• Welcome to TamilsGuide
செய்திகள் 1

Kaathal - The Core மலையாள திரைப்படம்

சினிமா

மம்மூட்டி எனும் மகா கலைஞன் யாரும் நடிக்க தயங்கும் கதாபாத்திரத்தில் துணிச்சலுடன் நடித்துள்ள படம்.
கேரள மாநிலத்தில்  கோட்டயம் மாவட்டத்தில் உள்ள தீகோய் கிராமத்தில் மனைவி ஒமனா மகள் ஃபெமி மற்றும் தந்தை தேவஸியுடன் வாழ்ந்து வருபவர் மேத்யூ. கூட்டுறவு வங்கியில் பணியாற்றி ஒய்வு பெற்றவர் மேத்யூ.
ஊர் மக்களிடமும் மேத்யூ அங்கம் வகிக்கும் திருச்சபையிலும் அவருக்கு நல்ல பெயர் இருப்பதால், அக்கிராமத்தில் நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் வார்டு உறுப்பினர் பதவிக்கு அவரை களமிறக்க ஆளுங்கட்சி உறுப்பினர்கள்  முயற்சி செய்கிறார்கள்.
முதலில் மறுத்தாலும் ஒரு கட்டத்தில் தேர்தலில் நிற்க சம்மதம் தெரிவிக்கிறார் மேத்யூ. பிறகு மேத்யூவை மனுதாக்கல் செய்ய வைத்து தேர்தல் பணிகளில் இறங்குகிறது ஆளுங்கட்சி.
இந்நிலையில் தன்பாலின ஈர்ப்பாளரான மேத்யூ,  தனது நண்பர் தங்கனுடன் சில ஆண்டுகளாக திருமணம் மீறிய உறவில் இருந்ததை அறிந்து தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்கிறார் ஒமனா.
இதனை மறுக்கிறார் மேத்யூ. இந்த நிலையில் இந்த விவகாரம் மகள்,திருச்சபை,கிராமம்,நீதிமன்றம் மற்றும் ஊடகங்கள் என அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இறுதியில் மேத்யூவும் ஓமனாவும் என்ன முடிவு எடுத்தார்கள் நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து வழங்கியதா மேத்யூவின் தேர்தல் அரசியல் என்ன ஆனது இறுதியில் நடந்தது என்ன என்பதே மீதிக்கதை. 
நிதானமான மனிதர், அனைவரிடத்திலும் நன்மதிப்பை பெற்றவர், பொறுப்பான தந்தை மற்றும் தந்தைக்கு மரியாதை தருபவர் என மேத்யூ கதாபாத்திரத்தில் மம்மூட்டி வாழ்ந்திருக்கிறார்.
அவருடைய காதலுக்கு நேர்மையற்றவறாக இருந்து மனதுக்குள் புழுங்கும் போதும் இறுதியில் தந்தையுடன் மனம் விட்டு பேசும் காட்சியிலும் தான் ஒரு தேர்ந்த நடிகர் என்பதை மம்மூட்டி நிரூபித்துள்ளார்.
நான் அப்படி இல்லை இப்படி ஆகும்னு எனக்கு தெரியாது நான் உன் வாழ்க்கையை நாசமாக்கி விட்டேன் என்று நடுக்கத்துடன் வார்த்தைகளை அளவெடுத்து பேசும் காட்சியில் பிரமிக்க வைக்கிறார் மம்மூட்டி.
ஒமனாவாக ஜோதிகா நடிப்பில் மம்மூட்டியுடன் போட்டி போட்டு நடித்துள்ளார்.  இருபது ஆண்டு கால வலியை,கோபத்தை,ஏக்கத்தை மற்றும் காதலை அழுத்தமாக வெளிப்படுத்தி நடித்துள்ளார்.
திருமணத்திற்கு பிறகு பெண்களுக்கு கணவர் கிடைப்பார் ஆனால் எனக்கு அப்பா கிடைச்சிருக்கிறார் என்று   பேசும் காட்சியில் ஜோதிகா அற்புதமாக நடித்துள்ளார்.

குற்றத்தை உணர்ந்து மகன் மீது சாய்ந்து அழும் தந்தை, பெற்றோரை புரிந்துக் கொண்டு நடக்கும் மகள், தன் காதலுக்கு நியாயம் செய்ய அவமானங்களையும் சங்கடங்களையும் தாங்கிக் கொண்டு தன் வாழ்க்கைகக்கான அர்த்தத்தை தேடும் தங்கன் என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
தீகோய் கிராமத்து அழகையும் அமைதியையும் நம் கண்களுக்கு விருந்தாக அளித்துள்ளார் ஒளிப்பதிவாளர்.
பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. காதலின் வலியை பின்னணி இசை வாயிலாக இசையமைப்பாளர் கடத்தியுள்ளார்.
முதல் பாதி நிதானமாகவும் இரண்டாவது பாதி சற்று விறுவிறுப்பாகவும் படம் செல்கிறது.
வழக்கு தொடுத்த மனைவியின் கைப்பையுடன் குற்றவாளிக் கூண்டிற்கு அருகில் நிற்கும் மம்மூட்டி, 
தன் காதலரின் புகைப்பட நோட்டிஸை ஏக்கமாக பார்க்கும் தங்கன் போன்ற காட்சிகள் கவிதைத்தனமானது.
திரைக்கதையில் ஒமனாவிற்கும் மேத்யூவிற்கும் இடையே உரையாடல்களை இன்னும் அதிகமாக காட்டியிருந்தால் அழுத்தமாக இருந்திருக்கும்.
இயக்குனர் ஜோ பேபியின் புதுமையான கதைக்களத்தில் உருவான இந்த படத்தை விருப்பமுள்ளவர்கள் Amazon prime video வில் காணலாம்.

Vasudevan Srirangarajan  
 

Leave a Reply