• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இன்னொர் பெருமையும் இவருக்குண்டு

சினிமா

விஜய்காந்த் 1970களின் தொடக்கத்தில் வந்த கமலும் பிற்பாதியில் வந்த ரஜினியும் பல போராட்டங்களுக்கு பின்னர் வலுவாக கால் ஊன்றிவிட்ட நிலையில் 1979இல்  வந்தவர் விஜய் காந்த் பெரிய அளவில் கவன ஈர்ப்பை பெறாத இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். 
படம் வந்து போனது அதில் ஒரு புதுமுகம் நடித்தது என்பது பரவலாக யாருக்கும் தெரியவில்லை. இதே நிலைமைதான் அடுத்த சில படங்களிலும். 
அதன்பின்னர் இரு வருடங்களுக்கு பின்பாக வந்தபடம் சட்டம் ஒரு இருட்டறை . கதை திரைக்கதை வசனம் எஸ் ஏ சந்திரசேகர். இந்த படம் ஒரு குறைந்த பட்ஜெட் படம் என்றாலும் அதிக கவன ஈர்ப்பை பெற்றது . தமிழுக்கு ஒரு புதிய பாணி அறிமுகபடுத்தப்பட்டது. அதாவது சட்டத்தில் உள்ள சந்து பொந்துகளில் தப்பிக்கும் குற்றவாளிகளை அதே முறையில் பழி வாங்குவது என்ற புதிய உக்தியை கையாண்டார் இயக்குனர் 

