• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எம்.ஜி.ஆர் எனும் சினிமாக்காரன்

சினிமா

ஒட்டுமொத்த எம்.ஜி.ஆரின் திரைப்படங்களில் உலகத்தரமான திரைப்படம் ஏதேனும் இருக்கிறதா என்று தேடிப்பார்த்தால் நிச்சயம் இருக்காது. ஆனால், அத்தனையும் சாதாரண மனிதனுக்கு நம்பிக்கை தரும் நல்ல படங்கள்.

சினிமா ஒரு கூட்டு முயற்சி என்று சொல்பவர்கள் எம்.ஜி.ஆர். படங்களில் ஏமாற்றம் அடைவார்கள். ஏனென்றால் கதை, வசனம், பாடல்கள் என எல்லாமே எம்.ஜி.ஆரின் விருப்பப்படியே எழுதப்பட வேண்டும். இந்த உலகிலேயே தனி ஒரு நபருக்காகவே கதை எழுதி, தொடர்ந்து திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன என்றால், அது எம்.ஜி.ஆருக்கு மட்டும்தான்.

இசை இப்படித்தான் இருக்க வேண்டும், கேமரா இப்படித்தான் வைக்க வேண்டும், அடுத்தடுத்த காட்சிகள் இப்படித்தான் நகர வேண்டும், உடை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அத்தனை துறைகளிலும் தலையிட்டு, அவருடைய திருப்தியுடன் படங்களை வெளியிட்டு வெற்றியும் பெற்றார்.

கதாநாயகன் மது அருந்த மாட்டான், சூதாட மாட்டான், சிகரெட் குடிக்க மாட்டான், பெண்களை பலவந்தப்படுத்த மாட்டான். மூட நம்பிக்கைகள் கிடையாது.  பெற்றோர்களை, முதியோர்களை மதிப்பது, நேர் வழியில் பணம் ஈட்டுவது என்று தனக்குத்தானே நிறைய வட்டங்களை போட்டுக்கொண்டு படம் எடுத்தார். தன்னுடைய சினிமாவை பார்த்து ஒருவன் கெட்டுப் போனான் என்ற நிலை ஒருபோதும் ஏற்படக்கூடாது என்று தெளிவாக இருந்தவர். 

எம்.ஜி.ஆர். இரண்டு அடி வாங்குவார், மூன்றாவது அடி விழாமல் திருப்பிக் கொடுப்பார் என்பது எல்லா ரசிகர்களுக்கும் தெரிந்த சூத்திரம் என்றாலும், ஒவ்வொரு படத்திலும் அதை வைத்து ரசிகர்களிடம் கைதட்டும் வாங்கினார். கதை அமைப்புகள் நகர்வுகள் பழமையாக இருந்தாலும், சினிமா துறையில் என்னென்ன புதிய டெக்னிக் அறிமுகமாகிறதோ, அவற்றை எல்லாம் தன்னுடைய படத்தின் முதன்முதலாக கொண்டுவந்தவர்.

அதனால்தான் மறைந்து 36 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னமும் நினைத்துப் பார்க்கும் இடத்தில் இருக்கிறார். எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் எல்லாமே படங்கள் அல்ல பாடங்கள்.
 

Leave a Reply