகிறார்.பாகவதர் லேசாக விரக்தியான சிரிப்பை உதிர்த்து விட்டு அவனிடம், "ஏம்ப்பா இந்தப் பாட்டை யார் பாடியது",என்று கேட்கிறார்.அவன் சட்டென திரும்பி,"என்னப்பா நீ இந்தப் பாட்டைப் போய் யார் பாடுதுன்னு கேக்கறியேப்பா,தியாகராஜ பாகவதர் பாடியதுப்பா",என்று சொன்னவுடன் பாகவதர்  தன்னுடைய விரக்தியான சிரிப்பை அவனுக்கு பதிலாக தருகிறார்.
இதுதான்,சினிமாப் புகழின் லட்சணம்.

பாகவதரின் வாழ்க்கையில் நடந்த இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து கற்பனையும் கலந்து எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களும் ஒரு அருமையான சிறுகதை ஒன்றை எழுதியுள்ளார்.
ராமராஜன்:அன்றைக்கு கிராமத்து தாய்க்குலங்களின் மனதிற்குள் புகுந்தவர் நடிகர் ராமராஜன் அவர்கள் மட்டுமே.

தொலைக்காட்சி பெட்டி வரத் தொடங்கிய காலகட்டத்தில்,கிராமத்து சாவடியில் ஒளியும்-ஒலியும் நிகழ்ச்சியில் ராமராஜன் பாடலைப் போட்டவுடன் வாண்டுகளும் இளைஞர்களும் கைத்தட்டி மகிழ்வார்கள்.அப்படியொரு செல்வாக்கு கிராமத்து மனிதர்களிடம் ராமராஜனுக்கு இருந்தது.தொடர்ச்சியாக எல்லாப்படங்களுமே ஹிட்தான்.இசைஞானி இளையராஜாவின் இசைதான் இவருக்கு மிகுந்த பக்கபலமாக இருந்துள்ளது.ஒரு முறை ரஜினி இளையராஜாவிடம்,"என்னங்க சாமி!ராமராஜனுக்கு மட்டும் ரொம்ப ஸ்பெஷலா பாட்டைப் போடறீங்களே",என்றதற்கு,இளைய ராஜா அவர்கள்,"ஆமாம் சாமி!நீங்க வளர்ந்துட்டீங்க,அவன் வளர்ற பையன், எங்க ஊர்க்கார பையன் வேற",என்று சிரித்துக் கொண்டே சொல்லியிருக்கிறார்.
ஒரு கட்டத்தில் ரஜினி படங்களின் வசூலைத் தாண்டி, இவருடைய படங்களின் வசூல் நின்றிருக்கிறது.

இவருடைய வெற்றிக்கு தனித்துவமான நடிப்பாற்றலோ,வசீகரமான தோற்றமோ எதுவுமோ நாம் குறிப்பிட்டு சொல்லிவிட முடியாது.திரைப்படத்துறையிலும் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராகவும் ஆகிவிட்டார் என்பதுதான் ஆச்சர்யம்.
சினிமாப் புகழ் நீர்க்குமிழ் போன்றது என்பதற்கு ராமராஜன் அவர்களும் ஒரு உதாரணம்தான்.

