• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சீனாவில் இருந்து மேலும் ஒரு உளவு கப்பல் இலங்கை வருகிறது- இந்தியா கடும் எதிர்ப்பு

இலங்கை கடல் பகுதியில் ஆய்வு பணி என்ற அடிப்படையில் சீன உளவு கப்பல்கள் அவ்வப்போது இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்தியாவும் இதற்கு அடிக்கடி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சீன உளவு கப்பல்கள் இலங்கையின் அம்பன் தோட்டா, கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு அடிக்கடி வந்து செல்கின்றன. இந்த கப்பல்கள் அனைத்துமே உயர் தொழில் நுட்பம் கொண்ட உளவு கப்பல்கள் ஆகும். இந்த கப்பல்கள் இலங்கை கடல் பரப்பில் இருக்கும் பொருளாதார வளம் பற்றி ஆய்வு செய்வதற்காகவே வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த கப்பல்கள் இந்தியாவை உளவு பார்ப்பதற்காகவே இலங்கை கடல் பகுதிக்கு அடிக்கடி வருவதாக இந்தியா குற்றம் சாட்டுகிறது.

சீன கப்பல்கள் இலங்கை கடல் பகுதியில் நின்றபடியே தமிழக கடல் பகுதிகள் மற்றும் தமிழகத்துக்குள் இருக்கும் இந்திய படைகள் ஆகியவற்றை பற்றி முழுமையான தகவல்களை கண்காணித்து அறிந்து கொள்ளும் பணிகளில் ஈடுபடுவதாகவும், தென் மாநிலங்களை உளவு பார்ப்பதாகவும் இந்தியா தரப்பில் கூறப்படுகிறது. சீன உளவு கப்பல் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாலேயே அவை இலங்கைக்கு வர இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது.

சீனாவின் உளவு கப்பலை இலங்கை கடல் பகுதிக்குள் அனுமதிக்கக்கூடாது என்று இந்தியா தரப்பில் இலங்கை அரசிடம் பலமுறை கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனாலும் இலங்கை அரசால் சீன கப்பலை தடுக்க முடியவில்லை. காரணம், இலங்கை அரசு சீனாவிடம் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு அதிக அளவில் பொருளாதார உதவியை பெற்றுள்ளது.

இந்நிலையில் சீனாவின் உளவு கப்பலான 'ஷின் யான் - 6' கடந்த மாதம் இலங்கைக்கு வந்தது. அந்த கப்பல் இலங்கை கடல் பகுதிக்கு வெளியே இந்திய பெருங்கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கடல் ஆய்வுப்பணியில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. ஆனால் அந்த கப்பலும் இந்தியாவை உளவு பார்க்க வந்ததாகவே இந்தியா சார்பில் இலங்கை அரசிடம் தெரிவிக்கப்பட்டது. இந்த கப்பல் கொழும்பு செல்வதற்காக காத்திருக்கிறது. ஆனால் அந்த கப்பல் சீனாவுக்கு எப்போது திரும்பும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் சீனாவில் இருந்து மேலும் ஒரு உளவு கப்பல் இலங்கைக்கு வருகிறது. 'ஷியான் யாங் ஹாங் - 03' என்ற பெயர் கொண்ட இந்த கப்பல் அதிநவீன தொழில்நுட்பம் கொண்டது. இது பல்நோக்கு கப்பல் ஆகும். இந்த கப்பலை இலங்கைக்கு அனுப்ப அந்த நாட்டிடம் சீனா அனுமதி கேட்டுள்ளது.

இந்த கப்பல் சீனாவின் இயற்கை வள அமைச்சகத்துக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. இலங்கை கடற்பரப்பின் பொருளாதார வளத்தை ஆராய்ந்து இலங்கைக்கு உதவுவதற்காகவே இந்த கப்பல் அனுப்பி வைக்கப்படுவதாக மீண்டும் காரணம் சொல்லப்படுகிறது.

'ஷியான் யாங் ஹாங் - 03' அதிநவீன கப்பல் வருகிற ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகிறது. ஜனவரி 5-ந்தேதி முதல் பிப்ரவரி 20-ந்தேதி வரை 45 நாட்களுக்கு இந்த கப்பல் இலங்கை கடல் பகுதியில் நிறுத்தப்பட்டு பல்வேறு ஆய்வுகளை நடத்த திட்டமிட்டு இருப்பதாக சீனா தரப்பில் கூறப்படுகிறது. இந்த கப்பல் 99.06 மீட்டர் நீளம் கொண்ட பல்நோக்கு கப்பல் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிநவீன உளவு கப்பலால் இந்தியாவுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் சீன கப்பல் வருகைக்கு இந்தியா மீண்டும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த கப்பல் இலங்கை வருவதற்கு இலங்கை அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்று இலங்கைக்கு இந்தியா சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் இலங்கை அரசு என்ன முடிவு எடுக்கும் என்று இந்தியா எதிர்பார்த்து காத்திருக்கிறது.
 

Leave a Reply