• Welcome to TamilsGuide
செய்திகள் 1

16 வயதினிலே

சினிமா

ஒரு காலத்தில் தமிழ் சினிமாக்கள் அனைத்தும் படப்பிடிப்பு அரங்குகளிலேயே சுழன்றுகொண்டிருந்தன. அரங்குகளைவிட்டு தமிழ் சினிமா வெளியே வந்துகொண்டிருந்த காலகட்டத்தில், முதன்முறையாக முழுப் படமும் ஒரு கிராமத்தில் எடுக்கப்பட்ட படம், ‘16 வயதினிலே’தான்.

இந்தத் திரைப்படம் வெளிவந்த பிறகு, பல படங்கள் கிராமத்தை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்தன. தமிழ் திரையுலகில் வெளிப்புறப் படப்பிடிப்பின் மூலம் புதியதொரு சகாப்தமே உருவானது. இதற்கெல்லாம் காரணம், அந்த அல்லி நகரத்து இளைஞர் இயக்குநர் பாரதிராஜா.

சாதாரண கிராமம். அங்கு பெட்டிக்கடை வைத்து பிழைக்கும் ஒரு பெண். `பத்தாவது பாசான பிறகு, டீச்சராக வேண்டும்' என்ற ஆசையோடு வாழும் அந்தப் பெண்ணின் மகள்.

அந்த ஊரில் உள்ளோர் சொல்லும் வேலைகளைச் செய்யும் ஓர் அப்பாவி இளைஞன்.

அதே ஊரில் வம்பு பேசியே வாழ்நாளைக் கடத்தும் ஒருவர்... என நம் கிராமங்களில் புழங்கும் கேரக்டர்களையே ‘சப்பாணி', `மயில்', `பரட்டை' `குருவம்மா' என்று பெயர் வைத்து உலவவிட்டு இருப்பார் பாரதிராஜா. அதனால்தான் அந்த கதாபாத்திரங்கள் சாகாவரம் பெற்று இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளன.

தமிழ் சினிமாவில் காதல் இளவரசனாக கமல்ஹாசன் வலம்வந்துகொண்டிருந்த நேரத்தில், எந்நேரமும் வெற்றிலையை மென்றுகொண்டே இருக்கும் வாய், மூக்குத்தி, விந்தி விந்தி நடக்கும் நடை, கோமண உடை... என்று வெள்ளந்தியான `சப்பாணி' வேடத்தை ஏற்றார் கமல்ஹாசன்.

அவர் அன்று பரபரப்பாக நடித்துக்கொண்டிருந்த சூழலில் இந்த ‘சப்பாணி’யாக நடிக்க எப்படி ஒப்புக்கொண்டார் என்பது பலருக்கும் ஆச்சர்யம்தான். இவரிடம் பாரதிராஜா கதை சொன்ன விதமும் இவர் நடிக்க ஒப்புக்கொண்டது பற்றியும் இன்றும் கதைகதையாக சொல்கிறார்கள் திரையுலகில்.

பாரதிராஜாவின் மனதில் இருந்த அந்தக் கதாபாத்திரமாகவே மாறினார் கமல். `ஒரு ஓணானைக்கூடக் கொல்லக் கூடாது' எனச் சொல்லும் இடமாகட்டும், `like you' என்று மயில் சொல்லும்போது தன்னைத்தான் அப்படி சொல்கிறார் என நினைத்து குதூகலிப்பதாகட்டும் இறுதிக்காட்சியில் கொலைகாரனாக மாறுவதாகட்டும் ஒவ்வொரு காட்சியிலும் சப்பாணியாகவே வாழ்ந்திருப்பார் கமல்.

