• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அதிகரிக்கும் மன அழுத்தம், பாலியல் தொந்தரவுகள்; ஆனால் எதிர்காலத்தை நம்பும் குழந்தைகள்

இங்கிலாந்தில் பதின் வயதுகளில் (13லிருந்து 19 வரை) உள்ள 1000 சிறுவர்களிடமும் 1000 சிறுமிகளிடமும் ஒரு தனியார் செய்தி நிறுவனம் சார்பில் கருத்து கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது. இதில் அவர்கள் வீட்டிலும், பள்ளிகளிலும், வீதிகளிலும் மற்றும் பொது இடங்களிலும் சந்திக்கும் சிக்கல்கள் குறித்தும் அவர்களின் மனநிலை குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டது.

இதில் 27 சதவீதத்திற்கும் மேற்பட்ட சிறுமிகள் தாங்கள் ஏதோ ஒரு வகையில் ஒரு முறையாவது பாலியல் தாக்குதலுக்கோ அல்லது தொந்தரவிற்கோ ஆளானதாக தெரிவித்துள்ளனர். நகர வீதிகளில் நடந்து செல்லும் போது பாதுகாப்பாக இருப்பதாக உணரவில்லை என 44 சதவீதம் சிறுமிகள் தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் அதிகம் இடம்பெறும் ஆபாச படங்களும் செய்திகளும் தங்களை பாதிப்பதாகவும், இணையதளங்களில் எதிர்பாராத நேரங்களில் திடீரென தோன்றும் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் தங்கள் கவனத்தை பாதிப்பதாகவும் அவர்களனைவரும் தெரிவித்துள்ளனர். கருத்து தெரிவித்தவர்களில் பலர் தாங்கள் எப்போதும் மன அழுத்தத்திலும் உளைச்சலிலும் இருப்பதாக கூறினர்.

பள்ளியிலிருந்து வீட்டிற்கு செல்லும் வழியில் பாதுகாப்பற்று உணர்வதாக பல சிறுமிகள் கூறினர். உடுத்தும் உடை, உடல் தோற்றம் மற்றும் முக அழகு குறித்த விமர்சனங்களும் கிண்டல்களும் பகிரங்கமாக செய்யப்படுவதாக கவலையுடன் பல சிறுமிகள் தெரிவித்துள்ளனர். இறுக்கமான உடையணியும் போதெல்லாம் அச்சுறுத்தல்கள் அதிகம் இருப்பதாக பலர் தெரிவித்தனர். பின்னால் யாராவது தொடர்கின்றனரா என எப்போதும் பார்க்க வேண்டிய சூழல் இருப்பதாகவும், இதனால் வீடு அல்லது பள்ளி நோக்கி செல்ல மாற்று பாதைகளை தேர்ந்தெடுத்து வைத்திருப்பதாகவும் சில சிறுமிகள் கூறினர்.

ஆச்சரியம் அளிக்கும் விதமாக, இக்கருத்து கணிப்பில் 24 சதவீத சிறுவர்களும் பாதுகாப்பின்மையை உணர்வதாக ஒத்துகொண்டுள்ளனர். கும்பலாக குழுமியிருக்கும் பிற சிறுவர்கள் மற்றும் இரவு நேரம் ஆகியவை அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் கருத்து கூறினர். இன்ஃப்ளுயன்ஸர்கள் (influencers) எனப்படும் சமூக வலைதளங்களில் பதின் வயதினருக்கு மாறுபட்ட கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கூறி வருபவர்கள் தங்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதாக சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் ஒப்புக்கொண்டனர். ஆனால், கருத்து கணிப்பில் பங்கேற்ற சிறுவர் மற்றும் சிறுமியர் அனைவரும் தங்களது எதிர்காலம் குறித்து மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply