• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இனி உலகம் உள்ள வரை ஒரே ஒரு பாடலை மட்டும் தான் கேட்க வேண்டும் என்று சொன்னால் நீங்கள் எந்த பாடலை தேர்ந்தெடுப்பீர்கள்  ? 

சுசீலாம்மாவின் குரலில் எண்ணற்ற இனிமையான பாடல்கள் இருந்தாலும் என்னைப் பொறுத்தவரை இந்தப் பாடலுக்குத் தான் முதலிடம். இன்று காலை சுசீலம்மா பிறந்த நாளுக்காக கானா பிரபா எழுதிய பதிவில் முதலில் இடம்பெற்ற இந்தப் பாடலை பார்த்தவுடன் அதன் பிறகு அவர் குறிப்பிட்ட பாடல்களை பார்க்கக் கூட இல்லை. மனதிற்குள் அந்தப் பாடல் ஒலிக்க ஆரம்பித்து விட்டது. உடனடியாக யூட்யூப் சென்று அந்தப் பாடலின் இரண்டு வெர்ஷன்களை கேட்டு முடித்தாலும் இன்னும் அந்தப் பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. 
"உன்னை ஒன்று
கேட்பேன் உண்மை சொல்ல
வேண்டும் என்னை பாட
சொன்னால்
என்ன பாட தோன்றும்"
இந்தப் பாடலில் எப்போது விழுந்தேன் என்று நினைவில்லை. அனேகமாக என் அப்பாவின் கலெக்‌ஷன்களில் இந்தப் பாடல் இருந்திருக்கக்கூடும். என் அம்மா பாடும் பல பாடல்களில் இதுவும் ஒன்றாக இருந்திருக்கக்கூடும். எப்போதிலிருந்து என்று நினைவில்லை. ஆனாலும் இந்தப் பாடல் கேட்கும் போதெல்லாம் எழும் உணர்வு வார்த்தைகளால்.விவரிக்க முடியாதது. 
கண்ணதாசனின் வரிகளில் எம் எஸ் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையில், புதிய பறவை படத்தில் இடம்பிடித்த பாடல். இந்தப் பாடலில் சரோஜாதேவி மிக அழகாக இருப்பார். 
பாடலின் பல்லவியை யார் வேண்டுமானாலும் இந்தப் பாடலை பாடி விட முடியும். அவ்வளவு எளிமையான ட்யூன். ஆனால் சரணங்களை பாடுவது அவ்வளவு எளிதில்லை. சங்கதிகளைக் கூட கொண்டு வந்து விடலாம். ஆனால் சுசீலாம்மா கொடுக்கும் உணர்வுகளை இன்னொருவர் கொடுப்பது மிகக் கடினம். 
"காதல் பாட்டு பாட காலம் இன்னும் இல்லை
காதல் பாட்டு பாட காலம் இன்னும் இல்லை
தாலாட்டு பாட தாயாகவில்லை

உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்
என்னை பாடச் சொன்னால் என்ன பாடத் தோன்றும்"
காதல் பாட்டுப் பாட என்று முதல் முறை பாடும் போது "பாட" என்று வார்த்தையில் சங்கதிகள் இருக்கும். இரண்டாவது முறை "பாட்டு" என்ற வார்த்தையில் சங்கதிகள் இருக்கும். அடுத்த வரியில் மயக்கும் குரலில் "தாலாட்டுப் பாட தாயாகவில்லை" என்று முடிக்கும் போது கேட்பவர்கள் அனைவரும் மயங்குவது நிச்சயம். 
"நிலவில்லா வானம் நீரில்லா மேகம்
பேசாத பெண்மை பாடாது உண்மை
கண்ணை மெல்ல மூடும் தன்னை எண்ணி வாடும்
பெண்ணை பாடச் சொன்னால் என்ன பாடத் தோன்றும்"
கவிஞர், கவிஞர் தான்யா....
தனிமையில் கானம் சபையிலே மோனம்
உறவுதான் ராகம் உயிரெல்லாம் பாசம்
அன்பு கொண்ட நெஞ்சில் அனுபவம் இல்லை
என்னை பாடச் சொன்னால் என்ன பாடத் தோண்றும்
உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்
என்னை பாடச் சொன்னால் என்ன பாடத் தோன்றும்… என்ன பாடத் தோன்றும்
இந்தப் பாடலை கேட்க ஆரம்பித்தால் ஒருமுறையோட நிறுத்தி விடவே முடியாது. திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டே இருந்தாலும் சலிக்கவே சலிக்காது... ஒவ்வொரு வரியிலும் மேஜிக் செய்திருப்பார் சுசீலாம்மா... 
எம் எஸ் வி இணையின் இசையைப் பற்றியெல்லாம் விமர்சனம் செய்யும் அளவுக்கு நமக்கெல்லாம் தகுதியே கிடையாது. மாமேதைகள். வெஸ்டர்ன் கிளாசிக் ஆர்கஸ்ட்ரேஷனில் பியானோ, சாக்ஸ், ட்ரம்ஸ், செல்லோ, வயலின் என  எல்லாவற்றையும் சேர்த்து அதகளம் செய்திருப்பார்கள். இன்று கேட்டாலும் ப்ரெஷ்ஷாக இருக்கும். 
முதல் பத்தியில் கேட்டது போல இந்தஇனி உலகம் உள்ள வரை ஒரே ஒரு பாடலை மட்டும் தான் கேட்க வேண்டும் என்று சொன்னால் நான் தேர்ந்தெடுக்கும் ஒரு பாடல் இது தான். 
சுசீலம்மாவின் 88வது பிறந்த நாளை முன்னிட்டு அவரை வாழ்த்தி வணங்குவோம். 
#PSuseela 
 

 

Leave a Reply