• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கேம்பிரிட்ஜ் தொல்பொருள் ஆய்வில் வியக்க வைக்கும் கண்டுபிடிப்புகள்

பண்டையகால நாகரிகங்களில் சரித்திர புகழ் வாய்ந்தவை கிரேக்க மற்றும் ரோமானிய நாகரிகங்கள்.

ஐரோப்பாவில் உள்ள இத்தாலி, பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த மனித நாகரிக வளர்ச்சியை கண்ட நாடு. இதற்கு சான்றாக இத்தாலி முழுவதும் பழமை மாறாத கட்டிங்கள் இன்றும் சுற்றுலா பயணிகளை ஈர்த்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக (Cambridge University) தொல்பொருள் ஆராய்ச்சியாளர் குழு ஒன்று, டாக்டர். அலெஸ்ஸாண்ட்ரோ லவ்னாரோ (Dr. Alessandro Launaro) தலைமையில் மத்திய இத்தாலியில் உள்ள இன்டராம்னா லிரெனஸ் (Interamna Lirenas) எனும் இடத்தில் அகழ்வாரய்ச்சிகள் நடத்தியது. சுமார் 20 ஏக்கர் பரப்பில் பல இடங்களில் தரைவழியாக ஊடுருவும் திறன் வாய்ந்த ரேடார் கருவிகளை கொண்டு ஆய்வுகளை நடத்தியது.

இதன் தொடர்ச்சியாக, ஆராய்ச்சியாளர்கள், கி.பி. 3-ஆம் நூற்றாண்டு காலகட்ட நகரமான லாசியோ பகுதியில் பல தடயங்களை கண்டெடுத்துள்ளனர். தற்போது பயிர் நிலங்களாக உள்ள இந்நகர் அக்காலத்தில் சுமார் 2 ஆயிரம் வீடுகளை கொண்ட நகரமாக விளங்கியது தெரிய வந்துள்ளது.

"எவரும் இதற்கு முன்பு தோண்டி பார்க்க முயற்சிக்காத பகுதியில் எங்கள் ஆய்வை தொடங்கினோம். தோண்டிய பிறகு முதலில், மேற்புரத்தில் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. சில உடைந்த மண்பானைகள் மட்டுமே கிடைத்தன. ஆனால், கீழே நீர் நிலைகள் தோன்றவில்லை. 900 வருட பழமை வாய்ந்த நகரத்தின் அறிகுறிகள் காணப்பட்டன" என டாக்டர். லவ்னாரோ தெரிவித்தார்.

லிரி நதிக்கு அருகே நடத்தப்பட்ட இந்த அகழ்வாராய்ச்சியில், ஒரு கிடங்கு, வழிபாட்டு தலம், 1500 பேர் அமர கூடிய கலையரங்கம், பண்ணை விலங்குகளுக்கான 19 திறந்தவெளி கூடங்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

எந்த போரினாலும் இந்நகர் அழிக்கப்பட்ட தடயங்கள் எதுவும் காணப்படவில்லை. கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற லொம்பார்ட் படையெடுப்பின் போது இந்நகரில் வாழ்ந்த மக்கள் அச்சம் காரணமாக வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
 

Leave a Reply