• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எம் எஸ் வி இசையில் கண்ணதாசன் பாடல் எழுதுவதை பார்ப்பதே ஒரு சுகானுபவம் 

சினிமா

எம் எஸ் வி இசையில் கண்ணதாசன் பாடல் எழுதுவதை பார்ப்பதே ஒரு சுகானுபவம் என்று பார்த்தவர்கள் பலரும், பல நேரங்களில் சொல்லியிருக்கிறார்கள். எம் எஸ் விக்கு இடுப்பைத் தொட்டால் கூச்சம் என்று அறிந்து கொண்டு கண்ணதாசன் தொடர்ச்சியாக எம் எஸ் வியை துரத்துவாராம். எம் எஸ் வி அலறி அடித்துக் கொண்டு ஓடுவாராம். அதன் பிறகு தான் எம் எஸ் வி ட்யூன் சொல்ல கண்ணதாசன் பாடலை அப்படியே சொல்வாராம். அதாவது இவர் தத்தகாரம் பாடி முடித்தவுடனே வசனம் போல பாடல் வரிகளை சொல்வார் கண்ணதாசன். "ஆயிரம் மலர்களே மலருங்கள்" பாடல் எழுதிய கதையை இளையராஜா அவர்கள் மேடையில் சொல்லிக் கேட்டவர்கள், எம் எஸ் வி+கண்ணதாசன் இணையில் பாடல்பதிவை காட்சிகளாக நினைத்துக் கொள்ளலாம். 

மற்றவர்கள் இதை கலாட்டாவாக பார்த்துக் கொண்டிருந்த போது, இயக்குனர் சிகரத்துக்கு இதையே ஒரு பாடலுக்கான சூழல் ஆக்கினால் என்ன என்று கேள்வி எழுந்தது. அப்படி உருவான பாடல் தான் வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் உருவான "சிப்பியிருக்குது முத்தும் இருக்குது" பாடல். எம் எஸ் வி தத்தகாரம் சொல்ல, கண்ணதாசன் பாடல் வரிகளை சொல்வதை அப்படியே ஒரு காதலன் காதலலிக்கு பொருத்திப் பார்த்திருக்கிறார் பாலச்சந்தர். பிறந்தது பாடல். 

உண்மையில் சொல்லப்போனால் அந்தப் பாடலில் எப்படி ஸ்ரீதேவி தத்தகாரத்தைப் பாடியவுடன் கமல் வரிகளாக பாடுகிறாரோ, அந்த நேரம் தான் கண்ணதாசனுக்கும் தேவைப்படுமாம். வார்த்தைகள் அருவி போல் கொட்டும். 

ஒரு இயக்குனரின் சாமர்த்தியம் என்பது இசை அமைப்பாளருக்கு. கவிஞருக்கு, பாடகருக்கு, நடிகருக்கு என அனைவருக்கும் சவால் அளிக்கும் ஒரு சூழலை ஏற்படுத்துவது தான். அதில் கே பாலச்சந்தர் ஒரு வித்தகர். தமிழ் சினிமாவில் அவர் உருவாக்கிய பாடல் சூழல்களை இன்னொருவரால் நினைத்துக் கூட பார்க்க முடியாது.

"அவர்கள்" திரைப்படத்தில் இடம்பெற்ற "இருமனம் கொண்ட திருமண வாழ்வில்" பாடல் ஒரு கிளாசிக் உதாரணம். படத்தின் கதைக்கேற்ற நாயகனின் வலியைச் சொல்லும் ஒரு காதல் தோல்விப் பாடல் என்று கூட சொல்லலாம். ஆனால் அதிலும் புதுமை படைத்திருப்பார். அதே சமயம் பாடலின் வரிகள் அவ்வளவு ஆழமாக இருக்கும். எம் எஸ் வி, கண்ணதாசன், எஸ் பி பி, கமல் என அனைவருக்கும் சவாலை அளிக்கக் கூடிய சூழல். அது தான் பாலச்சந்தர். 

