• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரொன்ரோவில் நினைவு நல்லது நூல் அறிமுகம்

கனடா

எனது ‘நினைவு நல்லது’ நூல் அறிமுகம் நவம்பர் மாதம் 4ஆம் திகதி, சனிக்கிழமை ஸ்காபரோ கொமாண்டர் பார்க் மண்டபத்தில் நடைபெற்றது.  
முதலில் ஏஜின்கோர்ட் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு, அழைக்கப்பட்ட அனைவருக்கும் அறிவிக்கப்பட்டு நிகழ்ச்சியை சனிக்கிழமை நடத்துவதற்கு ஆயத்தமாக இருந்த நிலையில் திடீரென வெள்ளிக்கிழமை மதியம் எமது நிகழ்ச்சி நடைபெறவிருந்த ஏஜின்கோர்ட் றிக்றியேஷன் சென்ரரில் தீ விபத்து ஏற்பட்டுவிட்டதால் அந்த மண்டபம் மூடப்பட்டுவிட்டதாக நிர்வாகத்தினர் அறிவித்தனர்.
பதற்றமடைந்த நான், எனக்கு எப்போதும் உதவிசெய்யும் ‘மனவெளி’ கலையாற்றுக்குழுவைச்சேர்ந்த செல்வன், யோகன் ஆகியோருடன் கலந்துபேசி, தமிழ்மக்களுக்குப் பரிச்சயமான சில மண்டபங்களைப் பெறுவதற்கு முயற்சிசெய்தும் அவை கிடைக்காத நிலையில், மீண்டும் ரொரன்ரோ, பெருநகரத்தின் நிர்வாகத்தில் இயங்கும் ஏஜின்கோர்ட் நிலையத்தினருடன் தொடர்புகொண்டபோது அவர்கள் தமது நிர்வாகத்திலுள்ள கொமாண்டர் பார்க் மண்டபத்தை ஏற்பாடு செய்தார்கள்.
 நாம் அந்த மண்டபத்தைச் சென்று பார்த்து மனதுக்கு அவ்வளவு திருப்தி இல்லாதபோதிலும் திட்டமிட்டவாறு, குறிப்பிட்ட தினத்தில் செய்துமுடிக்கவேண்டுமென்ற எண்ணத்தில் கொமாண்டர் பார்க் மண்டபத்தில் நடத்துவதென்று முடிவுசெய்தோம்.
நவம்பர் மாதம் 3ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை நான் எனது கொம்பியூட்டர் முன் அமர்ந்து ‘நினைவு நல்லது’ நூல் அறிமுக நிகழ்ச்சிக்கு வருவதற்கு சம்மதம் தெரிவித்திருந்த அனைவருக்கும் வட்ஸ்அப்பின் ஊடாக இடமாற்றம்பற்றி அறிவித்துவிட்டு, சனிக்கிழமை காலையும் இடமாற்றம் பற்றிய தகவலை ஒலிப்பதிவு செய்து, மீண்டும் வட்ஸ்அப்பின் ஊடாக அறிவித்தேன். 
 ‘தாய்வீடு’ பத்திரிகையும் அந்த ஒலிப்பதிவைத் தொலைபேசியூடாக சகலருக்கும் அறிவித்தது.  தாய்வீடு பத்திரிகையின் ஆலோசனைக்குழு உறுப்பினரும் ரொரன்ரோ ஊடகப்பரப்பில் இயங்குபவருமான கந்தகாமி கங்காதரன் முன்னின்று அந்த ஒளிப்பதிவைச் செய்து தந்தார்.  அவரது குரலிலேயே இடமாற்றம்பற்றிய அறிவிப்பு சகலரையும் சென்றடைந்தது.
நவம்பர் மாதம் 4ஆம் திகதி, சனிக்கிழமை மாலை 4.30க்கு குறித்த நேரத்தில் கொமாண்டர் பார்க் மண்டபத்தில் ‘நினைவு நல்லது’ நூல் அறிமுகம் ஆரம்பமாகியது.  

எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்தத் தடங்கலை வெற்றிகரமாகத் தாண்டுவதற்கு உதவிபுரிந்த மனவெளி கலையாற்றுக்குழுவுக்கும் தாய்வீட்டுக்கும் மற்றும் இடம் மாற்றம் பற்றிய அறிவிப்பை வலைத்தள ஊடகங்களுக்கூடாக அறிவிக்கக்கூடியவகையில் அதனை உடனடியாகவே வடிவமைத்துத் தந்த எஸ். அமுதீசனுக்கும் எனது நன்றி.
‘நினைவு நல்லது’ நூல் அறிமுகம் எதிர்பார்த்த வகையில் வெற்றியாக நடந்ததா?
‘நினைவு நல்லது’ நூல் அறிமுகம்பற்றிய எனது இரண்டாவது பதிவில் பார்ப்போம்.

P Wikneswaran Paramananthan

Leave a Reply