• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இன்றுபோல் என்றும் வாழ்க

சினிமா

கலங்கரை விளக்கம்’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, தன் மகளுக்கு வரன் பார்த்து வரும் விஷயத்தை எம்.ஜி.ஆரிடம் இயக்குனர் கே.சங்கர் சொன்னார். ‘‘கல்யாண வயதில் உங்களுக்கு மகள் இருக்கிறாளா? கொஞ்சம் இருங்கள்’’ என்று கூறிய எம்.ஜி.ஆர்., உடனே தனது அண்ணன் சக்ரபாணிக்கு போன் செய்து, ‘‘சங்கரின் பெண்ணை நம்ம ராமுவுக்கு (சக்ரபாணியின் மகன் ராம மூர்த்தி) பார்த்தால் என்ன?’’ என்று கேட்டார். சங்கருக்கோ தயக்கம் ஒருபக்கம், மகிழ்ச்சி மறுபக்கம். ‘‘சார் ஏன் அவசரப் படுறீங்க?’’ என்றார்.

அதற்கு, ‘‘ராமுவை நான் வளர்த்து படிக்க வைத்தேன். அவன் என் பையன். அவனுக்கு உங்கள் மகளை திருமணம் செய்து வைக்க வேண்டும்’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டுக் கொண்டார். சங்கர் அவரது சம்பந்தியானார். ஐயப்ப பக்தரான சங்கர், ‘‘எம்.ஜி.ஆர். படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது மட்டு மின்றி, அவருக்கே சம்பந்தியாக என்னை ஆக்கியது ஐயப்பனின் கருணை’’ என்று சிலிர்த்துப் போனார்.

‘இன்றுபோல் என்றும் வாழ்க’ படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் மணிப்பாலில் நடந்தது. அந்த சமயத்தில் கொல்லூரில் உள்ள மூகாம்பிகை கோயிலுக்கு முதன்முதலில் எம்.ஜி.ஆரை சங்கர் அழைத்துச் சென்றார். கோயிலுக்கு பின்புறம் சங்கரபீடம் இருக்கிறது. அங்கே தான் ஆதிசங்கரர் தவம் செய்து பின்னர், மூகாம்பிகையை பிரதிஷ்டை செய்தார். சிறப்பு அனுமதி பெற்று சங்கரபீடத்தின் உள்ளே எம்.ஜி.ஆர். தனிமையில் தியானம் செய்ய சங்கர் ஏற்பாடு செய்தார். ஒரு மணி நேரத்துக்கு பின் வெளியே வந்த எம்.ஜி.ஆர்., ‘‘நிம்மதியாக இருந்த இந்த தருணத்தை வாழ்க்கையில் மறக்கவே முடியாது’’ என்று கூறியிருக்கிறார்.

சங்கர் வீட்டில் மற்றொரு திருமணத் தின்போது, அவருக்கு பண உதவி செய் வதாக கூறியவர்கள் கடைசி நேரத்தில் கைவிட்டனர். திருமண வரவேற்பு நடந்து கொண்டிருந்தது. அது முடிந்தவுடன் வேலை செய்தவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும். என்ன செய்வ தென்று தெரியாமல் விழிபிதுங்கிக் கொண்டிருந்தார் சங்கர். திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த எம்.ஜி.ஆர்., மணமக்களை வாழ்த்திவிட்டு சங்கர் கையில் இரண்டு பாக்கெட்களை திணித்தார். அவற்றில் சங்கருக்குத் தேவையான பணம் இருந்தது.

சங்கர் நெகிழ்ந்து கூறினார்: ‘‘மகாபாரதக் கர்ணன்கூட கேட்டவர்களுக்குத்தான் கொடுத்தான். கேட்காமலேயே மற்றவர் களுக்கு கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.!’’

நன்றி- தி இந்து (வேட்டைக்காரன் படப்பிடிப்பின்போது எம்ஜிஆர், ஜெமினி கணேசன், கே.சங்கர்)

Leave a Reply