• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இந்தியாவை ஆண்டவர்களின் தலைநகரை ஆள துடிக்கும் இந்தியர்கள்

இங்கிலாந்தின் தலைநகர் லண்டன் உலகிலேயே அழகான நகரம் என பெயர் பெற்றது.

மே 2 அன்று லண்டன் நகர மேயருக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

4 வருட பதவிக்காலம் உள்ள லண்டன் மேயர் பதவிக்கு தற்போது மேயராக உள்ள சாதிக் கான் மீண்டும் 3-வது முறையாக போட்டியில் இறங்கி உள்ளார்.

இந்நிலையில், சாதிக் கானை எதிர்த்து தருண் குலாடி (63) மற்றும் ஷ்யாம் பாடியா (62) எனும் இரு தொழிலதிபர்கள் சுயேட்சையாக களம் இறங்கியுள்ளனர்.

இந்த இருவருமே இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

"இந்தியா நான் பிறந்த பூமி. எனது வீடு லண்டன். தற்போதுள்ள மேயர், மக்களிடம் நம்பிக்கையை இழந்து விட்டார். மக்கள் நல்வாழ்விற்காக சுதந்திரமான தடையற்ற கொள்கைகளை மக்களின் ஆலோசனையுடன் செயல்படுத்தவே நான் எந்த கட்சியையும் சாராமல் சுயேச்சையாக நிற்கிறேன். அனைவருக்குமான பாதுகாப்பான நகரமாக லண்டனை மாற்றுவேன்" என கூறினார் தருண்.

தருண், "நம்பிக்கை மற்றும் வளர்ச்சி" (trust and growth) எனும் தேர்தல் முழக்கத்தை முன்னெடுத்துள்ளார்.

"தற்போது லண்டனின் நிலை என்னை வருத்தமடைய செய்கிறது. இந்த பெருநகரத்தில் வசிப்பவர்களின் வாழ்வு, செயலற்ற ஒரு அமைப்பால் பலியாவது என்னை கவலை கொள்ள செய்கிறது. வரப்போகும் நாட்களில் இரவும் பகலும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டும். ஆனால் அந்த சவால்களை எதிர் கொண்டு, உலகில் லண்டனுக்கு என முன்னர் இருந்து வந்து தற்போது இழக்கப்பட்டுள்ள முதல் இடத்தையும், தனிப்பட்ட மரியாதையையும் மீட்டு எடுப்பேன்" என கூறினார் ஷ்யாம்.

ஷ்யாம், "நம்பிக்கைக்கான தூதர்" (ambassador of hope) எனும் தேர்தல் முழக்கத்தை முன்னெடுத்துள்ளார்.

2024 மார்ச் மாதம், இருவரும் தங்களை ஆதரிப்பவர்களின் கையெழுத்துடனும், டெபாசிட் தொகையுடனும் அதிகாரபூர்வமாக தேர்தலில் போட்டியிட விண்ணப்பங்களை தாக்கல் செய்ய வேண்டும்.

ஏப்ரல் மாதம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

சாதிக் கான், தருண் மற்றும் ஷ்யாம் ஆகியோரை தவிர, 8 பேர் இந்த மேயர் தேர்தல் களத்தில் உள்ளனர்.

1947ல் சுதந்திரம் பெறும் வரை இந்தியா, பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அடிமையாக ஆளப்பட்டு வந்தது. இன்று அந்நாட்டின் தலைநகரை ஆள இந்திய வம்சாவளியினர் தீவிரம் காட்டுவதை சமூக வலைதளங்களில் பயனர்கள் சுவாரஸ்யமாக விவாதிக்கின்றனர்.

Leave a Reply