• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மக்களுக்கு தொடர்ந்தும் சேவையாற்றுவேன் – ஒலிவியா சௌ

கனடா

இரண்டாவது தடவயைாகவும் டொராண்டோ மேயராக தெரிவாகியுள்ள ஒலிவியா சௌ, மக்களுக்கு தொடர்ந்தும் சேவையாற்றுவதாக உறுதிமொழி வழங்கியுள்ளார். தனக்கு மீண்டும் வாக்களித்து ஆதரவளித்த டொராண்டோ மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இன்றும் அடுத்த நான்கு ஆண்டுகளும் டொராண்டோ மக்களுக்காக உழைக்கவும், அவர்களுக்குச் சேவை செய்யவும் ஒவ்வொரு தருணத்தையும் பயன்படுத்துவேன். எதிர்காலத்தைப் பற்றி யோசிப்பதை விட ஒரு நேரத்தில் ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாதம் எனப் படிப்படியாக இலக்குகளை நோக்கிப் பயணிப்போம்" என்று கூறியுள்ளார்.

அடுத்த மேயர் ஆட்சிக் காலத்தில் சொத்து வரியை பணவீக்க விகிதத்திற்கு உட்பட்டு மட்டுமே உயர்த்துவதாக உறுதியளித்தார். மேலும், கடந்த மூன்று ஆண்டுகளாக மேயராக இருந்த அனுபவத்தால் டொராண்டோ நகரின் நிதிநிலைமை பற்றித் தனக்குத் தெளிவாகத் தெரியும் என்று சுட்டிக்காட்டினார்.

"கடந்த 23 ஆண்டுகளில் முதல்முறையாகப் சர்வதேச கடன் மதிப்பீட்டில் நமது நகரம் சிறந்த தரத்தைப் பெற்றுள்ளது. எனவே, நகரின் பாதீடு எனக்கு நன்றாகத் தெரியும். வெளியே இருந்து எந்த அதிர்ச்சியும் வராது என்று நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டார்.

நகரில் வாழ்க்கைச் செலவு மிகவும் அதிகமாக உள்ளது என்பதை மக்கள் இந்தத் தேர்தலின் மூலம் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர் என்று கூறியுள்ளார்.

மளிகை பொருட்கள் மற்றும் அன்றாடத் தேவைகளுக்கான செலவுகள் அனைவருக்குமான சவாலாக உருவெடுத்துள்ளன. இதைக் கட்டுப்படுத்த டொராண்டோ நகராட்சியும் பிற அரசு நிர்வாகங்களும் இணைந்து செயல்பட வேண்டும் வலியுறுத்திய அவர், "நாம் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இணைந்து செயல்படும் போது தான் நாம் வலிமையடைகிறோம்" என்றார்.

டொராண்டோ மேயர் தேர்தலில் எதிர்த்துப் போட்டியிட்ட பிராட் பிராட்போர்டை வீழ்த்தி, 54 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று ஒலிவியா சௌ (Olivia Chow) மீண்டும் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 532,201 வாக்குகளைப் பெற்ற அவர், சுமார் 128,000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டுள்ளார். 
 

Leave a Reply