ஒரு முறை துணிக்கடையில் எனக்கான சட்டைகளை தேர்வு செய்துக் கொண்டிருந்த பொழுது, கடையின் விற்பனைப் பெண் ஒரு சட்டையை எடுத்துக் கொண்டு வந்து காட்டினார்.அந்த சட்டையைப் பார்த்தவுடன் எனக்கு சிரிப்பு வந்துருச்சு.மஞ்சள் கலரில் மிகவும் பளிச்சென்று இருந்தது.நான்,"என்னம்மா,ராமராஜன் சட்டை மாதிரி இருக்கே",என்றேன்.அந்தப் பெண், "அண்ணே,இது ராம்ராஜ் இல்லே, வேற கம்பெனி",என்றாள்.நான் உடனே,"நான் சொன்னது ராமராஜன் என்கிற நடிகரை,அவரை ஒனக்குத் தெரியாதா?"என்றேன்.அவள் பரிதாபமாக, "தெரியாது அண்ணா",என்றாள்.அந்தப் பெண்ணிடமிருந்து இப்படியொரு பதிலைக் கேட்டவுடன் எனக்கு மிகுந்த அதிர்ச்சியைக் கொடுத்தது.
ஒரு காலத்துலே சூப்பர்ஸ்டாருக்கே போட்டியா இருந்த மனுஷனை இன்றைய தலைமுறைக்கு தெரியலயே என்று மிகவும் வருத்தப் பட்டேன்.

மோகன்:80களில், இவர் நடித்தாலே படம் வெள்ளிவிழாதான்.இவரை நாம் மைக் மோகன் என்றே அழைப்போம்.ஆனால் அவர் சொல்கிறார்,"நான் எட்டுப் படங்களில் மட்டுமே பாடகனாக நடித்துள்ளேன்ஆனால்,எப்படியோ எனை மைக் மோகனாக அழைத்து விட்டார்கள்."என்று.
மிகவும் இயல்பான நடிப்பை வழங்கக் கூடிய மிகச்சிறந்த நடிகர்.பாடகர் சுரேந்தரின் குரல் இவரின் குரலாக மாறிப்போனதுதான் விந்தை.

அந்தக் காலகட்டத்தில் பெண் ரசிகைகளை அதிகம் சம்பாதித்தவர்.இவருடைய படங்களை குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் கிளிஞ்சல்கள்,தென்றலே என்னைத் தொடு,உதயகீதம்,பயணங்கள் முடிவதில்லை,விதி,உன்னை நான் சந்தித்தேன்,ரெட்டைவால்குருவி, மிக முக்கியமா மௌனராகம்.
இவர் நடித்த படங்களிலேயே Master piece எதுவென்றால், 'மௌனராகம்தான்'.இவருக்காகவே அமைந்த கதாபாத்திரம் போல் மிகப் பொருத்தமாக அமைந்திருக்கும்.

அந்தக் கதாபாத்திரத்தைப் பார்த்து, இப்படியான பொறுமையான மனிதன்தான் தனக்கு கணவனாக வர வேண்டும் என்று பெண்கள் ஏங்கினார்கள்.
சிவாஜி அவர்களுக்குப் பிறகு பாடலின் வரிகளுக்கு ஏற்றவாறு lip movement பண்ணி நடித்தவர் நடிகர் மோகன் மட்டுமே.

இவர் நடித்த,'விதி',திரைப்படம் Super hitதான்.ஆனால்,அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகுதான் அவருடைய படங்களின் எண்ணிக்கையே குறைய ஆரம்பித்தது.அது ஏன் என்று எனக்குப் புரியலே.

'மௌனராகம்',அவருக்கு நல்லதொரு Re-entryதான்.ஆனால்,அதன்பிறகும் அவருக்கு தொடர்ச்சியாக படங்கள் வரவில்லை.சில படங்கள் மட்டும் வந்து போனது.பெரிதாக வெற்றியை குவிக்க வில்லை.

உருவம் திரைப்படத்தின் தோல்விக்குப் பிறகு 2008-ஆம் ஆண்டு சுட்ட பழம் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.அதுவும் அவருக்கு வெற்றியைக் கொடுக்கவில்லை.மீண்டும் 16 வருடங்களுக்குப் பிறகு 'ஹரா'எனும் படத்தில் நாயகனாக நடித்து வெளிவரவிருக்கிறது.இத்திரைப்படம் அவருக்கு வெற்றியைக் கொடுக்க வாழ்த்துவோம்.

நன்றி,வணக்கம்.
சே மணிசேகரன்!

Leave a Reply