இளையராஜாவுடன் சேர்ந்த முதல் படத்தில் ராஜாவுக்கு செக் வைத்தார் பாலச்சந்தர். நாயகன் கர்நாடக சங்கீதத்தில் கீர்த்தனை பாடுகிறான், அதை ரசிக்கும் நாயகி தமிழிலும் பாடலாமே என கேட்கிறான், அகங்காரத்தில் நீ பாடேன் என்கிறான். அங்கேயே நாயகி பாடுகிறாள். நாயகனின் அகங்காரம் உடைக்கப்படுகிறது. "பாடறியேன் படிப்பறியேன்" என  நாட்டுப்புறப் பாடலாக ஆரம்பித்து நாயகியின் உள்ளக்கிடக்கையை பாடல் வரிகளாக்கி, "தங்கமே நீயும் தமிழ்பாட்டும் பாடு" என்று கோரிக்கை வைத்து, நாட்டுப்புறப் பாட்டும் மட்டுமல்ல எனக்கு ஸ்வரம் பாடவும் தெரியும் என்று நாயகனின்  சவாலை ஜெயித்து, இறுதியில் "மரி மரி நின்னே" என கீர்த்தனையில் முடித்திருப்பார். கே பாலச்சந்தர் எனும் மாமேதை இல்லாமல் இப்படி ஒரு பாடல் நமக்கு கிடைத்திருக்குமா? இப்படி ஒரு சூழலை கேட்ட மாத்திரத்தில் ராஜா துள்ளிக் குதித்திருப்பார். இயக்குனர் சிகரம் கொடுத்த சவாலில் இசைஞானி ஜெயித்தும் காட்டியிருப்பார். கே பாலச்சந்தர் கொடுத்த சவால்கள் தான் இசைஞானிக்கு தேசிய விருதை பெற்றுத்தந்தது. 

எம் எஸ் வி, இலையராஜா வரிசையில் ஏ ஆர் ரகுமானுடன் கைகோர்த்த போதும் இதையே செய்து காட்டினார். டூயட் படத்தின் ஆதாரமே ஏ ஆர் ரகுமானின் இசை தான். அதிலும் ஒரு சவாலான பாடலுக்கான சூழல். அண்ணன் தம்பி இருவரும் ஒரே பெண்ணை காதலிக்கிறார்கள். காதலியின் நினைவாக தம்பி மேடையில் பாடுகிறான். அதற்கு அண்ணன் சாக்ஸபோன் வாசிக்கிறான். அப்போது அங்கே காதலி வருகிறாள். அண்ணன்காரன் தன்னை மறந்து காதலிக்கான பாடலை வாசிக்கிறான், பிறகு தன்னிலை அறிந்து, சூழலை உணர்ந்து, திரும்பவும் பாடலுக்குள் வருகிறான். ரகுமான் டிஸ்டிங்ஷனில் பாஸான பாடல் "என் காதலே என் காதலே". எஸ் பி பியின் உருக வைக்கும் குரல் ஒரு பக்கம் என்றால், பிரபுவின் நடிப்பு இன்னொரு பக்கம். காதலியை கண்ட உற்சாகத்தில்" அஞ்சலி அஞ்சலி" பாடலை வாசித்து பிறகு மெல்ல தன்னிலை உணர்வதை அட்டகாசமாக நடித்திருப்பார் பிரபு. என் பாடலுக்கு சிறப்பாக வாயசைத்து நடிப்பது பிரபு தான் என்று ஒரு மேடையில் எஸ்பிபியே பாராட்டியிருப்பார். இங்கு சாக்ஸபோனுக்கும் சேர்த்து நடித்திருப்பார். 

இது போன்ற ஒரு காட்சியை இன்று உருவாக்க முடியுமா? வாய்ப்பே இல்லை. 

இயக்குனர் சிகரம் பாலச்சந்தரின் திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல் சூழல்களைப் பற்றி ஆராய்ச்சியே செய்யலாம். அவ்வளவு செய்திருக்கிறார்.

Mahadevan CM

Leave a Reply