இது மிகப்பெரிய கவன ஈர்ப்பை பெற்றது அதனால் விஜயகாந்த என்ற நடிகர் வெளி உலகுக்கு தெரிய வந்தார். கருப்பு நிறம் , முரட்டு விழிகள் வெள்ளை சிரிப்பு என்று ஒரு மாறுபட்ட கலவையாக வந்த இவர் பெரிதும் ரசிக்கப்பட்டார். 
ஆரம்ப காலங்களில் இவர் நரம்பு புடைக்க கத்துவதுதான் இவருடைய அதிக பட்ச நடிப்பாக இருந்தது வேறு பாவனைகள் அதிகம் இவருக்கு கைவரவில்லை . ஆனால் அதுவே இவரை மிக உயர்த்தி காட்டியது . 
முரட்டு சுபாவம் கொண்ட கதாபாத்திரங்கள் அதிகம் இவரைத் தேடி வந்தது கமல் , ரஜினி போன்ற பெரும் நடிகர்களுக்கு இணையாக இவரும் கூட்டத்தை ஈர்க்கும் அந்தஸ்தை மெல்ல மெல்ல பெற்றார். 
எஸ் ஏ சந்திரசேகர் இவரை வைத்து ஒரே போன்ற கதைகளை நிறைய செய்தார். இருப்பினும் அனைத்தும் ரசிக்கப்பட்டன. நியாத்திற்காக சட்டத்தை ஏமாற்றுவது என்கிற பாணியை வெகுவாக ரசித்தனர். 
இடையில் இவர் மணிவண்ணன் இயக்கத்தில் நூறாவது நாள் படத்தில் நடித்திருந்தார் ,  அந்த படத்தின் ஹீரோ மோகன்தான் ஆனால் அதில்  எதிர்மறை நாயகனாக செய்திருப்பார் இவர் நாயகனாக வந்திருப்பார் . இருப்பினும் இருவரை விட பக்கா வில்லானாக அதில் நடித்த சத்யராஜிற்கே அது அதிகம் கைகொடுத்தது 
பின்னர் இவர் ஆர் சுந்தர்ராஜன் கண்ணில் பட்டார். வைதேகி காத்திருந்தாள் என்ற படத்தில் இதுவரை முரட்டு சுபாவம் உடைய கதாபாத்திரங்கள் மட்டுமே செய்து இருந்த விஜயகாந்திற்கு இது ஒரு முற்றிலும் மாறுபட்ட படமாக அமைந்து அவர் மீதான மென்மையான பார்வையை பெற்று தந்தது 
பின்னர்  அம்மன் கோவில் கிழக்காலே, நானே ராஜா, நானே மந்திரி போன்ற கிராமத்து கதைகளில் நடித்தார். ஓரளவு தற்போது முகபாவனைகள் கைகூடி வந்த நேரம். 
அடுத்த வருடம் வந்த ஊமை விழிகள் இவருக்கு சிறந்த பெயரை பெற்று தந்தது. அருண்பாண்டியன் , சந்திரசேகர், கார்த்திக், ஜெய்சங்கர் என பல ஹீரோக்கள் நடித்தபடம். பெரிய அளவில் வெற்றி பெற்றது. நட்சத்திர அந்தஸ்தை இவர் பெற்றார். 
தொண்ணூறுகளில் இவர் நன்கு கால் ஊன்றியவரானார். இவரை வைத்து படம் எடுத்தால் மினிமம் கியாரண்டி உண்டு என்ற நிலையை எட்டினார் அதே சமயம், இவரிடம் ஒரு நல்ல குணம் உண்டு மற்ற நடிகர்களை கைதூக்கி விடும் பழக்கம்தான் அது 
எல்லோரையும் போலத்தான் விஜயும் ஆரம்பத்தில் தடுமாறினார். இன்று ஸ்டார் அந்தஸ்தை பெற்று பாக்ஸ் ஆபிஸ் வெற்றிகளை கொடுத்து கொண்டு இருக்கும்  அவர் ஆரம்ப காலத்தில் வரிசையாக பல படம் நடித்தாலும் அது அவரை வெளிச்சம் போட்டு காட்டவில்லை. 
பின்னர் எஸ் ஏ சி கேட்டுகொண்டதற்கு இணங்க செந்தூரப்பாண்டி என்றபடத்தில் விஜயுடன் இவரும் நடித்ததால் விஜயின் இருப்பு உறுதிப்பட்டது . 
தன்னை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தவரின் மகனுக்கு ஊதியம் வாங்காமல் செய்து கொடுத்த நன்மை அது. 
அதேபோல புலன் விசாரனை படம் . இதில் சரத் குமார், ஆனந்த்ராஜ் இருவரும் சிறப்பு கவனம் பெற்றனர். அந்த அளவு அந்த கதாபாத்திரத்தை உயர்த்திய போதும் அதை அன்போடு விட்டுகொடுத்தார் அவர் காலத்திற்கு முன்பாக அது சாத்தியம் இல்லை. 
ஊமைவிழிகளில் இவருடன் நடித்த அருண்பாண்டியன், கார்த்திக் மீண்டும் அருண்பாண்டியனின் நூறாவது படத்தில் இணைந்தனர். நட்புக்காக கௌரவ வேடம் செய்து இருப்பார் 
வடிவேலுக்கு அதிக வாய்ப்பு கொடுத்ததும் இவர்தான் ஆனால் பின்னாளில் அரசியலில் இவரை எதிர்த்து வரம்பு மீறி பேசியபோதும் இன்றுவரை அதற்கு அவர் பதில் சொன்னது இல்லை. 
சின்னக்கவுண்டர், வானத்தைப் போல போன்றபடங்களில் அமைதியாக வந்து அப்படியும் நடிக்க முடியும் என்று பெயர் பெற்றார் 
இவரது நூறவது படம் கேப்டன் பிரபாகரன் அது வெள்ளிவிழா கண்டது. இவர் காலத்து நடிகர்களில் யாரும் நூறாவது படத்தை வெற்றி ப்படமாக தர இயலவில்லை ( ரஜினி – ராகவேந்திரா , கமல் – ராஜபார்வை ) ஆனால் இவர் அதை சாதித்தார் 
இதைஎல்லாம் விட ரமணாவில் இவரின் கதாபாத்திரமும் சரி நடிப்பும் சரி பாராட்டுக்குரிய வகையிலேயே இருக்கும். 
சண்டை காட்சிகளுக்கு சிறப்பான உதராணமாக இவர் படங்களையே கூறுவர் அதுமட்டுமல்ல திரையில் பாகிஸ்தான் தீவரவாதிகளை  வேண்டும்மட்டும்  புரட்டி எடுத்த நடிகர் இவர் ஒருவர்தான். தாயகம் , வல்லரசு, வாஞ்சி நாதன் போன்ற காக்கி சட்டை படங்களில் ஒரு காவல் துறை அதிகாரியின் மிடுக்கை இவர் வெளிப்படுத்துவார். 
இன்னொர் பெருமையும் இவருக்குண்டு
தமிழ் தவிர பிற மொழிகளில் நடிக்காமல் 150படங்கள் நடித்தது இவர் ஒருவரே 
அது மட்டுமல்ல ராஜா பாதர் தெருவில் இருந்த இவருடைய அலுவலகத்திற்கு யார் சென்றாலும் மதிய உணவு நிச்சயம் உண்டு அதுவும் சாதாரண உணவு இல்லை சிக்கன் பிரியாணி என தடபுடலான வகையில் உணவுகள் எத்தனை பேர் வந்தாலும் சலிக்காமல் உணவு அளிப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்
இவர் அரசியலில் நுழைந்ததும் கூட ஒரு தற்செயல் நிகழ்வுதான். இருப்பினும் ஆரம்ப காலத்தில் தமிழகமெங்கும் சுற்றி சுற்றி வந்து முதல் தேர்தலிலேயே எட்டு சதவிகித வாக்குகளை தனித்து பெற்றார். அதை தக்க வைத்து கொண்டிருந்தால் இன்று அவர் ஆட்சியை பிடிக்கும் அளவு நெருங்கி இருப்பார்.  (அதை நடக்க விடமால் அவர் குடும்பமே பார்த்து க்கொண்டது ) 
சிறந்த மனிதாபிமானி, வெளிப்படையாக பேசும் சுபாவம் எல்லாம் இவரது நல்ல பக்கங்கள். குடும்பத்தின் மீது அளவு கடந்த அன்பு கொண்டதால் இன்று பின்னடைவுதான் 
இருப்பினும், யாரையும் வீழ்த்த நினைக்காத, பிறர் வாழ உதவிய இவர் நீண்ட ஆயுளுடன் , ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என வேண்டுவோம்.

Prashantha Kumar

Leave a Reply