அசத்தும் அழகு, இயல்பான நடிப்பு, வசீகரிக்கும் குரல்...`ஆத்தா... நான் பத்தாம் க்ளாஸ் பாஸாகிட்டேன்' என்று வரப்பு மேல் ஓடிவரும் `மயிலாக ஸ்ரீதேவி. `ஆசை, தோசை, அப்பளம், வடை' என்று கமலிடம் சொல்லும் தன் அழகின் திமிரும், சட் சடால் எனப் பேச்சைத் தெறிக்கவிடும் தைரியமும், டாக்டரிடம் பேசும்போது கண்கள் வழியே காதலை கடத்தும் விதமும், குடும்பப் பொறுப்பேற்று தன்மானத்தோடு வாழ நினைக்கும் அந்த வைராக்கிய உணர்வும். கிராமத்து இளம் பெண்ணின் வெவ்வேறு உணர்வுகளை தத்ரூபமாக வெளிப்படுத்தியிருந்தார் ஸ்ரீதேவி.

வெட்டி நியாயம், ஊர் வம்புமாக திரியும் நபர்கள் எல்லா கிராமங்களிலும் இருப்பார்கள். அப்படி ஒரு வேடத்தில், ரசிகர்கள் முன் `பரட்டை'யாக வந்து நின்றார் ரஜினிகாந்த். கமலுடன் ஒப்பிடும்போது ரஜினிக்கு மிகவும் குறைந்த காட்சிகள்தான். ஆனால், பாவாடை-தாவணியில் இருக்கும் ஸ்ரீதேவியைப் பார்த்து `இந்தத் தாவணியை அவ அம்மா போட்டாலும் நல்லதான்டா இருக்கும், இதெப்படி இருக்கு?' என்று வாய்க்கொழுப்பில் உச்சம் தொடுவதாகட்டும், `டேய் சப்பாணி, டேய்...' என்று சத்தம்போட்டும் கமல் நிற்காமல் செல்வதைப் பார்த்து, அவமானத்தில் கோபம் கொள்வதாகட்டும்... அவ்வளவு தத்ரூபமாக இருக்கும் ரஜினியின் நடிப்பு. உடல்மொழி, குரல் வீச்சு, தெருச்சண்டை என அச்சு அசலாக குருவம்மாவை திரையில் நிலைநிறுத்தினார் காந்திமதி. இவர்கள் தவிர டாக்டராக வரும் சத்யஜித், ரஜினிக்கு ஜால்ரா போடும் கவுண்டமணி... இப்படி அனைவரும் கச்சிதமான காஸ்டிங்.

இளையராஜாவை முழுமையாக வெளிக்கொணர்ந்த நூற்றுக்கணக்கான கிராமியப் பின்னணி கொண்ட படங்களில் முதன்மையானது என்று இந்தப் படத்தை சொல்லலாம். `அன்னக்கிளி'க்குப் பிறகு, முழுவதும் கிராமிய இசையில் அமைந்த `ஆட்டுக்குட்டி முட்டையிட்டு...', `மஞ்சக் குளிச்சு...' போன்ற பாடல்கள் பட்டித்தொட்டி மட்டுமல்ல, கடல் கடந்த கானங்களாக அப்போது எதிரொலித்தன. `செந்தூரப் பூவே...' என்ற பாடலை எழுதி, பாடலாசிரியராக அறிமுகமானார் கங்கை அமரன். இந்தப் பாடலைப் பாடியதற்காக S. ஜானகிக்கு `சிறந்த பின்னணிப் பாடகிக்கான' தேசிய விருது கிடைத்தது.

சினிமாவில் இருக்கும் இன்றைய இளம் இயக்குநர்கள் கிராமத்துப் படம் எடுக்க நினைத்தால், அவர்களை அறிந்தோ அறியாமலோ அதில் `16 வயதினிலே' படத்தின் சாயல் அதில் நிச்சயம் இருக்கும். அதற்கு காரணம், கிராமத்தின் இயல்பு வாழ்க்கையை உண்மைக்குப் பக்கத்தில் சென்று படம்பிடித்த பாரதிராஜாவின் உழைப்பும் நம்பிக்கையும்தான் என்றால் அது மிகையில்லை.

16 வயதினிலே
40 ஆம் ஆண்டில் விகடன் கட்டுரை .

Leave a Reply