• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இயக்குனர் எல்.வி. பிரசாத் இயக்கிய படம் இருவர் உள்ளம்

சினிமா

இயக்குனர் எல்.வி. பிரசாத் இயக்கிய படம் "இருவர் உள்ளம்" அந்த படத்திற்காக நானும் சரோஜா தேவியும் ஒரு காட்சிக்காக நடித்துக் கொண்டிருந்தோம். அந்த காட்சியில் சரோஜா தேவிக்கு தான் முக்கியத்துவம். அவர் தான் அந்த காட்சியை டாமினேட் செய்வார். அந்த காட்சியில் நானும் நடித்துக் கொண்டிருந்தேன். நான் நடித்து எப்படியும் அவரை ஜெயித்து விடுவேன் என்று நினைத்து நடித்துக் கொண்டிருந்தேன. அப்போது இயக்குனர் பிரசாத் ,கட்,கட் என்று சொல்லி நிறுத்தினார்.என்னை வெளியே அழைத்துக்கொண்டு போனார்.
 "சிவாஜி ,நீ ஒரு நல்ல நடிகன். நீ நன்றாக நடிக்கிறாய். ஆனால் நீ இந்த காட்சியில் நன்றாக நடித்தால் , நாம் எடுக்கும் காட்சி வீணாகி ,கதையின் போக்கே மாறிவிடும். அதனால் நீ பேசாமல் இருக்க வேண்டும். சரோஜா தேவி நடிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் படமே கெட்டு விடும்" என்றார். இந்த அனுபவம் எனக்கு ஒரு பாடமாக அமைந்தது. படத்தில் நடிப்பது என்பது முக்கியமல்ல; கதைப்படி எந்த காட்சியில் நாம் நடிக்காமல் இருக்க வேண்டும் என்பதும் முக்கியம்.
இதற்கு இன்னொரு உதாரணம் "எங்கிருந்தோ வந்தாள்" படம்.

 அதன் கிளைமேக்ஸ் காட்சியில் ஜெயலலிதா நடித்துக் கொண்டிருப்பார். நான் சும்மா கையை கட்டிக்கொண்டும் ,இடது கையை கன்னத்தில் வைத்துக்கொண்டு சிரித்தப்படியும் நின்றுக்கொண்டிருப்பேன்.அவர் அழைக்கும் இடத்திற்கெல்லாம் போவேன். நான் நடித்திருக்கமாட்டேன் ஜெயலலிதாதான் நடித்திருப்பார். நான் நடித்திருந்தால் கதையே கெட்டு போயிருக்கும் படத்தின் தலைப்பு என்ன ? எங்கிருந்தோ வந்தாள் தானே ! எங்கிருந்தோ வந்தான் அல்லவே !
"பாசமலர் படத்தில் பல காட்சிகளில் என்னை விட சாவித்திரி நன்றாக நடித்திருப்பார். அவர் அப்படி நடித்து , நான் அடக்கி வாசித்ததால் தான் அந்த படத்தை பற்றி மக்கள் இன்றும் பேசுகிறார்கள்.
அதுசரி ! நானும் நடிக்கிறேன். ஆனால் பாராட்டும்,ரசிப்பும் சக நடிகருக்கு தான் கிடைக்கிறது. இதற்கு என்ன சொல்ல போகிறோம். ? அந்த காட்சி தான் திருவிளையாடல் படத்தில் சிவன் - தருமி காட்சி !
நானும் நடித்துக்கொண்டிருப்பேன். பின்னால் தருமியான நாகேஷும் நடித்துக்கொண்டிருந்தார்.அவரது நடிப்பை ரசிகர்கள் மிகவும் ரசித்தார்கள். அந்த காட்சி எடுத்ததும் நான் பார்த்தேன்.
படத்தின் இயக்குனர் ஏ.பி.நாகராஜனிடம் "நாகேஷ் நடித்ததில் ஒரு துளி கூட கட் செய்யக்கூடாது" என்று சொன்னேன்.
-சிவாஜி கணேசன்

 

Leave a Reply