• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இளையராஜா கொடுத்த வாக்கு... பறிபோன ரஜினி பட வாய்ப்பு - கங்கை அமரன் ப்ளாஷ்பேக்

சினிமா

கரகாட்டக்காரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து கங்கை அமரன் அடுத்து ரஜினி கமல் நடிக்கும் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தமிழ் சினிமாவில் இயக்குனர் தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடகர், பாடல் ஆசிரியர் என்று பல திறமைகளை வைத்தக்கொண்டு வெற்றிகளை குவித்தவர் கங்கை அமரன். இசைஞானி இளையராஜாவின் சகோதரர் என்று அறியப்பட்ட இவர், கடந்த 1979-ம் ஆண்டு வெளியான கரை கடந்த குறத்தி என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

தொடர்ந்து குழந்தையை தேடி, ஒரு விடுகதை ஒரு தொடர்கதை, சுவரில்லாத சித்திரங்கள், எங்க ஊரு ராசாத்தி, மௌனகீதங்கள் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்திருந்த கங்கை அமரன், 1982-ம் ஆண்டு வெளியான கோழி கூவுது படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கொக்கரக்கோ, எங்க ஊரு பாட்டுக்காரன், செண்பகமே செண்பகமே, கரகாட்டக்காரன், கும்பக்கரை தங்கையா, கோயில் காளை உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான கரகாட்டக்காரன் திரைப்படம் தமிழகத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் வெற்றி கங்கை அமரன் அடுத்து ரஜினி கமல் நடிக்கும் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் விஜயகாந்தை வைத்து கோயில் காளை என்ற படத்தை மட்டும் இயக்கிய நிலையில், ரஜினி கமல் படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதே சமயம் 1989-ம் ஆண்டு வெளியான ரஜினிகாந்தின் ராஜாதி ராஜா, 1992-ம் ஆண்டு வெளியாக கமல்ஹாசனின் சிங்காரவேலன் உள்ளிட்ட படங்களை இசையமைப்பாளர் இளையராஜாவின் நிறுவனமாக பாவலர் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் அவரது சகோதரர் ஆர்.டி.பாஸ்கர் தயாரித்திருந்தார். இதில் ரஜினிகாந்த் நடித்த ராஜாதி ராஜா திரைப்படத்தின் கதையை கேட்ட ரஜினிகாந்துக்கு பிடிக்கவில்லை.

இதை தயாரிப்பாளர் இளையராஜாவிடம் சொல்ல, அவரோ படம் கண்டிப்பாக வெற்றி பெறும். அதற்கு நான் கேரேண்டி. படம் வெற்றியாகவில்லை என்றால் நான் இசையமைப்பதை நிறுத்தி விடுகிறேன் என்று கூறி சவால் விட்டுள்ளார். இளையராஜாவின் கணிப்பின் படி ராஜாதிராஜா திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் இந்த படத்தை முதலில் கங்கை அமரன் தான் இயக்குவதாக இருந்தது.

இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் – இளையராஜா இடையே ஆழமான நட்பு இருந்த நிலையில், இந்த படத்தை நீதான் இயக்குகிறாய் ரஜினிகாந்த் தான் நடிக்கிறார் என்று இளையராஜா ஆர்.சுந்தர்ராஜனுக்கு வாக்கு கொடுத்துள்ளார். இதன் காரணமாக ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு கங்கை அமரனுக்கு கை நழுவிப்போனது.
 

Leave a Reply