• Welcome to TamilsGuide
செய்திகள் 1

என் இனிய தமிழ் மக்களே

சினிமா

என் இனிய தமிழ் மக்களே’ எனும் இணையதள சேனலில் இயக்குநர் பாரதிராஜா தன் வாழ்க்கை அனுபவங்களை, திரை அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார்.
இதில் பாரதிராஜா கூறியதாவது:
‘’என் வாழ்வில் சொல்ல மறந்த விஷயங்கள் என்று இதைச் சொல்லமுடியாது. சொல்லத் தவறிய விஷயங்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
என் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்று ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தைச் சொல்லவேண்டும். அதுமட்டுமில்லை... சமுதாயத்தில் மிகப்பெரிய அங்கீகாரத்தை எனக்குக் கொடுத்த படம் இது.
எப்படி என்று கேட்கிறீர்களா?
தமிழ் மூன்றெழுத்து. உயிர் மூன்றெழுத்து. மூச்சு மூன்றெழுத்து. எம்ஜிஆர் மூன்றெழுத்து. எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்துக்குச் சொந்தக்காரர், கனவிலும் நான் நினைத்துப் பார்க்க முடியாத வகையில், அந்தப் பெரிய மனிதர், அந்தக் கொடைவள்ளல், அந்த மாமனிதர், என்னைத் தோளோடு தோள் சேர்த்து, ஏற்கெனவே அறிமுகமான பாரதிராஜாவை, இன்னொரு பரிமாணத்தில் அறிமுகப்படுத்தினார்.
பொதுவாக, படங்களைப் போட்டு நாங்களே பார்த்துவிடுவோம். ப்ரிவியூ என்று வைப்போம். கலையுலகில் இருந்து அரசியலுக்கு வந்து ஆட்சியில் அமர்ந்திருந்தார் எம்ஜிஆர். நம்முடைய கனவு எம்ஜிஆர். அவரை அழைத்து படத்தைப் போட்டுக்காட்ட வேண்டும் என நினைத்தோம். இளையராஜா, அவரின் சகோதரர் பாஸ்கர், நான் மூவரும் சென்றோம். எம்ஜிஆரின் பி.ஏ.வைப் பார்த்தோம். எம்ஜிஆரைப் பார்த்தோம். படம் பார்க்க வருவதாகச் சொன்னார்.
நடிகர் சங்கத்தில், ஒருகாலத்தில் பொறுப்பில் இருந்தவர் எம்ஜிஆர். ஆகவே அங்கே உள்ள தியேட்டரில் படம் பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டார். படம் பார்க்க வந்தார். ’நான் தான் பாரதிராஜா’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டேன். மிகப்பெரிய மாலையை அணிவித்தேன். ஒவ்வொருவரும் அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.
அவர் அமர்ந்தார். அவர் அமர்ந்த வரிசையில் இருந்து மூன்றாவது வரிசையில் உட்காரச் சென்றேன். உடனே என்னைக் கைப்பிடித்து அருகில் உட்கார வைத்தார்.
பிறகு, படம் ஓடத்தொடங்கியது. ரசித்துப் பார்த்துக்கொண்டே வந்தார். எனக்கு தர்மசங்கடம். ஏனென்றால்,படத்தில் சில காட்சிகள் டபுள் மீனிங், அப்படி இப்படி என்றெல்லாம் வைத்திருந்தேன். இடைவேளை வந்தது. மிகப்பெரிய மனிதர் படம் பார்க்கிறார் எனும் போது எப்படி இருக்கும்?
படம் முடிந்தது. வெளியே வரும்போது எம்ஜிஆர் கேட்டார்...’இதில் இன்னொரு க்ளைமாக்ஸ் வைக்கப்பட்டிருந்ததா?’ என்று கேட்டார். அதிர்ந்து போனேன். ’அலைகள் ஓய்வதில்லை’ படத்துக்காக, இன்னொரு க்ளைமாக்ஸ் எடுத்திருந்தீர்களா?’ என்று மறுபடியும் கேட்டார். நான் இன்னொரு க்ளைமாக்ஸ் எடுத்தது எம்ஜிஆருக்கு எப்படித் தெரியும்?
படத்தில் சில்க் ஸ்மிதா பேசும் டயலாக் வரும். ‘விடிஞ்சாத் தெரியும்... கேக்கப் போறது மேளச்சத்தமா, வெடிச்சத்தமா?’ என்று. இதற்குப் பிறகு க்ளைமாக்ஸில், ஊரே போய்க்கொண்டிருக்கும். தியாகராஜன் வந்துகொண்டிருப்பார்.

