• Welcome to TamilsGuide
செய்திகள் 1

குழந்தையை பார்த்து கொள்ள ரூ.83 லட்சமா?: புலம்பி தீர்க்கும் இந்தியர்கள்

அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் குடியரசு கட்சியின் சார்பாக உள்ள போட்டியாளர்களில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அடுத்த நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி களத்தில் தீவிரமாக உள்ளார். அவருக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகுகிறது.

அமெரிக்காவின் எதிர்காலம் குறித்த தனது அதிரடி திட்டங்களால் போட்டியாளர்களிடையே வேகமாக முன்னேறி வரும் விவேக் ராமசாமிக்கு திருமணமாகி அபூர்வா எனும் மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.

இந்நிலையில் விவேக் தம்பதியினர் தங்கள் குழந்தைகளை கவனித்து கொள்ள ஒரு பணிப்பெண்ணை தேடி வருகிறார்கள்.

இது குறித்து அவர்கள் ஒரு விளம்பரம் வெளியிட்டுள்ளனர். அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

ஆர்வமும் துடிப்பும் வழிமுறையாக உள்ள ஒரு குடும்பத்துடன் இணைந்து, அவர்களின் உற்சாகமான குடும்ப நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு அவர்களின் குழந்தைகளின் வளர்ச்சியிலும் கவனம் செலுத்தி பணியாற்ற இது ஒரு அரிய வாய்ப்பு. வார காலத்தில் 96 மணி நேரம் வரை வேலை இருக்கும். அதற்கு பிறகு ஒரு முழு வாரம் விடுமுறை. குழந்தைகளுக்கு தடையின்றி தினசரி நடவடிக்கைகள் அமைவதை உறுதி செய்ய இப்பணியில் சேர்பவர் எங்களின் தலைமை சமையற்காரர், பிற ஊழியர்கள், வீட்டின் பாதுகாவலர்கள் மற்றும் மெய்காப்பாளர்கள் ஆகியோருடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கான விளையாட்டு இடங்கள், அவர்களின் பொம்மைகள், ஆடைகள் ஆகியவற்றை பராமரித்து குழந்தைகள் ஒரு கட்டுக்கோப்பான சூழலில் வளர்வதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

விவேக் ராமசாமியின் பெயரோ அல்லது அவரது குடும்பத்தினர் எவரின் பெயரோ வெளியிடாமல் ஒரு வேலை வாய்ப்பிற்கான வலைதளத்தில் இந்த விளம்பரம் வெளியிடப்பட்டாலும், இது விவேக் ராமசாமியின் குடும்ப விளம்பரம் என தகவல்கள் உறுதி செய்கின்றன.

இந்த பணிக்கு ஊதியமாக இந்திய மதிப்பில் ரூ.83 லட்சம் ($100,000) வழங்கப்படும் என விளம்பரத்தில் வெளியிடப்பட்டுள்ளதால் சமூக வலைதளங்களில் பலர் - குறிப்பாக இந்திய தாய்மார்கள் - சுவாரசியமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
 

Leave a Reply