பெண் குழந்தைக்கு தந்தையானார் டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்
சினிமா
'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த இளம் இயக்குநரும் நடிகருமான அபிஷன் ஜீவிந்த் - அகிலா தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.
தனக்குக் குழந்தை பிறந்திருக்கும் மகிழ்ச்சியான செய்தியை இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
குழந்தையின் பிஞ்சுக்கரங்களை அவர் பிடிந்திருப்பது போன்ற புகைப்படத்தைப் பதிவேற்றி, "அதிகாரப்பூர்வமாக நான் ஒரு பெண் குழந்தையின் அப்பா ஆகிவிட்டேன் (Officially a girl dad :) என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு தனது நீண்ட நாள் காதலியான அகிலாவை அபிஷன் ஜீவிந்த் திருமணம் செய்துகொண்டார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளைத் தம்பதியினர் கொண்டாடியிருந்தனர்.
அதுதொடர்பான புகைப்படத்தையும் அபிஷன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். திருமண நாள் முடிந்த கையோடு தங்களுக்குக் குழந்தை பிறந்திருக்கும் செய்தியை அவர் வெளியிட்டுள்ளதால், ரசிகர்களும் திரைத்துறையினரும் இந்த தம்பதிக்கு வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.
மே 2025-ல் வெளியான 'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படத்தின் மூலம் அபிஷன் இயக்குநராக அறிமுகமானார். சிவகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர் மற்றும் யோகலட்சுமி ஆகியோர் நடித்த இத்திரைப்படம், இலங்கையிலிருந்து சென்னைக்கு அகதிகளாக வரும் ஒரு குடும்பம், காவல்துறையிடம் சிக்காமல் வாழப் போராடும் கதையை மையமாகக் கொண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான 'வித் லவ்' (With Love) திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அனஸ்வரா ராஜனுடன் இணைந்து அவர் நடித்த இத்திரைப்படத்தை மதன் இயக்கியிருந்தார்.
தற்போது சிவராஜ்குமார் மற்றும் யோகலட்சுமி நடிப்பில் கௌதம் சிவராமன் இயக்கி வரும் 'பிக்காசோ' திரைப்படத்தில் அபிஷன் முக்கியப் பங்கு வகித்து வருகிறார்.
இத்திரைப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும், அடுத்த ஆண்டு தான் மீண்டும் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாகவும் அபிஷன் ஜீவிந்த் தெரிவித்துள்ளார்.






















