• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கைக்கு உலக வங்கி பாராட்டு

இலங்கை

இலங்கையின் தற்போதைய  பொருளாதார மற்றும் சமூக நிலைமை குறித்து தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாக இலங்கை, மாலைதீவு மற்றும் நேபாளத்திற்கான உலக வங்கியின் பணிப்பாளர் திரு.பாரிஸ் ஹடாட்ஜேர்வோஸ் (Faris Hadad Zervos) தெரிவித்துள்ளார்.

வட  மாகாண ஆளுநர் திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸை இன்று ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துறையாடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக நிலைமை குறித்து நாம் மிகவும்  மகிழ்ச்சியடைகின்றோம்.

அத்துடன் இலங்கை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு ஜனாதிபதி மேற்கொண்டுள்ள சாதகமான நடவடிக்கைகளுக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றேன்.

மேலும் இறுதி யுத்தத்தின் பின்னர் மக்கள் மீள்குடியேறி தற்போது நிம்மதியான வாழ்க்கைக்கு திரும்புவது மிகவும் மகிழ்ச்சியைத்  தருகின்றது.  எனவே வடமாகாணத்தின் கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு உலக வங்கி பூரண அனுசரணையை வழங்கவுள்ளது” என்றார்.

இதேவேளை ”வடக்கு மாகாண ஆளுநர் அவர்கள் வடமாகாணத்தின் தற்போதைய நிலைமை குறித்து உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கு தெரியப்படுத்தியதுடன், கல்வி, சுயதொழில், உட்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதில் வடக்கு மாகாணத்திற்கு ஆதரவளிக்குமாறும் உலக வங்கி பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொண்டார்.

இதன்பிரகாரம், எதிர்காலத்தில் வவுனியா, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்ட மக்களின் வாழ்க்கையை மேலும் மேம்படுத்த உலக வங்கி பூரண ஆதரவை வழங்கும் எனஉலக வங்கியின் பணிப்பாளர் உறுதியளித்தார்.
 

Leave a Reply