• Welcome to TamilsGuide
செய்திகள் 1

70 முதல் 80 வரையிலான காலகட்டங்களில் புகழ்பெற்ற நடிகையாக இருந்தவர் லதா. 

சினிமா

70 முதல் 80 வரையிலான காலகட்டங்களில் புகழ்பெற்ற நடிகையாக இருந்தவர் லதா. ஜூன் 7, 1953ல் ராமநாதபுரத்தில் சண்முக ராஜேஸ்வர சேதுபதி மற்றும் லீலாராணி ஆகியோருக்கு பிறந்தவர் தான் நடிகை லதா. இவருடைய இயற்பெயர் நளினி என்பதாகும். இவர் சேதுபதி குடும்பத்தில் பிறந்தமையால் லதா சேதுபதி என்றும் அறியப்படுகிறார். 

நடிகர் ராஜ்குமார் சேதுபதி இவருடைய சகோதரராவார். தன்னுடைய நடனத் திறமையாலும், அழகாலும் தமிழகத் திரையுலகில் நாயகியானார். இவர் 1973-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தின் மூலம் தமிழிற்கு அறிமுகமானார்.

இந்த படத்தின் தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், ஜப்பான் ஆகிய நாடுகளில் எடுக்கப்பட்டது. இந்த படத்தின் வெற்றி காரணமாக தொடர்ந்து எம்ஜிஆர் படங்களில் நாயகியாக நடித்தார். எம்ஜிஆர் சிபாரிசால் அக்கினேனி நாகேஸ்வர ராவின் நாயகியாக அந்தால ராமுடு என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்தார்.

தொடர்ந்து நேற்று இன்று நாளை, சிரித்து வாழ வேண்டும், உரிமைக்குரல் என பல படங்களில் நடித்து அசத்தினார். இவர், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 1970 முதல் 1980 வரை உள்ள காலகட்டங்களில் தென்னிந்தியா புகழ்பெற்ற முன்னணி நடிகை ஆவார். 

சிவகாமியின் செல்வன் படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தார். தொடர்ந்து பல்லாண்டு வாழ்க, நினைத்ததை முடிப்பவன், நாளை நமதே, நீதிக்குத் தலைவணங்கு, உழைக்கும் கரங்கள், மீனவ நண்பன் ஆகிய படங்களிலும் நடித்து அசத்தினார். எம்ஜிஆரின் கடைசி படமான மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்தார்.

ரஜினியுடன் சங்கர் சலீம் சைமன், ஆயிரம் ஜென்மங்கள் ஆகிய படங்களில் நடித்தார். இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி தமிழ் மற்றும் தெலுங்கு மொழி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். பிலிம்பேர் விருதுகள் மற்றும் கலைமாமணி விருது போன்ற உயரிய விருதுகளை வென்றுள்ளார். 1974 ஆம் ஆண்டு மட்டுமே இவர் 4 படங்களில் நடித்துள்ளார்.

லதா சிங்கப்பூரை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சீனிவாசன் மற்றும் கார்த்திக் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இவர் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், “ராமநாதபுரம் ராஜாவின் மகளான நான் சினிமாவுக்குள் நுழைந்தது எனது பாக்கியம் என்றே கூறுவேன். எம்ஜிஆர் இயக்கிய அவருடைய சொந்த படத்தில் நான் அறிமுகமானேன். அந்த காலத்திலேயே வெளிநாட்டில் படப்படிப்பு என்று அடுக்கடுக்கான ஆச்சரியங்கள் என்னை எங்கேயோ கொண்டுபோய்விட்டது. அதே மாதிரி என்னை இதுவரை ராணியாகவே வாழவைத்துள்ளது” என கூறியிருப்பார்.

லதா சினிவுக்கு எவ்வாறு வந்தார் என்பதை ஒரு பேட்டியில் கூறியிருப்பார். அதில், ”பள்ளி நாடகத்தில் எடுத்த ஒரு போட்டோ எம்.ஜி.ஆர் பார்வைக்கு சென்றுவிட்டது. அவர் படத்திற்கு கதாநாயகி வேண்டும் என்றவுடன் மனோகர் சார் மூலமாக என்னை அணுகினார்கள். அப்போது எனக்கு 15 வயது தான் என்பதால் எங்கள் அம்மாவிற்கு விருப்பமில்லை. எம்.ஜி.ஆர் படம் என்றவுடன் எனக்கு நடிக்கும் ஆசை வந்துவிட்டது. நான் ஆர்வமாக இருந்ததால், என் அம்மாவிடம் பேசி எம்.ஜி.ஆர் சம்மதம் வாங்கினார். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்தான் என்னுடைய குரு. என்னுடைய வெற்றிக்கும் அவர்தான் காரணம். நான் நடிப்பு கற்றதே எம்.ஜி.ஆர் பிக்சர்ஸில்தான்” என கூறியிருப்பார்.
 

Leave a Reply