அப்போது சில்க் ஸ்மிதா என்ன செய்வார்? கொல்வதற்காக வந்துகொண்டிருக்கும் தியாகராஜனை சில்க் ஸ்மிதா சுடுவார். ‘நீங்க நிம்மதியா வாழுங்க’ என்று காதலர்களிடம் சொல்லுவார். ஆனால் இதில் திருப்தியில்லை.
இபடியொரு க்ளைமாக்ஸ் எடுத்து வைத்திருந்தேன். இது இல்லாமல், பூணூலையும் சிலுயும் அறுத்தெறிவது. இப்படியொரு க்ளைமாக்ஸ்.
கோடாரியுடன் வரும் தியாகராஜன், வந்த வேகத்துக்கு அவர்களைக் கொன்றிருக்க வேண்டும். பாதிரியார் வந்து தடுப்பார். ‘உனக்கென்ன மதமா பிடிச்சிருக்கு?’ என்பார். ‘ஆமாம் ஃபாதர் மதம்தான் பிடிச்சிருக்கு’ என்பார் தியாகராஜன்.
‘எங்களுக்குத் தடையாக இருப்பது மதம்தானே. எங்களுக்கு மதம் தேவையில்லை. தயவு செய்து எங்களை வாழவிடுங்கள்.உலகமே ஸ்தம்பித்துவிட்டது என்று ஷாட்ஸ் வைத்திருப்பேன்.
அவர்கள் போவார்கள். உடனே என்ன பண்ணவேண்டும்? போய் வெட்டியிருக்க வேண்டாமா? அதுதான் தந்திரம். சினிமா தந்திரம். கோடாரியுடன் கைக்கு ஒரு ஷாட் வைத்தேன். ‘காதல் ஆயுதங்களால் அழிக்கமுடியாதது’ என்று என்னுடைய வாய்ஸ் வரும். கோடாரி கையிலிருந்து கீழே விழும். இரண்டு பேரும் போய்க்கொண்டே இருப்பார்கள். சினிமாவில் இப்படி என்ன வேண்டுமானாலும் பண்ணலாம்.
படம் முடிந்தது. என்ன சொல்லப் போகிறார் எம்ஜிஆர்? அப்படியே என்னைப் பிடித்தார். அவர் பிடித்தாரென்றால் இரும்புக்கை பிடிப்பது போல இருக்கும். ’பெரியாரும் அண்ணாவும் இல்லியேனு வருத்தப்படுறேன்’ என்று சொன்னார். ’பெரியாரும் அண்ணாவும் இல்லியே இதைப் பாக்கறதுக்கு? நாங்களெல்லாம் மேடையில் சொல்ல பயந்ததை, தைரியமாக திரையில் சொல்லியிருக்கிறாய்’ என்று பாராட்டினார். ’உனக்கு பெரிய வரலாறே அமையப் போகிறது’ என்றார்.
மறுநாள் ஒரு கடிதமே எழுதிக் கொடுத்தார். அதன் பிறகு எனக்காக ஆறு விழாக்கள் எடுத்தார். பாரதிராஜா யாரென்பதை உலகுக்குச் சொன்னார். ’உங்க சிலுக்குச்சட்டையை ஒருதடவையாவது தொட்டுவிட முடியாதான்னு ஊர்ல இருக்கும்போது நினைச்சிருக்கேன். ஆனா இன்னிக்கி என்னைக் கட்டி அரவணைச்சு உலகத்துக்கே என்னை அறிமுகப்படுத்தி வைச்சிட்டீங்க. நான் இதுக்கு என்ன கைம்மாறு செய்வேன்னு எனக்கே தெரியல’ என்று சொன்னேன்.
அவர் உடனே ‘நீ இதற்கு பொறுப்புள்ளவன். தகுதி உள்ளவன். அர்த்தம் உள்ளவன். உன்னை எப்படி வேணாலும் எங்கே வேணாலும் பாராட்டலாம்’ என்று சொன்னார்.
இப்படியாக, ‘அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படம் என் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையாகவே அமைந்தது.
இவ்வாறு பாரதிராஜா தெரிவித்தார்.

Leave a Reply