• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மாட்டுக்கார வேலன் ப்ளாஷ்பேக்

சினிமா

வரிகளை மாற்ற சொன்ன எம்.ஜி.ஆர்... கண்ணதாசன் என்ன செய்தார்? மாட்டுக்கார வேலன் ப்ளாஷ்பேக்

எம்.ஜி.ஆர் நடிப்பில் வந்த மாட்டுக்கார வேலன் என்ற படத்தில் இடம் பெற்ற பாடலில் இதேபோன்று எம்.ஜி.ஆர் ஒரு இடத்தில் வரிகளை மாற்றுமாறு கூறியுள்ளார்.

க்ளாசிக் சினிமாவில் எம்.ஜி.ஆர் – கண்ணதாசன் இடையேயான நட்பு மிகவும் ஆழமானது. அரசியல் தொடர்பாக இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டு பேசாமல் இருந்திருந்தாலும், தனது படங்களில் வரும் பாடல்களுக்கு கண்ணதாசன் தேவைப்பட்டால் கண்டிப்பாக அரை அழைத்து பாடல் எழுத சொல்லும் அளவுக்கு இருவருக்குள்ளும் புரிதல் நன்றாக இருந்தது. இதை வைத்து தான் எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனபின் கண்ணதாசனை அரசவை கவிஞராக அமர வைத்தார்.

இவருக்கும் இடையே இருந்த புரிதல் காரணமாக தனது படங்களில் பாடல்கள் எழுதும்போது அந்த பாடல்களில் தனக்கு வரிகள் பிடிக்கவில்லை என்றால் அதை மாற்ற வேண்டும் என்று கண்ணதாசனிடம் நேரடியாக சொல்வதை வழக்கமாக வைத்திருந்தார் எம்.ஜி.ஆர். அந்த வகையில் எம்.ஜி.ஆர் நடிப்பில் வந்த மாட்டுக்கார வேலன் என்ற படத்தில் இடம் பெற்ற பாடலில் இதேபோன்று எம்.ஜி.ஆர் ஒரு இடத்தில் வரிகளை மாற்றுமாறு கூறியுள்ளார்.

1970-ம் ஆண்டு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, லட்சுமி ஆகியோர் நடிப்பில் வெளியான படம் மாட்டுக்கார வேலன். கே.வி.மகாதேவன் இசையமைத்த இந்த படத்திற்கு வாலியும் கண்ணதாசனும் பாடல்கள் எழுதியிருந்தனர். இந்த படத்தில் இடம்பெறும் "பூவைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா" என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் இன்றும் நல்ல வரவேற்பை பெற்ற ஒரு பாடலாக இருக்கிறது. இந்த பாடலை கண்ணதாசன் எழுதியிருந்தார்.

மாட்டுக்காரராக இருக்கும் எம்.ஜி.ஆரை ஜெயலலிதா காதலிப்பதும், வக்கீல் எம்.ஜி.ஆரை லட்சுமி காதலிப்பதும் தான் திரைக்கதை. இதில் மாட்டுக்கார எம்.ஜி.ஆருக்கு பொருந்தும் வகையில் கிராமத்து சொற்களையும், வக்கீல் எம.ஜி.ஆருக்கு பொருந்தும் வகையில் நகரத்து சொற்களையும் சேர்த்து பாடல்களை கொடுத்திருப்பார் கண்ணதாசன். இதில் இரு எம்.ஜி.ஆருக்கும் சேர்த்து டிஎம்.எஸ் பாடியிருந்த நிலையில், லட்சுமிக்கு எல்.ஆர், ஈஸ்வரியும், ஜெயலலிதாவுக்கு பி.சுசிலாவும் பாடியிருப்பார்கள்.

இந்த பாடலில் ஒரு வரியில், காதல் வழக்கு போடுவேன் என்று எம்.ஜி.ஆர் பாட, போடுங்கள் கூண்டில் ஏற்றுங்கள், நான் போதும் என்று சொல்லும் வரை நீதி சொல்லுங்கள் என்று கண்ணதாசன் எழுதியிருந்தார். இந்த வரிகளை பார்த்த எம்.ஜி.ஆர் இதில் கொஞ்சம் மாற்றம் செய்யலாமே என்று கண்ணதாசனிடம் கூறியுள்ளார். அதை ஏற்றுக்கொண்ட கண்ணதாசன் போடுங்கள் கூண்டில் ஏற்றுங்கள் உங்கள் பொன்முகத்தை காட்டி வெற்றிகொள்ளுங்கள் என்று எழுதியுள்ளார். இந்த வரிகளை பார்த்த எம்.ஜி.ஆர், மிகவும் சந்தோஷப்படுகிறார். அந்த காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆர் தங்கம் போல் மின்னுகிறார் என்று சொல்வார்கள். அதைத்தான் கண்ணதாசன் தனது பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply