• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஆபிரகாம் லிங்கனுக்கும் ஜோ பைடனுக்கும் 160-வருட தொடர்பு

அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஜோ பைடன் (81).

பைடனின் மூதாதையர்களில் ஒருவர் மோசஸ் ஜே. ராபினெட் (Moses J. Robinette). கால்நடை மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணரான அவர் ராணுவத்தில் பணியமர்த்தப்பட்டார்.

1864 மார்ச் 21 அன்று அமெரிக்காவின் வர்ஜினியாவில் உள்ள ஒரு ராணுவ தளத்தில், ராபினெட்டுக்கு, ஜான் அலெக்சாண்டர் (John J. Alexander) எனும் சக பணியாளர் ஒருவருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியதில், ராபினெட் தன்னிடம் இருந்த சிறிய கத்தியால் அலெக்சாண்டரை சரமாரியாக தாக்கினார். அங்கிருந்தவர்கள், சண்டையை நிறுத்தி, அலெக்சாண்டரை மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

ராணுவ கட்டுப்பாட்டை மீறியதாக இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

தற்காப்புக்காக அலெக்சாண்டரை தாக்கியதாகவும், தாக்காமல் இருந்திருந்தால் தன்னை அவர் கொன்றிருப்பார் என்றும் ராபினெட் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஆனால், ராபினெட்டின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம், அவருக்கு 2-வருட கடுங்காவல் தண்டனை வழங்கியது.

ராபினெட், தன்னை விட மிக அதிக எடை மற்றும் வலிமையுடைய பலசாலி ஒருவருடன் சண்டையிட நேர்ந்ததால் தற்காப்பிற்காக கத்தியால் தாக்க நேரிட்டதாகவும், இதனை கருத்தில் கொண்டு மருத்துவரான அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யுமாறும் 3 ராணுவ அதிகாரிகள் ராபினெட்டுக்கு ஆதரவாக அப்போதைய அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கனிடம் கருணை மனு அளித்தனர்.

இதனை ஏற்று கொண்ட அதிபர் ஆபிரகாம் லிங்கன், ராபினெட்டுக்கு மன்னிப்பு வழங்கினார்.

சுமார் 160 வருடங்களுக்கு பிறகு வெளிவந்திருக்கும் இந்த தகவல் அமெரிக்க தேசிய ஆவண காப்பகத்திலிருந்து கிடைத்துள்ளது.

அமெரிக்காவின் 16-வது அதிபருக்கும், தற்போதைய 46-வது அதிபருக்கும் உள்ள இந்த இணைப்பை சமூக வலைதளங்களில் பயனர்கள் சுவாரஸ்யமாக விவாதிக்கின்றனர்.
 

Leave a Reply